பிலிப்பியர் 2 : 1 (RCTA)
எனவே, கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்வு ஊக்கம் ஊட்டுவதெனில், அன்பினால் ஆறுதல் விளைவிப்பதெனில், ஆவியானவரோடு நட்புறவு தருவதெனில், பரிவும் இரக்கமும் உண்டாக்குவதெனில்.
பிலிப்பியர் 2 : 2 (RCTA)
நீங்கள் ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவுபெறச் செய்யுங்கள்; ஒரே அன்பும். ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டிருங்கள்.
பிலிப்பியர் 2 : 3 (RCTA)
போட்டி மனப்பான்மைக்கும், வீண் பெருமைக்கும் இடம் தரவேண்டாம். மனத்தாழ்ச்சியோடு மற்றவரை உங்களினும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.
பிலிப்பியர் 2 : 4 (RCTA)
உங்களுள் ஒவ்வொருவரும் தன் நலத்தையே நாடாது, பிறர் நலத்தையும் நாட வேண்டும்.
பிலிப்பியர் 2 : 5 (RCTA)
கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக.
பிலிப்பியர் 2 : 6 (RCTA)
கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக் கருதவில்லை.
பிலிப்பியர் 2 : 7 (RCTA)
ஆனால், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,
பிலிப்பியர் 2 : 8 (RCTA)
தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.
பிலிப்பியர் 2 : 9 (RCTA)
ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
பிலிப்பியர் 2 : 10 (RCTA)
ஆகவே, இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிட,
பிலிப்பியர் 2 : 11 (RCTA)
'இயேசுகிறிஸ்து ஆண்டவர்' என்று தந்தையாகிய கடவுளுடைய மகிமைக்காக எல்லா நாவுமே அறிக்கையிடும்.
பிலிப்பியர் 2 : 12 (RCTA)
எனவே, என் அன்பிற்குரியவர்களே, எப்பொழுதும் கீழ்ப்படிதலோடு நடந்தது போல் இப்போதும் நடங்கள். நான் இப்போது உங்களோடு இல்லாவிடினும், உங்களோடு இருந்தபோது நீங்கள் காட்டிய பணிவை விடை மிகுந்த பணிவு காட்டி. அச்ச நடுக்கத்தோடு உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்.
பிலிப்பியர் 2 : 13 (RCTA)
நீங்கள் எதையும் விரும்பவும் செயலாற்றவும் தம் திருவுளம் நிறைவேற, உங்களில் செயலாற்றுபவர் கடவுளே.
பிலிப்பியர் 2 : 14 (RCTA)
செய்வதெல்லாம் முணுமுணுக்காமல் வாதாடாமல் செய்யுங்கள்.
பிலிப்பியர் 2 : 15 (RCTA)
அப்பொழுதுதான் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமின்றி மாசற்றவர்களாய்க் கடவுளின் குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; வாழ்வைப் பற்றிய வார்த்தைகளை வழங்க ஏந்தி நின்று, உலகில் சுடர்விடும் விண்மீன்கள் எனத் துலங்குவீர்கள்.
பிலிப்பியர் 2 : 16 (RCTA)
வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பதற்கு நீங்கள் சான்றாய் நின்று, கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையச் செய்வீர்கள்.
பிலிப்பியர் 2 : 17 (RCTA)
உங்கள் விசுவாசமாகிய காணிக்கையை ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் நான் என் இரத்தத்தையே சிந்தவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே.
பிலிப்பியர் 2 : 18 (RCTA)
அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ளுகிறேன். அதுபோலவே நீங்களும் அகமகிழுங்கள். உங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
பிலிப்பியர் 2 : 19 (RCTA)
உங்களைப் பற்றிய செய்திகளை அறிந்து, நானும் உற்சாகமடையும்படி தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்பலாம் என்று நினைக்கிறேன். ஆண்டவர் இயேசு அருள் புரிக.
பிலிப்பியர் 2 : 20 (RCTA)
உங்கள் நலத்தில் மெய்யாகவே அக்கறை காட்டுவதற்கு அவரைப்போல் நன்மனமுள்ளவர் என்னோடு வேறு யாருமில்லை.
பிலிப்பியர் 2 : 21 (RCTA)
எல்லாரும் தம்மைச் சார்ந்தவற்றைக் தேடுகிறார்களே தவிர, கிறிஸ்து இயேசுவைச் சார்ந்தவற்றைத் தேடுவதில்லை.
பிலிப்பியர் 2 : 22 (RCTA)
தீமோத்தேயுவின் தகைமையோ உங்களுக்குத் தெரியும். தந்தையோடு மகன் உழைப்பதுபோல் என்னோடு அவர் நற்செய்திக்காக உழைத்திருக்கிறார்.
பிலிப்பியர் 2 : 23 (RCTA)
என் நிலைமை எப்படி இருக்கும் என்று அறிந்தவுடன் அவரை உங்களிடம் அனுப்ப நினைக்கிறேன்.
பிலிப்பியர் 2 : 24 (RCTA)
நானே விரைவில் உங்களிடம் வருவேன் என்ற நம்பிக்கையும் ஆண்டவரில் எனக்குண்டு.
பிலிப்பியர் 2 : 25 (RCTA)
என் தேவைகளில் எனக்குத் துணைசெய்யும்படி நீங்கள் எப்பாப்பிரொத்தீத்துவை அனுப்பி வைத்தீர்களே. அந்தச் சகோதரர் என் உழைப்பிலும் போராட்டத்திலும் தோழராக இருந்தார். இப்போது அவரை உங்களிடம் திருப்பி அனுப்ப வேண்டுமென்று நினைக்கிறேன்.
பிலிப்பியர் 2 : 26 (RCTA)
ஏனெனில், தாம் நோயுற்ற செய்தி உங்களுக்குத் தெரியவந்ததை அறிந்து மனங்கலங்கி உங்களெல்லோரையும் காண ஏக்கமாயிருந்தார். ஆம், அவர் நோயுற்றது உண்மையே.
பிலிப்பியர் 2 : 27 (RCTA)
இறக்கும் தருவாயில்கூட இருந்தார். ஆனால் கடவுள் அவர்மேல் இரக்கம் கொண்டார். அவர்மேல் மட்டுமன்று, துன்பத்துக்கு மேல் துன்பம் எனக்கு வராதபடி என் மேலம் இரக்கம் கொண்டார். அவரை விரைவில் அனுப்பிவிடுகிறேன்.
பிலிப்பியர் 2 : 28 (RCTA)
மீண்டும் அவரைப் பார்த்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள், நானும் கவலையின்றி இருப்பேன்.
பிலிப்பியர் 2 : 29 (RCTA)
எனவே முழு மகிழ்ச்சியோடு ஆண்டவர் பெயரால் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். அத்தகையோருக்கு நீங்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும்.
பிலிப்பியர் 2 : 30 (RCTA)
இப்படி அவர் சாகும் நிலைக்கு வந்தது கிறிஸ்துவுக்காகச் செய்த வேலையினாலேயே. நீங்கள் எனக்குத் துணைபுரிய இயலாமற்போன குறையை நீக்க அவர் தம் உயிரையே இழக்கவும் துணியலானார்.
❮
❯