சங்கீதம் 103 : 1 (RCTA)
நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக: என் அகத்துள்ளதெல்லாம் அவரது திருப்பெயரை வாழ்த்துவதாக!
சங்கீதம் 103 : 2 (RCTA)
நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக: அவர் செய்த நன்மைகளையெல்லாம் மறவாதே.
சங்கீதம் 103 : 3 (RCTA)
அவர் உன் பாவங்களை எல்லாம் மன்னிக்கிறார்: உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
சங்கீதம் 103 : 4 (RCTA)
உன் உயிரை அழிவினின்று மீட்கிறார்: அருளையும் இரக்கத்தையும் உனக்கு முடியாகச் சூட்டுகிறார்.
சங்கீதம் 103 : 5 (RCTA)
நன்மைகளால் உன் வாழ்வை நிறைவுபடுத்துகிறார்: கழுகுகளின் இளமையைப் போல் உன் இளமையைப் புதுப்பிக்கிறார்.
சங்கீதம் 103 : 6 (RCTA)
நீதிமிக்க செயல்களைப் புரிகிறார் ஆண்டவர்: துன்புற்றோர் யாவருக்கும் நீதி வழங்குகிறார்.
சங்கீதம் 103 : 7 (RCTA)
மோயீசனுக்குத் தம் வழிகளை வெளிப்படுத்தினார்: இஸ்ராயேல் மக்களுக்குத் தம் செயல்களை விவரிக்கச் செய்தார்.
சங்கீதம் 103 : 8 (RCTA)
ஆண்டவர் அன்பும் அருளும் மிக்கவர்: சினங்கொள்ளத் தாமதிப்பவர்; சாந்தமுடையவர்.
சங்கீதம் 103 : 9 (RCTA)
ஓயாமல் கடிந்து கொள்பவரல்லர்; எந்நேரமும் கோபங் காட்டுபவரல்லர்.
சங்கீதம் 103 : 10 (RCTA)
நம்முடைய பாவங்களுக்கு ஏற்றபடி நடத்துவதில்லை: நம் குற்றங்களுக்குத் தக்கபடி நம்மைத் தண்டிப்பதில்லை.
சங்கீதம் 103 : 11 (RCTA)
ஏனெனில், வானுலகம் பூவுலகிற்கு எவ்வளவு உயர்ந்துள்ளதோ, அவ்வளவுக்கு அவர் தமக்கு அஞ்சி நடப்பவர்களுக்குத் தயவு காண்பிக்கிறார்.
சங்கீதம் 103 : 12 (RCTA)
கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்குமிடையே எவ்வளவு தொலையுள்ளதோ, அவ்வளவு தொலைவுக்கு அவர் நம் பாவங்களை நம்மிடமிருந்து அகற்றி விடுகிறார்.
சங்கீதம் 103 : 13 (RCTA)
தந்தை தம் மக்களுக்கு அன்பு காட்டுவது போல, ஆண்டவர் தமக்கு அஞ்சுவோருக்கு இரக்கம் காட்டுகிறார்.
சங்கீதம் 103 : 14 (RCTA)
ஏனெனில், அவர் நம்முடைய நிலைமையை நன்றாய் அறிந்திருக்கிறார்: நாம் தூசிக்குச் சமம் என்பது அவருக்குத் தெரியாமலில்லை.
சங்கீதம் 103 : 15 (RCTA)
மனிதனின் வாழ்நாள் புல்லைப் போன்றது: வயல்வெளிப் பூக்களைப் போல் அவன் மலர்கிறான்;
சங்கீதம் 103 : 16 (RCTA)
காற்றடித்ததும் அது வதங்கி விடுகிறது: இருக்கிற இடம் தெரியாமல் போய் விடுகிறது.
சங்கீதம் 103 : 17 (RCTA)
ஆண்டவருடைய இரக்கமோ அவருக்கு அஞ்சி நடப்போர் மீது என்றென்றும் நிலைநிற்கும்: அவருடைய நீதியோ தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும்.
சங்கீதம் 103 : 18 (RCTA)
அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போர் மேலும், கட்டளைகளைக் கருத்தில் கொண்டு அவற்றைப் பின்பற்றுவோர் மேலும் அவர் நீதி நிலைகொள்ளும்.
சங்கீதம் 103 : 19 (RCTA)
ஆண்டவர் வானுலகில் தமது அரியணையை ஏற்படுத்தினார்: அனைத்தின் மீதும் அவர் ஆட்சி புரிகிறார்.
சங்கீதம் 103 : 20 (RCTA)
வானதூதர்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்: ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய சொற்படி நடக்கும் ஆண்டவரின் வல்லமையுள்ள தூதர்களே, அவரை வாழ்த்துங்கள்.
சங்கீதம் 103 : 21 (RCTA)
ஆண்டவருடைய திருவுளப்படி நடக்கும் அவருடைய ஊழியர்களே, அவரைப் போற்றுங்கள்: அவருடைய சேனைகளே, அவரை வாழ்த்துங்கள்!
சங்கீதம் 103 : 22 (RCTA)
ஆண்டவருடைய படைப்புகளே, அவருடைய ஆளுகை செல்லுகிற இடமெல்லாம் அவரை வாழ்த்துங்கள்: நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக!
❮
❯