சங்கீதம் 104 : 1 (RCTA)
நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக! ஆண்டவரே, என் இறைவா, நீர் எத்துணை உயர்ந்தவர்!
சங்கீதம் 104 : 2 (RCTA)
மாண்பும் மகத்துவமும் நீர் அணிந்திருக்கிறீர்: ஒளியை நீர் போர்வையாகக் கொண்டுள்ளீர்; வானத்தை நீர் கூடாரம் போல் விரித்திருக்கிறீர்.
சங்கீதம் 104 : 3 (RCTA)
வெள்ளத்தின்மேல் உம் உறைவிடத்தை அமைத்திருக்கிறீர்; மேகங்களை நீர் தேராகக் கொண்டிருக்கிறீர்: காற்றை நீர் இறக்கை எனக் கொண்டு செல்கிறீர்.
சங்கீதம் 104 : 4 (RCTA)
காற்றே உம் தூதர்கள்: எரியும் நெருப்பே உம் ஊழியர்.
சங்கீதம் 104 : 5 (RCTA)
பூமியை நீர் அடித்தளத்தின்மேல் அமைத்தீர்: அது எந்நாளும் அசையவே அசையாது.
சங்கீதம் 104 : 6 (RCTA)
கடல்களை அதற்கு உடையெனத் தந்திருக்கிறீர்: வெள்ளப்பெருக்கு மலைகளையும் மூடியிருக்கும்படி செய்தீர்.
சங்கீதம் 104 : 7 (RCTA)
நீர் கண்டிக்கவே அவை விலகி ஓடின: இடிபோல் நீர் முழங்க அவை அச்சத்தால் மயங்கின.
சங்கீதம் 104 : 8 (RCTA)
நீர் நியமித்த இடத்தில் மலைகள் உயர்ந்து எழுந்தன: பள்ளத்தாக்குகள் பணிந்து இறங்கின.
சங்கீதம் 104 : 9 (RCTA)
நீர் குறித்த எல்லையை அவைகள் கடக்காமல் இருக்கச் செய்தீர்: மீளவும் அவை பூமியை மூழ்கடிக்காதபடி இவ்வாறு செய்தீர்.
சங்கீதம் 104 : 10 (RCTA)
நீரூற்றுகள் ஆறுகளாய்ப் பெருக்கெடுக்கக் கட்டளை இடுகிறீர்: அலைகளிடையே அவைகளை ஓடச் செய்கிறீர்.
சங்கீதம் 104 : 11 (RCTA)
வயல்வெளிகளில் வாழும் விலங்குகள் தாகம் தீர்க்கத் தண்ணீர் கொடுத்தீர்: காட்டுக் கழுதைகள் தங்கள் தாகத்தை அங்கே தான் தீர்த்து கொள்கின்றன.
சங்கீதம் 104 : 12 (RCTA)
அவற்றினருகே தான் வானத்துப் பறவைகள் குடியிருக்கின்றன: மரக்கிளைகளிடையே இன்னிசை எழுப்புகின்றன.
சங்கீதம் 104 : 13 (RCTA)
தம் உள்ளத்திடத்திலிருந்து மலைகள் மீது நீர் பாயச் செய்கிறீர்: உம் செயல்களின் பயனால் மாநிலம் நிறைவுறுகின்றது.
சங்கீதம் 104 : 14 (RCTA)
கால்நடைகள் உண்ணப் புல் முளைக்கச் செய்கிறீர்: மனிதருக்குப் பயன்படப் பயிர் பச்சைகள் வளரச் செய்கிறீர். இவ்வாறு நிலத்தினின்று மனிதர் உணவுப் பொருள் விளையச் செய்யவும்.
சங்கீதம் 104 : 15 (RCTA)
மனிதன் மகிழ்ச்சியுற, உள்ளம் மகிழச் செய்யும் திராட்சை இரசம் உண்டாகச் செய்யவும் முடிந்தது: முகத்துக்கு களை தரும் எண்ணெயும், உள்ளத்திற்கு உரம் தரும் உணவையும் அவன் விளையச் செய்கிறான்.
சங்கீதம் 104 : 16 (RCTA)
ஆண்டவர் நட்ட மரங்களுக்கு நிறைய நீர் கிடைக்கிறது: லீபானில் அவர் நட்ட கேதுரு மரங்கள் செழித்து வளருகின்றன.
சங்கீதம் 104 : 17 (RCTA)
அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன: தேவதாரு மரங்கள் கொக்குகளின் குடியிருப்பாயிருக்கின்றன.
சங்கீதம் 104 : 18 (RCTA)
உயர்ந்த மலைகள் மலை ஆடுகளுக்கும், கல் மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம் தருகின்றன.
சங்கீதம் 104 : 19 (RCTA)
காலத்தைக் கணிக்க நிலவை நீர் அமைத்தீர்: கதிரவன் தான் மறையும் நேரத்தை அறிந்திருக்கிறான்.
சங்கீதம் 104 : 20 (RCTA)
இருள் படர்ந்து இரவு தோன்றச் செய்கிறீர்: அப்போது காட்டிலுள்ள விலங்குகளெல்லாம் நடமாடும்.
சங்கீதம் 104 : 21 (RCTA)
சிங்கக் குட்டிகள் உணவைத் தேடியலையும்: கடவுளிடமிருந்து தம் உணவை எதிர்பார்க்கும்.
சங்கீதம் 104 : 22 (RCTA)
காலையில் கதிரவன் எழ, அவை தம் இருப்பிடங்களுக்குப் போய் மறைந்து கொள்கின்றன.
சங்கீதம் 104 : 23 (RCTA)
அப்போது மனிதன் மாலை மட்டும் வேலை செய்யப் புறப்படுகிறான்.
சங்கீதம் 104 : 24 (RCTA)
ஆண்டவரே, உம் வேலைப்பாடுகள், எத்தனை, எத்தனை! அனைத்தையும் நீர் ஞானத்தோடு செய்து முடித்தீர்: உம் படைப்புகளால் நிறைந்துள்ளது வையகம்.
சங்கீதம் 104 : 25 (RCTA)
இதோ, பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்: அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.
சங்கீதம் 104 : 26 (RCTA)
அவற்றில் கப்பல்கள் ஓடுகின்றன; அவற்றில் விளையாடத் திமிலங்களையும் நீர் படைத்தீர்.
சங்கீதம் 104 : 27 (RCTA)
இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன: தக்க காலத்தில் உணவளிப்பீர் என்று எதிர்பார்க்கின்றன.
சங்கீதம் 104 : 28 (RCTA)
நீர் கொடுக்க, அவை பெற்றுக்கொள்கின்றன: நீர் உமது கையைத் திறக்க அவை நலன்களால் நிறைவுறுகின்றன.
சங்கீதம் 104 : 29 (RCTA)
உம் முகத்தை நீர் மறைத்துக் கொண்டால், அவை தத்தளிக்கும். அவற்றின் மூச்சை நீர் நிறுத்தி விட்டால் அவை மடிந்து மறுபடியும் மண்ணாகி விடும்.
சங்கீதம் 104 : 30 (RCTA)
உமது ஆவியை நீர் அனுப்பினால் அவை படைக்கப்படும்: உலகனைத்தும் புத்துயிர் பெறும்.
சங்கீதம் 104 : 31 (RCTA)
ஆண்டவருடைய மாட்சிமை என்றென்றும் விளங்குவதாக; தம் படைப்புகளைக் குறித்து ஆண்டவர் மகிழ்வாராக.
சங்கீதம் 104 : 32 (RCTA)
பூமியின் மீது அவர் தம் பார்வையைத் திருப்ப, அது அதிரும்: மலைகளை அவர் தொட, அவை புகை கக்கும்.
சங்கீதம் 104 : 33 (RCTA)
உயிருள்ள வரை நான் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுவேன்: வாழ்நாளெல்லாம் என் இறைவனுக்குப் புகழ் பாடுவேன்.
சங்கீதம் 104 : 34 (RCTA)
என் புகழுரை அவருக்கு இனியதாய் இருப்பதாக: நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.
சங்கீதம் 104 : 35 (RCTA)
பாவிகள் பாரினின்று எடுபடுவார்களாக; தீயோர்கள் இனி இல்லாதொழிவார்களாக: நெஞ்சே ஆண்டவரை நீ வாழ்த்துவாயாக!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35