சங்கீதம் 105 : 1 (RCTA)
அல்லேலூயா! ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; அவர்தம் திருப்பெயரைச் சொல்லி வழிபடுங்கள்: எல்லா இனத்தாரும் அவருடைய செயல்களை அறியச் செய்யுங்கள்.
சங்கீதம் 105 : 2 (RCTA)
அவருக்கு இன்னிசை எழுப்புங்கள்; இசைக் கருவி மீட்டுங்கள்: அவர் செய்த வியத்தகு செயல்களையெல்லாம் பறைசாற்றுங்கள்.
சங்கீதம் 105 : 3 (RCTA)
அவரது திருப்பெயரை நினைத்துப் பெருமைப்படுங்கள்: ஆண்டவரைத் தேடுவோரின் உள்ளம் மகிழ்வதாக.
சங்கீதம் 105 : 4 (RCTA)
ஆண்டவரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்: அவரது திருமுகத்தை என்றும் தேடுங்கள்.
சங்கீதம் 105 : 5 (RCTA)
ஆண்டவருடைய ஊழியராகிய ஆபிரகாமின் வழித்தோன்றல்களே, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகிய யாக்கோபின் மக்களே,
சங்கீதம் 105 : 6 (RCTA)
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்: அவருடைய புதுமைகளையும் அவர் உரைத்த நீதித் தீர்ப்புகளையும் நினைவு கூருங்கள்.
சங்கீதம் 105 : 7 (RCTA)
ஆண்டவரே நம் கடவுள்: அவர் ஆட்சி உலகெங்கும் பரவியுள்ளது.
சங்கீதம் 105 : 8 (RCTA)
நம் உடன்படிக்கையை அவர் என்றென்னும் நினைவுகூர்கின்றார்: ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் தாம் அளித்த வாக்குறுதியை அவர் நினைவு கூர்கின்றார்.
சங்கீதம் 105 : 9 (RCTA)
ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையை அவர் மறக்கவில்லை ஈசாக்குக்கு அவர் இட்ட ஆணையை அவர் மறக்கவில்லை.
சங்கீதம் 105 : 10 (RCTA)
'கானான் நாட்டை உங்களுக்கு உரிமையாக்குவேன்' என்று சொல்லி,
சங்கீதம் 105 : 11 (RCTA)
யாக்கோபுக்கு அவர் தந்த உறுதியான நியமத்தை, இஸ்ராயேலுடன் அவர் செய்த நித்திய உடன்படிக்கையை அவர் மறக்கவில்லை.
சங்கீதம் 105 : 12 (RCTA)
அவர்கள் எண்ணிக்கையில் சிலராயிருந்த போதும், அச்சிலர் அந்நியராக இருந்த போதும்.
சங்கீதம் 105 : 13 (RCTA)
பற்பல இனத்தாரிடையே அவர்கள் அலைந்த போதும், நாடு நாடாய் அவர்கள் சுற்றித் திரிந்த போதும்.
சங்கீதம் 105 : 14 (RCTA)
யாரும் அவர்களைத் துன்புறுத்த அவர் விடவில்லை: அவர்களின் பொருட்டு அரசர்களைத் தண்டித்தார்.
சங்கீதம் 105 : 15 (RCTA)
நான் அபிஷுகம் செய்தவர்களைத் தொடாதீர்கள்: என் வாக்குரைப்போருக்குத் தீங்கு இழைக்காதீர்கள்" என்றுரைத்தார்.
சங்கீதம் 105 : 16 (RCTA)
நாட்டில் பஞ்சத்தை வரவழைத்தார்: உணவுப் பொருட்களனைத்தையும் எடுத்து விட்டார்.
சங்கீதம் 105 : 17 (RCTA)
ஆனால் அதற்கு முன், அடிமையாக விற்கப்பட்ட சூசையை அனுப்பி வைத்தார்.
சங்கீதம் 105 : 18 (RCTA)
அவருடைய கால்களுக்கோ விலங்குகள் இடப்பட்டன: அவருடைய கழுத்துக்கு இருப்புத்தளை இடப்பட்டது.
சங்கீதம் 105 : 19 (RCTA)
நாளடைவில் அவர் சொன்னது நிறைவேறியது: ஆண்டவருடைய வார்த்தை உண்மையென எண்பிக்கப்பட்டது.
சங்கீதம் 105 : 20 (RCTA)
அரசன் ஆளனுப்பி அவரை விடுதலை செய்தான்: நாட்டின் மன்னன் அவருக்கு விடுதலையளித்தான்.
சங்கீதம் 105 : 21 (RCTA)
தன் இல்லத்திற்கு அவரைத் தலைவராக்கினான்: தன் உடைமை அனைத்தின் மீதும் அவருக்கு அதிகாரமளித்தான்.
சங்கீதம் 105 : 22 (RCTA)
இங்ஙனம் சூசை தன் விருப்பம் போல் அரச அலுவலருக்கு அறிவு புகட்டவும், முதியோருக்கு ஞானத்தைக் கற்பிக்கவும் அரசன் அவரை நியமித்தான்.
சங்கீதம் 105 : 23 (RCTA)
அதன்பின் இஸ்ராயேல் மக்கள் எகிப்தில் நுழைந்தனர்: காம் நாட்டில் யாக்கோபின் இனத்தார் குடியேறினர்.
சங்கீதம் 105 : 24 (RCTA)
தம் மக்கள் பெரிதும் பெருகச் செய்தார்: எதிரிகளை விட அவர்களை வல்லவர்களாக்கினார்.
சங்கீதம் 105 : 25 (RCTA)
தம் மக்கள் மீது வெறுப்புண்டாகும் அளவுக்கு எதிரிகளின் மனத்தை மாற்றினார்: தம் ஊழியரிடம் அவர்கள் வஞ்சகம் காட்டச் செய்தார்.
சங்கீதம் 105 : 26 (RCTA)
அதன் பின் தம் ஊழியன் மோயீசனை அனுப்பினார்: தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.
சங்கீதம் 105 : 27 (RCTA)
அவர் சொன்ன செயல்களை அடையாளமாகச் செய்தனர்: காமின் நாட்டில் புதுமைகளைப் புரிந்தனர்.
சங்கீதம் 105 : 28 (RCTA)
அவர் இருளை அனுப்ப எங்கும் இருள் படர்ந்தது: ஆனால் எகிப்தியர் அவரது வார்த்தையை ஏற்கவில்லை.
சங்கீதம் 105 : 29 (RCTA)
நாட்டின் நீர் நிலைகளை இரத்தமாக மாற்றினார்: அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார்.
சங்கீதம் 105 : 30 (RCTA)
நாடெங்கும் தவளைகள் நிரம்பச் செய்தார்: அரச மாளிகையின் உள்ளறைகளுக்கும் அவை போகச் செய்தார்.
சங்கீதம் 105 : 31 (RCTA)
அவர் ஒரு வார்த்தை சொல்ல, ஈக்கள் படையெடுத்தன: எங்கும் பூச்சிகள் வந்து நிரம்பின.
சங்கீதம் 105 : 32 (RCTA)
மழைக்குப் பதிலாகக் கல் மழை பெய்யச் செய்தார்: இடியும் மின்னலும் எங்கும் உண்டாயிற்று.
சங்கீதம் 105 : 33 (RCTA)
அவர்களுடைய திராட்சைத் தோட்டங்களையும் அத்திமரங்களையும் முறியச் செய்தார்: மரங்களெல்லாம் சாய்ந்து விழுந்தன.
சங்கீதம் 105 : 34 (RCTA)
மீளவும் ஒரு வார்த்தை சொன்னார்: வெட்டுக்கிளிகளும் பூச்சிகளும் கணக்கின்றி எழுந்தன.
சங்கீதம் 105 : 35 (RCTA)
அவை நாட்டிலுள்ள செடி கொடிகளையெல்லாம் அரித்து விட்டன: வயல்களில் விளைந்த விளைச்சல் யாவற்றையும் தின்று விட்டன.
சங்கீதம் 105 : 36 (RCTA)
நாட்டிலுள்ள முதற் போறான யாவரையும் வதைத்தார்: அவர்கள் ஈன்ற தலைப் பேறான மக்கள் யாவரையும் வதைத்தொழித்தார்.
சங்கீதம் 105 : 37 (RCTA)
வெள்ளியோடும் பொன்னோடும் அவர்கள் வெளியேறச் செய்தார். அவர்களின் கோத்திரங்களில் வலிமையற்றவர் எவருமில்லை.
சங்கீதம் 105 : 38 (RCTA)
அவர்கள் வெளியேறுகையில் எகிப்தியர்கள் அகமகிழ்ந்தனர்: ஏனெனில், அவர்கள் பொருட்டுப் பேரச்சம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.
சங்கீதம் 105 : 39 (RCTA)
அவர்களுக்கு நிழல் தர மேகத்தைப் பரப்பினார்: இரவில் ஒளி தர நெருப்பைத் தந்தார்.
சங்கீதம் 105 : 40 (RCTA)
அவர்கள் உணவு கோர, காடைகள் வரச் செய்தார்: வானினின்று வந்த உணவால் அவர்களுக்கு நிறைவளித்தார்.
சங்கீதம் 105 : 41 (RCTA)
அவர் பாறையைப் பிளக்கத் தண்ணீர் புறப்பட்டது: அது பாலைவெளியிலே ஆறு போல் ஓடியது.
சங்கீதம் 105 : 42 (RCTA)
ஏனெனில், தம்முடைய திருவாக்கை அவர் நினைவு கூர்ந்தார்: தம் ஊழியன் ஆபிரகாமுக்குச் சொன்னதை அவர் மறக்கவில்லை.
சங்கீதம் 105 : 43 (RCTA)
பெருமகிழ்ச்சியிடையே தம் மக்களை வெளியேற்றினார்: தாம் தேர்ந்தெடுத்தவர்களை அக்களிப்பிடையில் கூட்டிச் சென்றார்.
சங்கீதம் 105 : 44 (RCTA)
வேற்றினத்தார் நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தார். அந்நாட்டினரின் செல்வங்களை அவர்கள் கைப்பற்றச் செய்தார்.
சங்கீதம் 105 : 45 (RCTA)
அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், அவரது சட்டத்தின்படி ஒழுகவுமே இப்படிச் செய்தார். அல்லேலூயா.
❮
❯