நீதிமொழிகள் 20 : 1 (RCTA)
மதுபானம் காமத்தைத் தூண்டக்கூடிய பொருளாம். குடிவெறி குழப்பத்தை உண்டாக்குவதாம். இவற்றில் நாட்டம் கொள்பவன் எவனும் ஞானியாய் இரான்.
நீதிமொழிகள் 20 : 2 (RCTA)
சிங்கத்தின் முழக்கம் எப்படியோ அப்படியே அரசனது பயங்கரமும். அவனைக் கோபமூட்டுகிறவன் தன் ஆன்மாவுக்கு விரோதமாய்ப் பாவம் செய்கிறான்.
நீதிமொழிகள் 20 : 3 (RCTA)
சச்சரவுகளுக்கு உட்படாமல் இருப்பது மனிதனுக்கு மகிமையாம். ஆனால் மதியீனர் அனைவரும் சச்சரவுகளில் கலந்து கொள்கிறார்கள்.
நீதிமொழிகள் 20 : 4 (RCTA)
குளிரின் நிமித்தம் சோம்பேறி உழ மாட்டான். (ஆகையால்) கோடைக் காலத்தில் அவன் பிச்சை எடுப்பான்; அவனுக்கு ஒன்றும் கொடுக்கப்படவு மாட்டாது.
நீதிமொழிகள் 20 : 5 (RCTA)
ஆழமான நீர்போல ஞானம் மனிதனின் இதயத்தில் இருக்கின்றது. இருந்தும், அறிவுடையான் அதனைக் கண்டெடுப்பான்.
நீதிமொழிகள் 20 : 6 (RCTA)
பல மனிதர் இரக்கமுள்ளவர்கள் எனப்படுகிறார்கள். ஆனால், பிரமாணிக்கமுள்ள மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார் ?
நீதிமொழிகள் 20 : 7 (RCTA)
நேர்மையாய் நடக்கும் நீதிமான் தன் பிறகே பேறு பெற்ற மக்களை விட்டுப் போவான்.
நீதிமொழிகள் 20 : 8 (RCTA)
நீதி அரியணையில் அமர்கிற அரசன் தன் பார்வையாலேயே தீமை அனைத்தையும் அகற்றுகிறான்.
நீதிமொழிகள் 20 : 9 (RCTA)
என் இதயம் தூய்மையானது; நான் பாவத்தினின்று குற்றமற்றவனாய் இருக்கிறேன் என்று சொல்லக் கூடியவன் யார் ?
நீதிமொழிகள் 20 : 10 (RCTA)
மாறுபாடுள்ள நிறை, குறையுள்ள அளவு ஆகிய இவ்விரண்டும் கடவுளால் வெறுக்கப்படுவனவாம்.
நீதிமொழிகள் 20 : 11 (RCTA)
தன் செயல்கள் பரிசுத்தமும் நேர்மையுமானவையோ என்று ஒரு சிறுவன் தன் குணங்குறைகளால் அறியப்படுகிறான்.
நீதிமொழிகள் 20 : 12 (RCTA)
கேட்கிற செவி, பார்க்கிற கண் ஆகிய இவ்விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.
நீதிமொழிகள் 20 : 13 (RCTA)
நீ வறுமையால் வதைக்கப்படாதபடிக்கு அதிகமாய் உறங்க விரும்பாதே. விழித்திரு; (அப்போது) அப்பத்தால் நிறைவு அடைவாய்.
நீதிமொழிகள் 20 : 14 (RCTA)
கொள்வோன் எவனும்: உதவாதது, உதவாதது என்கிறான்; ஆனால், அப்பால் அகன்றபின் அதைப் புகழ்ந்து கொள்கிறான்.
நீதிமொழிகள் 20 : 15 (RCTA)
பொன்னும் பல முத்துகளும் இருப்பினும், ஞானியின் உதடுகளே விலை பெற்ற அணியாம்.
நீதிமொழிகள் 20 : 16 (RCTA)
அன்னியனுக்குப் பிணையாய் நின்றவனின் ஆடையை எடுத்துக் கொள். அன்னியர்களுக்காகவும் அவனிடம் பிணையை வாங்கிக்கொள்.
நீதிமொழிகள் 20 : 17 (RCTA)
வஞ்சகத்தின் அப்பம் மனிதனுக்குச் சுவையுள்ளதாய் இருக்கின்றது; ஆனால், பின்பு அவன் வாய் போடிக்கற்களால் நிறையும்.
நீதிமொழிகள் 20 : 18 (RCTA)
சிந்தனைகள் ஆலோசனைகளால் உறுதிப்படுகின்றன. போர்களையும் விசாரணைக்குப் பின்னரே நடத்த வேண்டும்.
நீதிமொழிகள் 20 : 19 (RCTA)
இரகசியத்தையும் வெளியாக்கி, வஞ்சகமாய் நடந்து, தன் உதடுகளையும் அகலத் திறக்கிறவனுடன் நீ பழக்கம் வைத்துக்கொள்ளாதே.
நீதிமொழிகள் 20 : 20 (RCTA)
தன் தந்தையையும் தாயையும் சபிக்கிறவனுடைய விளக்கு இருளில் அவிக்கப்படும்.
நீதிமொழிகள் 20 : 21 (RCTA)
தொடக்கத்தில் துரிதமாய்ச் சம்பாதிக்கப்படுகிற சொத்து இறுதியில் ஆசி அற்றதாகப் போகும்.
நீதிமொழிகள் 20 : 22 (RCTA)
தீமைக்குத் தீமை செய்வேன் என்று சொல்லாதே. ஆண்டவரை நம்பிக் காத்திரு. அவரன்றோ உன்னைக் காப்பார்!
நீதிமொழிகள் 20 : 23 (RCTA)
குறையும் எடை ஆண்டவர்பால் வெறுப்புக்குள்ளதாம். கள்ளத் தராசும் நல்லதன்று.
நீதிமொழிகள் 20 : 24 (RCTA)
மனிதனுடைய அடிச்சுவடுகள் ஆண்டவரால் நடத்தப்படுகின்றன. ஆனால், மனிதரில் எவன் தன் கதியைக் கண்டுபிடிக்கக் கூடியவன் ?
நீதிமொழிகள் 20 : 25 (RCTA)
பரிசுத்தவான்களை விழுங்குவதும், தன் நேர்ச்சைகளைத் தட்டிக்கழிப்பதும் மனிதனுக்கு அழிவையே தரும்.
நீதிமொழிகள் 20 : 26 (RCTA)
ஞானமுள்ள அரசன் தீயோருக்குத் தண்டனை விதிக்கிறான். (தண்டனையாகத்) தன் தேரின் கீழே அவர்களை நசுக்கி விடுவான்.
நீதிமொழிகள் 20 : 27 (RCTA)
மனிதனிடமுள்ள ஆன்மா அவனுடைய உள்ளத்தின் இரகசியங்களை யெல்லாம் சோதிப்பதற்கு ஆண்டவரால் படைக்கப்பட்ட விளக்காம்.
நீதிமொழிகள் 20 : 28 (RCTA)
இரக்கமும் உண்மையும் அரசனைப் பாதுகாக்கின்றன. அவன் அரியணையும் சாந்தத்தால் உறுதிப்படுகின்றது.
நீதிமொழிகள் 20 : 29 (RCTA)
வாலிபர்களின் மகிழ்ச்சியே அவர்களுடைய பலமாம். கிழவர்களுடைய மகிமை அவர்களுடைய நரைத் தலையேயாம்.
நீதிமொழிகள் 20 : 30 (RCTA)
காயத்தின் தழும்பு தீமைகளை அகற்றும். கசையடி உள் உயிரைக் குணப்படுத்தும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30

BG:

Opacity:

Color:


Size:


Font: