நீதிமொழிகள் 17 : 1 (RCTA)
சுவையான கறி வகைகளோடு நிறைய உண்டு சண்டைபோடும் வீட்டைவிடச் சமாதானத்தோடு ஒருபிடி வெறுஞ்சோறு உண்பது அதிக நலம்.
நீதிமொழிகள் 17 : 2 (RCTA)
ஞானமுள்ள ஊழியன் மதியீனப் பிள்ளைக்கு மேலானவன். அன்றியும், அவன் சகோதரருக்குள் சொத்தில் ஒரு பங்கும் பெறுவான்.
நீதிமொழிகள் 17 : 3 (RCTA)
வெள்ளி நெருப்பிலும், பொன் உலையிலும் பரிசோதிக்கப்படுவதுபோல் ஆண்டவரும் இதயங்களைச் சோதித்தறிகிறார்.
நீதிமொழிகள் 17 : 4 (RCTA)
தீயவன் வசைநாவுக்குக் கீழ்ப்படிகிறான். வஞ்சகன் பொய்யான உதடுகளுக்குப் பணிகிறான்.
நீதிமொழிகள் 17 : 5 (RCTA)
ஏழையைப் புறக்கணிக்கின்றவன் அவனைப் படைத்தவரையே பழிக்கிறான். பிறரின் அழிவில் மகிழ்கிறவனோ தண்டனை அடையாமல் இரான்.
நீதிமொழிகள் 17 : 6 (RCTA)
பேரப் பிள்ளைகளே முதியோரின் முடியாம். புதல்வருடைய மகிமையோ அவர்கள் தந்தையரேயாம்.
நீதிமொழிகள் 17 : 7 (RCTA)
அலங்கார வார்த்தைகள் அறிவீனனுக்கும், பொய்யான உதடுகள் அரசனுக்கும் பொருந்துவன அல்ல.
நீதிமொழிகள் 17 : 8 (RCTA)
எதிர்பார்த்துக்கொண்டிருப்பவனின் நம்பிக்கை மிகச் சிறந்த மாணிக்கமாம். அவன் எங்கே திரும்பினாலும் விவேகமாய்க் கண்டுபிடிப்பான்.
நீதிமொழிகள் 17 : 9 (RCTA)
குற்றத்தை மறைக்கிறவன் நட்பைத் தேடுகிறான். கோள் சொல்கிறவனோ இணைந்திருப்பவர்களைப் பிரிக்கிறான்.
நீதிமொழிகள் 17 : 10 (RCTA)
விவேகிக்குச் (செய்யப்பட்ட) ஒரு கண்டனம் மதிகெட்டவனுக்குச் (செய்யப்பட்ட) நூறு காயங்களைவிட அதிகம் பயன்படும்.
நீதிமொழிகள் 17 : 11 (RCTA)
தீயவன் எப்போதும் சண்டையைத் தேடுகிறான். அவனுக்கு விரோதமாய்க் கொடிய தூதன் அனுப்பப்படுவான்.
நீதிமொழிகள் 17 : 12 (RCTA)
தன் மதியீனத்தில் நம்பிக்கை வைத்திருக்கிற மடையனைப் பார்ப்பதைவிடத் தன் குட்டிகளை இழந்த பெண் கரடியைப் பார்ப்பது அதிக நல்லது.
நீதிமொழிகள் 17 : 13 (RCTA)
நன்மைக்குத் தீமை செய்கிறவன் விட்டினின்று தீமை ஒழியவே ஒழியாது.
நீதிமொழிகள் 17 : 14 (RCTA)
சச்சரவுக்குக் காரணமானவன் தண்ணீரைத் திறந்து விடுகிறவன் போலாம். அவன் நிந்தைப்படுமுன்பே நியாயத்தைக் கை நெகிழ்கிறான்.
நீதிமொழிகள் 17 : 15 (RCTA)
குற்றவாளியைக் குற்றமற்றவனென்றும், குற்றமில்லாதவனைக் குற்றவாளியென்றும் தீர்ப்பிடுகிறவர்கள் கடவுளின் வெறுப்புக்கு ஆளாகிறார்கள்.
நீதிமொழிகள் 17 : 16 (RCTA)
ஞானத்தை விலைக்கு வாங்கக் கூடாதிருக்கையில், மதியீனனுக்குச் செல்வமிருந்தும் பயன் என்ன? தன் வீட்டை உயரமாய்க் கட்டுகிறவன் அழிவைத் தேடுகிறான். ஞானத்தைக் கற்றுக் கொள்ள மாட்டாதவன் (தன் அறியாமையினால்) தீமைக்கு ஆளாவான்.
நீதிமொழிகள் 17 : 17 (RCTA)
நண்பன் எக்காலமும் நேசிக்கிறான்; துன்பத்திலேயும் சகோதரனாவான்.
நீதிமொழிகள் 17 : 18 (RCTA)
மதிகெட்ட மனிதன் தன் நண்பனுக்குப் பிணையாளியான பின்பு கைதட்டி மகிழ்வான்.
நீதிமொழிகள் 17 : 19 (RCTA)
பிரிவினைகளைச் சிந்திக்கிறவன் சச்சரவை நேசிக்கிறான். தன் வாயிலை உயர்த்துகிறவனும் அழிவையே தேடுகிறான்.
நீதிமொழிகள் 17 : 20 (RCTA)
தீய இதயமுள்ளோன் நன்மையைக் காணான். இரு பொருளுள்ள வார்த்தைகளைப் பேசுகிறவன் தீமையில் சிக்கிக்கொள்வான்.
நீதிமொழிகள் 17 : 21 (RCTA)
மதியீனன் தனக்கு நிந்தையாகவே பிறந்திருக்கிறான். அன்றியும், மதியீனனைப்பற்றி அவன் தந்தையுமே மகிழ்ச்சி அடையான்.
நீதிமொழிகள் 17 : 22 (RCTA)
மகிழ்கிற மனம் உடலை மலரச்செய்கின்றது. துயரமான மனம் எலும்புகளையுமே வற்றச் செய்கிறது.
நீதிமொழிகள் 17 : 23 (RCTA)
நீதி நெறிகளைக் கெடுக்கத் தீயவன் இரகசியமாய் வெகுமதிகளை வாங்குகிறான்.
நீதிமொழிகள் 17 : 24 (RCTA)
விவேகியின் முகத்தில் ஞானம் ஒளிர்கின்றது. மதியீனனின் கண்கள் பூமியின் கோடிகளில் (திரிகின்றன).
நீதிமொழிகள் 17 : 25 (RCTA)
மதிகெட்ட மகன் தன் தந்தைக்குக் கோபமும் தன்னைப் பெற்ற தாய்க்குத் துன்பமுமாக ஆவான்.
நீதிமொழிகள் 17 : 26 (RCTA)
நீதிமானுக்கு நட்டம் வருவித்தலும், நேர்மையானவைகளைத் தீர்ப்புச்செய்கிற அரசனை அடித்தலும் நன்றன்று.
நீதிமொழிகள் 17 : 27 (RCTA)
மிதமிஞ்சின வார்த்தைகளைச் சொல்லாதவன் அறிஞனும் விவேகியும் ஆவான். கற்றவன் விலைமதிக்க முடியாத மனமுடையோனாம்.
நீதிமொழிகள் 17 : 28 (RCTA)
மதியீனனுங்கூட மௌனமாயிருப்பானாயின் ஞானியாகவும், தன் உதடுகளை மூடுவானாயின் அறிவுடையோனாகவும் மதிக்கப்படுவான்.
❮
❯