நீதிமொழிகள் 18 : 1 (RCTA)
தன் நண்பனை விட்டுப் பிரிய விரும்புகிறவன் சமயந்தேடுவான். அவன் எக்காலத்தும் நிந்தைக்குரியனாய் இருக்கிறான்.
நீதிமொழிகள் 18 : 2 (RCTA)
மதிகெட்டவன் மனத்தின் இச்சையின்படி நீ பேசாவிடில் அவன் விவேகத்தின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளான்.
நீதிமொழிகள் 18 : 3 (RCTA)
அக்கிரமி பாவப் பாதாளத்தின் அடியில் வந்தபின் நிந்தனைக்கு ஆளாவான். அதனால் அவமானமும் வெட்கமும் அவனைப் பின் தொடர்கின்றன.
நீதிமொழிகள் 18 : 4 (RCTA)
மனிதனின் வாயினின்று (புறப்படுகிற) வார்த்தைகள் ஆழமான நீரைப் (போலாம்). ஞான ஊற்று பெருகிப் பாயும் அருவியைப் (போலாம்).
நீதிமொழிகள் 18 : 5 (RCTA)
உண்மைக்கு விரோதமான தீர்ப்புச் சொல்வதற்காக, தீயவன் காரியத்திலே ஒருதலைச் சார்பு கொள்தல் நன்றன்று.
நீதிமொழிகள் 18 : 6 (RCTA)
மதிகெட்டவனின் உதடுகள் சச்சரவுகளில் ஈடுபடுகின்றன. அவன் வாயும் சண்டையை மூட்டுகின்றது.
நீதிமொழிகள் 18 : 7 (RCTA)
மதி கெட்டவனின் பேச்சு அவனுக்கு நட்டம் விளைவிக்கும். அவன் உதடுகளால் அவனுடைய ஆன்மாவிற்கு அழிவு நேரிடும்.
நீதிமொழிகள் 18 : 8 (RCTA)
இரட்டை நாக்குள்ளவனின் வார்த்தைகள் நேர்மையானவைபோல் தோன்றும். அவை மனத்துள்ளே நுழைந்து செல்கின்றன. சோம்பேறி துன்பத்திற்குப் பயப்படுவான். ஆண்மையற்றோர் பசி அடைவார்கள்.
நீதிமொழிகள் 18 : 9 (RCTA)
தன் வேலையில் சோம்பலும் அசட்டையுமாய் இருக்கிறவன் தன் வேலையைக் கெடுக்கிறவனுடைய சகோதரனாம்.
நீதிமொழிகள் 18 : 10 (RCTA)
ஆண்டவரின் திருப்பெயர் மிகவும் வலுவுள்ள கோபுரமாம். நீதிமான் அதனிடம் ஓடுகிறான். அதனால் அவன் உயர்த்தவும் படுவான்.
நீதிமொழிகள் 18 : 11 (RCTA)
செல்வம் படைத்தோனின் பொருள் அவனுடைய பலத்தின் நகரமும், அவனைச்சுற்றிலுமுள்ள பலமான மதிலும் போலாம்.
நீதிமொழிகள் 18 : 12 (RCTA)
தாழ்வு வருமுன் மனிதன் தன் மனத்தில் செருக்குக் கொள்வான். மகிமைக்கு முன்னே தாழ்மை வருகின்றது.
நீதிமொழிகள் 18 : 13 (RCTA)
வினவுமுன் மறுமொழி சொல்லுகிறவன் தன்னை மதியீனனாகவும், அவமானத்திற்கு உகந்தவனாகவும் காட்டிக்கொள்கிறான்.
நீதிமொழிகள் 18 : 14 (RCTA)
மனிதனுடைய துணிவு அவனுடைய பலவீனத்தைத் தாங்குகின்றது. ஆனால், கோபத்திற்குச் (சார்பான) மனத்தைச் சகிப்பவன் யார் ?
நீதிமொழிகள் 18 : 15 (RCTA)
விவேகமான அறிவு ஞானத்தை அளிக்கும். ஞானிகளோ போதனைக்குச் செவி சாய்க்கிறார்கள்.
நீதிமொழிகள் 18 : 16 (RCTA)
மனிதனின் கொடைகள் அவன் வழியை அகலமாக்கி, அரசனின் முன்பாக அவனுக்கு இடத்தை உண்டாக்குகின்றன.
நீதிமொழிகள் 18 : 17 (RCTA)
நீதிமான் முதற்கண் தன்னையே குற்றம் சாட்டுகிறான். அவன் நண்பன் வந்து அவனைச் சோதித்தறிவான்.
நீதிமொழிகள் 18 : 18 (RCTA)
திருவுளச்சீட்டு பிடிவாதங்களை அடக்குகின்றது. அது வல்லவர்கள் மத்தியிலுங்கூட நியாயந் தீர்க்கின்றது.
நீதிமொழிகள் 18 : 19 (RCTA)
சகோதரனால் உதவி பெறுகிற சகோதரன் வலுப்பெற்ற நகரம் போலாம். (அவர்களுடைய) தீர்ப்புகளும் நகரவாயில்களின் தாழ்ப்பாள் போலாம்.
நீதிமொழிகள் 18 : 20 (RCTA)
மனிதனுடைய வாயின் பலனால் அவன் வயிறு நிறையும். தன் உதடுகளிலிருந்து புறப்படும் வார்த்தைகளால் அவன் நிறைவு கொள்வான்.
நீதிமொழிகள் 18 : 21 (RCTA)
சாவும் வாழ்வும் நாவிலிருந்தே (விளைகின்றன). அதை நேசிக்கிறவர்களே அதன் கனியை உண்பார்கள்.
நீதிமொழிகள் 18 : 22 (RCTA)
நல்ல மனைவியைத் தள்ளிவிடுகிறவன் நன்மையைத் தள்ளிவிடுகிறான். விபசாரியை வைத்திருக்கிறவனோ அறிவிலியும் அக்கிரமியுமாய் இருக்கிறான்.
நீதிமொழிகள் 18 : 23 (RCTA)
ஏழை தாழ்ச்சியுடன் பேசுவான். செல்வமுடையோன் கடுமையாய்க் கத்துவான்.
நீதிமொழிகள் 18 : 24 (RCTA)
பலருக்குப் பிரியமுள்ள மனிதன் தன் சகோதரனைக்காட்டிலும் அதிகமாய் அவர்களால் நேசிக்கப்படுவான்.
❮
❯