நீதிமொழிகள் 24 : 1 (RCTA)
தீய மனிதர்களைக் கண்டு பொறாமைப்படாதே. அவர்களோடு இருக்கவும் விரும்பாதே.
நீதிமொழிகள் 24 : 2 (RCTA)
ஏனென்றால், அவர்கள் மனம் கொள்ளையைச் சிந்திக்கின்றது. அவர்களுடைய உதடுகளும் வஞ்சனைகளைப் பேசுகின்றன.
நீதிமொழிகள் 24 : 3 (RCTA)
ஞானத்தால் வீடு கட்டப்படுகிறது. விவேகத்தால் அது உறுதிப்படுத்தப்படும்.
நீதிமொழிகள் 24 : 4 (RCTA)
அறிவினால் அவ்வீட்டின் அறைகள் விலை உயர்ந்தனவும், மிகவும் அலங்காரமுள்ளனவுமான எவ்விதப் பொருளாலும் நிறைக்கப்படும்.
நீதிமொழிகள் 24 : 5 (RCTA)
ஞானமுள்ள மனிதன் வல்லவனாய் இருக்கிறான். கற்றறிந்த மனிதன் துணிவும் பேராற்றலும் வாய்ந்தவனாக இருக்கிறான்.
நீதிமொழிகள் 24 : 6 (RCTA)
ஏனென்றால், அவன் ஒழுங்குடன் போரை நடத்துவான். எங்கே அதிக யோசனைகள் உண்டோ அங்கே பாதுகாப்பும் உண்டு.
நீதிமொழிகள் 24 : 7 (RCTA)
மதியீனனுக்கு ஞானம் எட்டா உயரமானது. சபை வாயிலில் அவன் வாயைத் திறவான்.
நீதிமொழிகள் 24 : 8 (RCTA)
தீமையைச் செய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் எனப்படுவான்.
நீதிமொழிகள் 24 : 9 (RCTA)
மதியீனனின் சிந்தனை பாவமாகும். புறங்கூறுபவன் மனிதருக்கு வெறுப்பைத் தருவான்.
நீதிமொழிகள் 24 : 10 (RCTA)
துயர நாளில் சோர்ந்துபோய் அவ நம்பிக்கை கொள்வாயானால் உன் திடன் குறைந்துபோகும்.
நீதிமொழிகள் 24 : 11 (RCTA)
சாவுக்குக் கூட்டிப்போகப் படுகிறவர்களை விடுவி. நரகத்திற்கு இழுக்கப்படுகிறவர்களை மீட்கவும் நீ பின்வாங்காதே.
நீதிமொழிகள் 24 : 12 (RCTA)
எனக்கு ஆற்றல் போதாது என்று நீ சொல்வாயானால், இதயத்திலுள்ளதைக் காண்கிறவர் அறிகிறார்; உன் ஆன்மாவின் காவலரை ஒன்றும் ஏமாற்றுவதில்லை. அவர் அவனவன் செயல்களுக்குத் தக்கபடி பதிலளிக்கிறார்.
நீதிமொழிகள் 24 : 13 (RCTA)
என் மகனே, தேன் உன் வாய்க்கு இனிப்பாய் இருக்கிறது; அதை உண். தேனென்றால் உன் தொண்டைக்கு மிகவும் இனிமையாம்.
நீதிமொழிகள் 24 : 14 (RCTA)
அவ்வாறே உன் ஆன்மாவுக்கு ஞானத்தின் போதகமுமாம். அதை நீ கண்டுபிடித்தால், (உன்) முடிவில் உனக்கு நம்பிக்கை உண்டாகும்; உன் நம்பிக்கையும் வீணாகாது.
நீதிமொழிகள் 24 : 15 (RCTA)
ஓ தீயவனே, நீதிமானின் வீட்டில் கண்ணிவையாதே; அவனுடைய இளைப்பாற்றியை நீ குலையாதே.
நீதிமொழிகள் 24 : 16 (RCTA)
ஏனென்றால், நீதிமான் ஏழு முறை விழுந்தாலும் எழுந்திருப்பான். அக்கிரமிகளோ தீமையில் விழுந்து அழிவார்கள்.
நீதிமொழிகள் 24 : 17 (RCTA)
உன் பகைவன் விழும்போது நீ மகிழ வேண்டாம். அவன் அழிவுறும்போது நீ மனத்தில் அக்களிக்க வேண்டாம்.
நீதிமொழிகள் 24 : 18 (RCTA)
(ஏனென்றால்) ஆண்டவர் அதைக்கண்டு, உன்மீது வருத்தமுற்று, அவன்மேல் வைத்த கோபத்தை அகற்றி, அதை உன்மேல் திருப்பினாலும் திருப்புவார்.
நீதிமொழிகள் 24 : 19 (RCTA)
மகா தீயவரோடு பிடிவாதம் செய்யாதே. அக்கிரமிகள்மேல் பொறாமை கொள்ளாதே.
நீதிமொழிகள் 24 : 20 (RCTA)
ஏனென்றால், எதிர்காலத்தில் தீயோருக்கு நம்பிக்கை இராது. அக்கிரமிகளுடைய விளக்கும் அவிக்கப்படும்.
நீதிமொழிகள் 24 : 21 (RCTA)
என் மகனே, ஆண்டவருக்கும் அரசனுக்கும் அஞ்சியிரு. புறங்கூறுபவர்களுடன் கலந்து கொள்ளாதே.
நீதிமொழிகள் 24 : 22 (RCTA)
ஏனென்றால், திடீரென அவர்களுக்குக் கேடு நேரிடும். இவருடைய அழிவையும் அறிந்தவன் யார் ?
நீதிமொழிகள் 24 : 23 (RCTA)
இதுவும் ஞானிகள் கற்றுக் கொடுப்பார்கள். அதாவது: நியாயத் தீர்ப்பில் ஒருதலைச் சார்பு கொள்தல் நன்றன்று.
நீதிமொழிகள் 24 : 24 (RCTA)
அக்கிரமியை நோக்கி: நீ நீதிமான் என்று (தவறாய்ச்) சொல்கிறவர்கள் மக்களால் சபிக்கப்படுவார்கள்; அவன் குலத்தினர் அவர்களை வெறுப்பார்கள்.
நீதிமொழிகள் 24 : 25 (RCTA)
அவனைக் கண்டிக்கிறவர்கள் புகழப்படுவார்கள்; அவர்கள்மேல் ஆசியும் வரும்.
நீதிமொழிகள் 24 : 26 (RCTA)
நேர்மையான சொற்களை மொழிகிறவனுடைய உதடுகளை (மக்கள்) முத்தமிடுகிறார்கள்.
நீதிமொழிகள் 24 : 27 (RCTA)
நீ வெளியில் உன் வேலையைத் தயாராக்கி உன் வயலையும் பண்படுத்து. பின்பு நீ உன் வீட்டைக் கட்டலாம்.
நீதிமொழிகள் 24 : 28 (RCTA)
அக்கிரமமாய் நீ உன் அயலானுக்கு விரோதச் சாட்சியாய் இராதே. எவனையும் உன் உதடுகளால் ஏமாற்றாதே.
நீதிமொழிகள் 24 : 29 (RCTA)
எனக்குச் செய்ததுபோல் அவனுக்கும் செய்வேன் என்று கூறாதே. அவனவன் செயலுக்குத் தக்கபடியே (நான்) பதிலளிப்பேன்.
நீதிமொழிகள் 24 : 30 (RCTA)
சோம்பேறியான மனிதனின் வயல் வழியாயும், மதிகெட்ட மனிதனின் கொடி முந்திரித் தோட்டத்தின் வழியாயும் நடந்து சென்றேன்.
நீதிமொழிகள் 24 : 31 (RCTA)
இதோ, எங்கே பார்த்தாலும் காஞ்சொறி நிறைந்து முட்கள் செறிந்து மூடியிருந்தன. அன்றியும், கற்சுவரும் அழிந்து போயிருந்தது.
நீதிமொழிகள் 24 : 32 (RCTA)
நான் அதைக் கண்டபோது என் இதயத்தில் பதித்து, உதாரணத்தால் படிப்பினையை அடைந்து கொண்டேன்.
நீதிமொழிகள் 24 : 33 (RCTA)
கொஞ்சம் தூங்குவேன்; சிறிது தூங்கி விழுவேன்; இனைப்பாறச் சற்றே கைகட்டுவேன் என்பாயோ ?
நீதிமொழிகள் 24 : 34 (RCTA)
அப்போது வறுமை ஓட்டக்காரன் போலும், பிச்சை ஆயுதம் தாங்கிய மனிதன் போலும் உன்னிடம் வரும்.
❮
❯