பிலிப்பியர் 3 : 1 (RCTA)
இறுதியாக, என் சகோதரர்களே, ஆண்டவருக்குள் அகமகிழுங்கள். எழுதினதையே மீண்டும் எழுதுவது எனக்குத் தொல்லையில்லை. உங்களுக்கு நல்லதுதான்.
பிலிப்பியர் 3 : 2 (RCTA)
அந்த நாய்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். அந்தக் கெட்ட ஊழியர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்.
பிலிப்பியர் 3 : 3 (RCTA)
அந்தப் போலி விருத்தசேதனக்காரர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். நாமே கடவுளின் ஆவிக்கேற்ப உண்மை வழிபாடு செலுத்துகிறோம். கிறிஸ்து இயேசுவில் நாம் பெருமை பாராட்டுகிறோமே தவிர, உடலைச் சார்ந்ததில் நம்பிக்கை கொள்வதில்லை. நானும் இத்தகையவற்றில் நம்பிக்கை வைக்க முடியும்.
பிலிப்பியர் 3 : 4 (RCTA)
இத்தகையவற்றில் நம்பிக்கை கொள்ள முடியும் என ஒருவன் நினைத்தால், நான் அவனை விட மிகுதியாய் நினைக்கமுடியும். நான் எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டேன். நானும் இஸ்ராயேல் இனத்தவன்.
பிலிப்பியர் 3 : 5 (RCTA)
நான் பென்யமீன் குலத்தவன், எபிரேயர் குலத்தில் பிறந்த எபிரேயன். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்.
பிலிப்பியர் 3 : 6 (RCTA)
அதன்மேல் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்துக்குரிய நீதியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாயிருந்தேன்.
பிலிப்பியர் 3 : 7 (RCTA)
ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.
பிலிப்பியர் 3 : 8 (RCTA)
ஆம், என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவை அறிதலாகிய ஒப்பற்ற செல்வத்தின் பொருட்டு அவையெல்லாம் இழப்பு எனக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ளவும், அவரோடு ஒன்றித்திருக்கவும் எல்லாவற்றையும் குப்பையெனக் கருதுகிறேன்.
பிலிப்பியர் 3 : 9 (RCTA)
இறைவனுக்கு ஏற்புடையவனாகும் தகுதி எதுவும் எனக்குச் சொந்தமாயில்லை. திருச்சட்டத்தால் இறைவனுக்கு ஏற்புடையவன் ஆகாத இந்நிலையில் கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் தான், இறைவனுக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். அந்த ஏற்புடைமையோ கடவுள் அளிக்கும் கொடை. விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது.
பிலிப்பியர் 3 : 10 (RCTA)
இனி நான் விரும்புவதெல்லாம் அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே. அதாவது, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையைத் துய்த்துணர வேண்டும். அவரது சாவின் சாயலை என்னுள் ஏற்று அவருடைய பாடுகளில் பங்குபெற வேண்டும்.
பிலிப்பியர் 3 : 11 (RCTA)
அப்போது தான், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுதலை நான் அடைவேன் என நம்பக் கூடும்.
பிலிப்பியர் 3 : 12 (RCTA)
இவையெல்லாம் அடைந்துவிட்டேன் என்றோ நிறைவு எய்தி விட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. எதற்காக கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டாரோ. அதை நான் பற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து ஓடுகிறேன்.
பிலிப்பியர் 3 : 13 (RCTA)
ஆம், சகோதரர்களே, முடிவை நான் பற்றிக் கொண்டு விட்டேன் என்று எண்ணவில்லை. ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன்.
பிலிப்பியர் 3 : 14 (RCTA)
கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசுபெற வேண்டி இலக்கை நோக்கி முனைந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் என்னைக் கடவுள் மேலுலகுக்கு அழைப்பதே அப்பரிசாகும்.
பிலிப்பியர் 3 : 15 (RCTA)
எனவே நிறைவெய்திய நமக்கு இத்தகைய மனநிலையே இருத்தல் வேண்டும். எதைப்பற்றியாவது நீங்கள் வேறுபாடான கருத்துக் கொண்டிருந்தால் அதைப்பற்றிய உண்மையை கடவுளே உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
பிலிப்பியர் 3 : 16 (RCTA)
நாம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும், அதே வழியில் தொடர்ந்து நடப்போம்.
பிலிப்பியர் 3 : 17 (RCTA)
சகோதரர்களே, நீங்கள் அனைவரும் ஒரு மிக்க என்னைப்போல் நடங்கள். நாங்கள் உங்களுக்கு முன்மாதிரி, அந்த முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களைக் கவனியுங்கள்.
பிலிப்பியர் 3 : 18 (RCTA)
கிறிஸ்துவின் சிலுவைக்கு எதிரிகளாய் நடப்போர் பலர் உள்ளனர். இதை உங்களுக்குப் பலமுறை கூறியுள்ளேன். இப்போதும் கண்ணீரோடு சொல்லுகிறேன்.
பிலிப்பியர் 3 : 19 (RCTA)
அழிவே அவர்கள் முடிவு, வயிறே அவர்கள் கடவுள், மானக்கேடே அவர்கள் மகிமை. அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்ததே.
பிலிப்பியர் 3 : 20 (RCTA)
நமக்கோ வானகமே தாய்நாடு. அங்கிருந்து மீட்பர் வருவாரெனக் காத்திருக்கிறோம்.
பிலிப்பியர் 3 : 21 (RCTA)
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே அந்த மீட்பர். அவர் அனைத்தையும் தமக்குக் கீழ்ப்படுத்த வல்ல ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை, மாட்சிமைக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார்.
❮
❯