நீதிமொழிகள் 14 : 1 (RCTA)
ஞானமுள்ள பெண் தன் வீட்டைக் கட்டுகிறாள். ஞானமற்றவளோ கட்டினதையுங்கூடக் கைகளால் அழிப்பாள்.
நீதிமொழிகள் 14 : 2 (RCTA)
நேரான நெறியில் நடந்து கடவுளுக்கு அஞ்சுகிறவன் அக்கிரம வழியில் நடக்கிறவனால் இகழப்படுகிறான்.
நீதிமொழிகள் 14 : 3 (RCTA)
மதிகெட்டவனின் வாயில் அகங்காரக் கோல் அமைந்துள்ளது. ஞானிகளின் வாய் அவர்களைக் காக்கும்.
நீதிமொழிகள் 14 : 4 (RCTA)
எங்கே மாடுகள் இல்லையோ (அங்கே) தொழுவம் இல்லை. வெள்ளாண்மை எங்கே மிகுதியோ அங்கே மாட்டின் பலம் வெளியாகின்றது.
நீதிமொழிகள் 14 : 5 (RCTA)
உண்மையுள்ள சாட்சி பொய் சொல்லமாட்டான். வஞ்சகச் சாட்சியோ பொய் சொல்கிறான்.
நீதிமொழிகள் 14 : 6 (RCTA)
கேலி செய்பவன் ஞானத்தைத் தேடினும் கண்டுபிடியான். விவேகிகளுக்கோ போதகம் எளிதாம்.
நீதிமொழிகள் 14 : 7 (RCTA)
மதியீனனுடன் தர்க்கம் செய்தால் அவன் விவேக வாக்கியங்களைக் கண்டுபிடியான்.
நீதிமொழிகள் 14 : 8 (RCTA)
தம் நெறியை அறிதல் விவேகமுள்ளவர்களின் ஞானமாம். மதியீனரின் அவிவேகம் அலைதலாம்.
நீதிமொழிகள் 14 : 9 (RCTA)
மதியீனன் பாவத்தைக் கேலி செய்கிறான். பரிசுத்தமோ நீதிமான்களிடம் நிலைகொள்ளும்.
நீதிமொழிகள் 14 : 10 (RCTA)
எவன் தன் ஆன்மாவின் துயரத்தைக் கண்டு பிடித்தானோ, அவன் இதயத்தின் மகிழ்ச்சியிலே அன்னியன் கலந்துகொள்ள மாட்டான்.
நீதிமொழிகள் 14 : 11 (RCTA)
அக்கிரமிகளின் வீடு அழிக்கப்படும். நீதிமான்களின் கூடாரங்களோ மேலோங்கி வளரும்.
நீதிமொழிகள் 14 : 12 (RCTA)
மனிதனுக்குச் சரியெனக் காணப்படுகிற பழி உண்டு. அதன் முடிவுகளோ மரணத்துக்குக் கூட்டிச் செல்கின்றன.
நீதிமொழிகள் 14 : 13 (RCTA)
சிரிப்பு துன்பத்துடன் கலந்திருக்கும். மகிழ்ச்சி அற்றுப் போகவே அழுகை வரும்.
நீதிமொழிகள் 14 : 14 (RCTA)
மதியீனன் தன் (அக்கிரமச்) செயல்களால் நிறைவு கொள்வான். நீதிமான் அவனைக் காட்டிலும் அதிக நிறைவு கொள்வான்.
நீதிமொழிகள் 14 : 15 (RCTA)
கபடமற்றவன் எவ்வார்த்தையையும் நம்புகிறான். விவேகமுள்ளவனோ தன் அடிச்சுவடுகளைக் கவனிக்கிறான். வஞ்சகனான மகன் எதிலும் விருத்தி அடையான். ஞானமுள்ள அடிமைக்கோ (தன்) செயல்கள் அனுகூலமாயிருக்கும். வழியும் சீராகும்.
நீதிமொழிகள் 14 : 16 (RCTA)
ஞானி பயந்து தீமையினின்று விலகுகிறான். மதியீனனோ (தன்னை) நம்பிக்கொண்டு (தீமையைப்) புறக்கணிக்கிறான்.
நீதிமொழிகள் 14 : 17 (RCTA)
பொறுமையில்லாதவன் மதியீனமாய் நடப்பான். கபடமுள்ள மனிதனோ பகைக்கப்படுவான்.
நீதிமொழிகள் 14 : 18 (RCTA)
சிற்றறிவுடையோர் மதியீனத்தை உரிமை கொள்வார்கள். விவேகமுடையோர் அறிவுக் கலையை எதிர்கொள்வார்கள்.
நீதிமொழிகள் 14 : 19 (RCTA)
தீயோர் நல்லோர் முன்னும், அக்கிரமிகள் நீதிமான்களுடைய வாயிற்படியின் முன்னும் வீழ்ந்து கிடப்பார்கள்.
நீதிமொழிகள் 14 : 20 (RCTA)
வறியவன் தன் உறவினர்களால் (முதலாய்ப்) பகைக்கப்படுவான். செல்வர்க்கு நண்பர் பலராம்.
நீதிமொழிகள் 14 : 21 (RCTA)
தன் அயலானைப் புறக்கணிக்கிறவன் பாவம் செய்கிறான். ஏழைக்கு இரங்குகிறவன் பேறு பெற்றவன் ஆவான். ஆண்டவர்பால் நம்பிக்கையாய் இருக்கிறவன் இரக்கத்தை நேசிக்கிறான்.
நீதிமொழிகள் 14 : 22 (RCTA)
தீமையைச் செய்கிறவர்கள் தவறிப்போகிறார்கள். இரக்கமும் உண்மையும் நலங்களை விளைவிக்கின்றன.
நீதிமொழிகள் 14 : 23 (RCTA)
எவ்வகைத் தொழிலும் செல்வம் உண்டு. மிகு பேச்சு எங்கேயோ அங்கே பெரும்பாலும் வறுமை உண்டாகும்.
நீதிமொழிகள் 14 : 24 (RCTA)
ஞானிகளுடைய செல்வமே அவர்களுடைய மகுடமாம். மூடரின் பைத்தியம் அவிவேகமாம்.
நீதிமொழிகள் 14 : 25 (RCTA)
உண்மையுள்ள சாட்சியம் ஆன்மாக்களை விடுவிக்கிறது. வஞ்சகமுள்ளவன் அபத்தத்தைக் கக்குகிறான்.
நீதிமொழிகள் 14 : 26 (RCTA)
ஆண்டவர்பாலுள்ள அச்சம் வலிமையின் நம்பிக்கையாம். அவனுடைய புதல்வருக்கும் அந்த நம்பிக்கை இருக்கும்.
நீதிமொழிகள் 14 : 27 (RCTA)
(ஏனென்றால்), ஆண்டவர்பாலுள்ள அச்சம் மரண நாசத்தினின்று விடுதலை செய்யும் வாழ்வின் ஊற்றாம்.
நீதிமொழிகள் 14 : 28 (RCTA)
குடிகளின் மிகுதியில் அரசனின் மேன்மை. குடிககளின் குறைவில் அரசனின் வீழ்ச்சி.
நீதிமொழிகள் 14 : 29 (RCTA)
பொறுமையாய் இருக்கிறவன் மிகுந்த விவேகத்தைக் காட்டுகிறான். பொறுமையற்றவனோ தன் மதியீனத்தை எடுத்துக் காட்டுகிறான்.
நீதிமொழிகள் 14 : 30 (RCTA)
மனத்தூய்மை உடலுக்கு நலமாம். பொறாமையோ எலும்புகளை அழுகச் செய்யும்.
நீதிமொழிகள் 14 : 31 (RCTA)
எளியவனை வருத்துகிறவன் அவனைப் படைத்தவரை அவமானப்படுத்துகிறான். ஏழைக்கு இரங்குகிறவனோ அவரை மகிமைப்படுத்துகிறான்.
நீதிமொழிகள் 14 : 32 (RCTA)
அக்கிரமி தன் அக்கிரமத்திலேயே தள்ளப்படுவான். நீதிமானோ தன் மரணத்திலே நம்பியிருக்கிறான்.
நீதிமொழிகள் 14 : 33 (RCTA)
விவேகியின் இதயத்தில் ஞானம் தங்குகிறது. அவனே அறிவில்லாதவர்கள் அனைவரையும் படிப்பிப்பான்.
நீதிமொழிகள் 14 : 34 (RCTA)
நீதி மனிதனை உயர்த்துகிறது. பாவமோ அவனுக்குக் கேடு விளைவிக்கிறது.
நீதிமொழிகள் 14 : 35 (RCTA)
அறிவுள்ள அமைச்சன் அரசனால் விரும்பப்படுகிறான். பயணற்றவன் அவனுடைய கோபத்திற்கு உள்ளாவான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35

BG:

Opacity:

Color:


Size:


Font: