பிலிப்பியர் 4 : 1 (RCTA)
ஆகவே என் அன்புச் சகோதரர்களே, என் வாஞ்சைக் குரியவர்களே, நீங்கள் என் மகிழ்ச்சி, நீங்களே என் வெற்றி வாகை. அன்புக்குரியவர்களே, நான் கூறியவாறு ஆண்டவருக்குள் நிலைத்திருங்கள்.
பிலிப்பியர் 4 : 2 (RCTA)
எயோதியாளைக் கேட்டுக் கொள்கிறேன், சிந்திக்கேயாளையும் கெஞ்சுகிறேன்: நீங்கள் ஆண்டவருக்குள் ஒற்றுமையாக இருங்கள்.
பிலிப்பியர் 4 : 3 (RCTA)
என்னோடு தோள்கொடுத்து உழைத்த உண்மையான தோழரே, உம்மையும் கேட்டுக் கொள்கிறேன்: இவர்களுக்கு உதவி செய்யும். ஏனெனில், இவர்கள் கிலேமெண்தோடும் என் உடன் உழியர் பலரோடும் நற்செய்திக்காக என்னோடு போராடினார்கள். அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் நூலில் எழுதப்பட்டுள்ளன.
பிலிப்பியர் 4 : 4 (RCTA)
ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன்.: 'அகமகிழுங்கள்.
பிலிப்பியர் 4 : 5 (RCTA)
கனிந்த உங்கள் உள்ளம் அனைவர் முன்னும் விளங்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார்.
பிலிப்பியர் 4 : 6 (RCTA)
எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், எல்லாத் தேவைகளிலும் நன்றியோடு கூடிய செபத்திலும் மன்றாட்டிலும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களை ஒப்படையுங்கள்.
பிலிப்பியர் 4 : 7 (RCTA)
அப்பொழுது அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் உள்ளத்துக்கும் மனத்துக்கும் அரணாயிருக்கும்.
பிலிப்பியர் 4 : 8 (RCTA)
இறுதியாக, சகோதரர்களே, உண்மை எதுவோ, கண்ணியமானது எதுவோ, நீதி எதுவோ, தூயது எதுவோ, இனியது எதுவோ, எதெல்லாம் நற்பண்புடையதோ, எதெல்லாம் புகழ்ச்சிக்குரியதோ, அவற்றையே மனத்தில் கொள்ளுங்கள்.
பிலிப்பியர் 4 : 9 (RCTA)
நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்ட போதனைகள், பெற்றுக்கொண்ட படிப்பிணைகள், என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்க்கையில் நீங்கள் பார்த்தவை அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அப்போது சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உங்களோடிருப்பார்.
பிலிப்பியர் 4 : 10 (RCTA)
என்மீது உங்களுக்கு இருந்த அக்கறை இப்போதாவது மலர்ந்தது கண்டு ஆண்டவருக்குள் நான் பெரிதும் அகமகிழ்ந்தேன். அந்த அக்கறை ஏற்கனவே உங்களுக்கு இருந்தது. அதைக் காட்ட வாய்ப்புக் கிடைக்கவில்லை.
பிலிப்பியர் 4 : 11 (RCTA)
நான் இவ்வாறு சொல்வது எனக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு குறையினாலன்று. ஏனெனில், எந்நிலையிலும் போதுமென்ற மனத்தோடு வாழக் கற்றுக்கொண்டேன். வறுமையிலும் வாழத்தெரியும்.
பிலிப்பியர் 4 : 12 (RCTA)
வளமையிலும் வாழத்தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவுற்று வாழவோ, குறைவுற்றுத் தாழவோ, எதற்கும் பயிற்சி பெற்றிருக்கிறேன்.
பிலிப்பியர் 4 : 13 (RCTA)
எனக்கு உறுதியூட்டும் இறைவனால் எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.
பிலிப்பியர் 4 : 14 (RCTA)
ஆயினும் நான் பட்ட வேதனையில் நீங்கள் பங்கு கொண்டதற்கு நன்றி.
பிலிப்பியர் 4 : 15 (RCTA)
பிலிப்பியர்களே, உங்களுக்குத் தெரிந்திருப்பதுபோல், நற்செய்தியை நான் போதிக்கத் தொடங்கின காலத்தில் மக்கதோனியாவை விட்டு, வெளிக்கிளம்பிய பொழுது, உங்களைத் தவிர வேறு எந்தச் சபையும் என் வரவு செலவு கணக்கில் இடம் பெறவில்லை.
பிலிப்பியர் 4 : 16 (RCTA)
நான் தெசலோனிக்கேயில் இருந்தபோது என் தேவையைப் போக்க ஒருமுறை மட்டுமன்று, இருமுறை உதவி அனுப்பினீர்கள்.
பிலிப்பியர் 4 : 17 (RCTA)
நன்கொடைகளல்ல நான் நாடுவது; நான் நாடுவதெல்லாம் உங்கள் கணக்கில் பெருகிவரும் ஆக்கமே.
பிலிப்பியர் 4 : 18 (RCTA)
நீங்கள் அனுப்பியதெல்லாம் பெற்றுக்கொண்டேன். இப்போது என் தேவைக்கு மேல் இருக்கிறது. நீங்கள் அனுப்பிய கொடைகளை எப்பாப்பிரொத்தீத்துவிடமிருந்து பெற்றுக்கொண்டேன். இப்போது என்னிடம் நிறைய இருக்கிறது. உங்கள் கொடைகளோ நறுமணம் வீசும் காணிக்கையும், கடவுளுக்கு உகந்த பலிப்பொருளுமாகும்.
பிலிப்பியர் 4 : 19 (RCTA)
மாட்சிமிக்க தம் செல்வத்திற்கேற்ப என் கடவுள் உங்கள் தேவைகள் அனைத்தையும் கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக்குவார்.
பிலிப்பியர் 4 : 20 (RCTA)
நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மகிமை உண்டாகக. ஆமென்.
பிலிப்பியர் 4 : 21 (RCTA)
கிறிஸ்து இயேசுவின் பெயரால் இறைமக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள். என்னோடிருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
பிலிப்பியர் 4 : 22 (RCTA)
இறைமக்கள் எல்லாரும், சிறப்பாகச் செசாருடைய வீட்டைச் சேர்ந்தவர்களும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
பிலிப்பியர் 4 : 23 (RCTA)
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக.
❮
❯