பிலிப்பியர் 1 : 1 (RCTA)
கிறிஸ்து இயேசுவுக்குள் பிலிப்பி நகரில் வாழ்கின்ற இறைமக்கள், மேற்பார்வையாளர், திருப்பணியாளர் அனைவருக்கும், கிறிஸ்து இயேசுவின் ஊழியர்களான சின்னப்பனும் தீமோத்தேயுவும் எழுதுவது:
பிலிப்பியர் 1 : 2 (RCTA)
நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், அண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!
பிலிப்பியர் 1 : 3 (RCTA)
செபத்தில் உங்களைக் குறிப்பிடும்போதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
பிலிப்பியர் 1 : 4 (RCTA)
உங்கள் அனைவருக்காகவும் நான் மன்றாடும் பொழுதெல்லாம் தொடக்கத்திலிருந்தே இன்றுவரை
பிலிப்பியர் 1 : 5 (RCTA)
நீங்கள் நற்செய்தித் திருப்பணியில் பங்கேற்று வருவதை நினைத்து, மகிழ்ச்சியுடன் மன்றாடுகிறேன்.
பிலிப்பியர் 1 : 6 (RCTA)
உங்களில் சிறந்ததொரு வேலையைத் தொடங்கியவர், இயேசு கிறிஸ்துவின் நாள்வரை அதைத் தொடர்ந்து செய்து நிறைவுபெறச் செய்வார் என நான் நம்பியிருக்கிறேன்.
பிலிப்பியர் 1 : 7 (RCTA)
உங்கள் எல்லோரையும் பற்றி எனக்கு இத்தகைய உணர்ச்சிகள் எழுவது இயற்கைதானே! ஏனெனில், நான் சிறையில் இருந்தபொழுதும், நான் நற்செய்திக்காகப் போராடி அதை நிலைநாட்டிய பொழுதும், என்னுடனிருந்து எனக்குக் கிடைத்த வரத்தில் பங்குகொண்ட நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள்.
பிலிப்பியர் 1 : 8 (RCTA)
கிறிஸ்து இயேசுவுக்குரிய அதே பரிவுள்ளத்தோடு உங்கள் எல்லோர் மீதும் எவ்வளவோ ஏக்கமாயிருக்கிறேன். இதற்குக் கடவுளே சாட்சி.
பிலிப்பியர் 1 : 9 (RCTA)
எனவே மேலானவற்றையே பகுத்தறியச் செய்யும் அறிவையும் உள்ளுணர்வு அனைத்தையும் உங்களுக்குத் தர வேண்டும் என்பதே என் செபம்.
பிலிப்பியர் 1 : 10 (RCTA)
இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் பெறும் ஏற்புடைய வாழ்வின் பயனால் நிரப்பப்பட்டு,
பிலிப்பியர் 1 : 11 (RCTA)
கிறிஸ்துவின் நாளை எதிர்நோக்கி, கடவுளின் மகிமைக்காவும் புகழுக்காவும் நீங்கள் குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்து வருவீர்கள்.
பிலிப்பியர் 1 : 12 (RCTA)
சகோதரர்களே, எனக்கு நேர்ந்தவையெல்லாம் நற்செய்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுபவை ஆயின.
பிலிப்பியர் 1 : 13 (RCTA)
இதை நீங்கள் அறிய வேண்டும் என விரும்புகிறேன். கிறிஸ்துவுக்காக நான் சிறைப்பட்டது அரண்மனைக் காவற்படையினர் அனைவருக்கும் மற்ற யாவருக்குமே நன்கு தெரியவந்தது.
பிலிப்பியர் 1 : 14 (RCTA)
ஆகவே, சகோதரர்களுள் மிகப் பலர் என் சிறை வாழ்வினால் ஆண்டவருக்குள் உறுதிகொண்டு கடவுளின் வார்த்தையை அச்சமின்றி அறிவிக்க மேலும் துணிவு கொண்டிருக்கின்றனர்.
பிலிப்பியர் 1 : 15 (RCTA)
இவர்களுன் சிலர் பொறாமையாலும் போட்டி மனப்பான்மையாலும் கிறிஸ்துவை அறிவிக்கின்றனர்; வேறு சிலரோ நல்ல மனத்தோடு அறிவிக்கின்றனர்.
பிலிப்பியர் 1 : 16 (RCTA)
இவர்களைத் தூண்டுவது அன்பே. நற்செய்திக்காகப் போராடவே நான் குறிக்கப்பட்டிருக்கிறேன் என இவர்கள் அறிவார்கள்.
பிலிப்பியர் 1 : 17 (RCTA)
மற்றவர்களோ கட்சி மனப்பான்மையால் கிறிஸ்துவை அறிவிக்கின்றனர். அவர்களுடைய நோக்கம் நேர்மையானதன்று. என் சிறை வாழ்வின் வேதனையை இன்னும் மிகுதியாக்க நினைக்கின்றனர்.
பிலிப்பியர் 1 : 18 (RCTA)
அதனாலென்ன ? அவர்களுடைய நோக்கம். வஞ்சகமானதோ, நேர்மையானதோ; எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகின்றார். அது எனக்கு மகிழ்ச்சியே ஆம், இனியும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
பிலிப்பியர் 1 : 19 (RCTA)
உங்கள் மன்றாட்டினாலும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையாலும் இதெல்லாம் எனக்கு மீட்பளிப்பதாய் முடியும் என்று நான் அறிவேன்.
பிலிப்பியர் 1 : 20 (RCTA)
என்ன நேரிடினும் நான் நிலைகுலைய மாட்டேன். 'இது வரையில் என்னால் கிறிஸ்துவின் புகழ் விளங்கியதுபோல் இப்பொழுதும் நான் இருந்தாலும் இறந்தாலும் என்னால் அவரது புகழ் விளங்கும். இதுவே என் பேராவல். இதுவே என் நம்பிக்கை
பிலிப்பியர் 1 : 21 (RCTA)
ஏனெனில், எனக்கு வாழ்வதென்பது கிறிஸ்துவே; சாவது ஆதாயமே.
பிலிப்பியர் 1 : 22 (RCTA)
ஆனால், உலகில் வாழ்ந்தால், பயனுள்ள பணிசெய்யக் கூடுமாயின் எதைத் தேர்ந்து கொள்வதென்பது எனக்குத் தெரியவில்லை.
பிலிப்பியர் 1 : 23 (RCTA)
இரு பக்கங்களிலும் நெருக்கப்படுகிறேன். உயிர் நீத்து கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்னும் ஆவல் ஒருபுறம். 'இதுவே மிகச் சிறந்தது,
பிலிப்பியர் 1 : 24 (RCTA)
மற்றொருபுறம், இன்னும் உலகில் வாழ்வது உங்கள் பொருட்டுத் தேவையாயிருக்கிறது.
பிலிப்பியர் 1 : 25 (RCTA)
இந்த உறுதியில் நான் ஒன்று அறிவேன்: நான் இன்னும் உயிரோடிருந்து நீங்கள் விசுவாசத்தில் வளர்ச்சிபெற்று மகிழ்ச்சி காணும்படி உங்கள் அனைவரோடும் தங்கியிருப்பேன்.
பிலிப்பியர் 1 : 26 (RCTA)
ஆகவே, நான் உங்களிடம் திரும்பி வருவதால், கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் கொள்ளும் பெருமிதம் என் பொருட்டு மிகுதியாகும்.
பிலிப்பியர் 1 : 27 (RCTA)
ஆனால், கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்ற வாழ்க்கை நடத்துங்கள்: நான் உங்களை வந்து பார்த்தாலும், வரமுடியாமல் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் நீங்கள் நற்செய்தியின் மேலுள்ள விசுவாசத்திற்கே ஒரே உள்ளத்தோடு போராடி, ஒரே மனதாய் நிலைத்து நிற்கிறீர்கள் என்பதும்.
பிலிப்பியர் 1 : 28 (RCTA)
எதிரிகள் முன் சிறிதும் மிரளாமல் இருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரிய வேண்டும். இவ்வாறு நீங்கள் மிரளாமல் இருப்பது அவர்களுடைய அழிவுக்கும் உங்களுடைய மீட்புக்கும் அறிகுறியாகும். இது கடவுளின் செயல்.
பிலிப்பியர் 1 : 29 (RCTA)
நீங்கள் கிறிஸ்துவில் விசுவாசம்கொள்வதற்கு மட்டுமன்று. அவருக்காகத் துன்பங்களை ஏற்பதற்கும் இறையருள் உங்களுக்கு அளிக்கப்பட்டது.
பிலிப்பியர் 1 : 30 (RCTA)
எனக்குள்ள போராட்டமே உங்களுக்கும் உண்டு. எனக்கிருந்த போராட்டத்தை நீங்கள் அன்று கண்டீர்கள். இன்னும் நான் அதில் ஈடுபட்டிருப்பது உங்கள் செவிக்கு எட்டியுள்ளது.
❮
❯