ஒபதியா 1 : 1 (RCTA)
அப்தியாஸ் கண்ட காட்சியாவது: இறைவனாகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறார்: ஏற்கனவே தூதன் ஒருவன் மக்களினங்களிடம் சென்று, "எழுந்து கிளம்புங்கள்! அதற்கு எதிராகப் போருக்குப் புறப்படுவோம்!" என்றதை நாம் கேட்டிருக்கிறோம்.
ஒபதியா 1 : 2 (RCTA)
இதோ, மக்களினங்கள் நடுவில் உன்னைச் சிறியதாக்குகிறோம், பெரும் நிந்தைக்கு ஆளாக்குவோம்.
ஒபதியா 1 : 3 (RCTA)
கற்பாறைகளின் பிளவுகளில் வாழ்ந்து கொண்டு, உன் அரியணையை உயரத்தில் ஏற்படுத்தி, "என்னைத் தரை மட்டும் தாழ்த்தக்கூடியவன் யார்?" என உன் உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே, உன் இதயத்தின் இறுமாப்பு உன்னை ஏமாற்றி விட்டது.
ஒபதியா 1 : 4 (RCTA)
கழுகு போல நீ உயர உயரப் பறந்தாலும், விண்மீன்கள் நடுவில் உன் கூட்டை அமைத்தாலும், அங்கிருந்து உன்னைக் கீழே வீழ்த்துவோம், என்கிறார் ஆண்டவர்.
ஒபதியா 1 : 5 (RCTA)
உன்னிடம் திருடர்கள் வருவார்களாயின்- கொள்ளைக்காரர்கள் இரவில் வந்தார்களானால்- தங்களுக்குப் போதிய அளவுமட்டும் திருடமாட்டார்களா? திராட்சைப்பழம் பறிப்பவர்கள் உன்னிடம் வந்தால், திராட்சைப் பழங்களில் கொஞ்சமாவது விடமாட்டார்களா? நீ எவ்வளவோ அழிவைக் கண்டு விட்டாய்!
ஒபதியா 1 : 6 (RCTA)
ஏசாவு எவ்வளவோ கொள்ளையடிக்கப்பட்டான்! அவனுடைய மறைந்திருந்த கருவூலங்கள் சூறையாடப்பட்டன.
ஒபதியா 1 : 7 (RCTA)
நாட்டின் எல்லை வரை உன்னைப் பகைவர்கள் விரட்டினார்கள், உன்னுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் யாவரும் உன்னை ஏய்த்தனர்; உன்னோடு நட்புறவாடியவர்கள் உனக்குக் கண்ணி வைத்தனர்," அவனுக்கு மூளையில்லை" என்று சொன்னார்கள்.
ஒபதியா 1 : 8 (RCTA)
அந்நாளில் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் மலை மேலுள்ள அறிவையும் அழிக்காமல் விடுவோமா, என்கிறார் ஆண்டவர்.
ஒபதியா 1 : 9 (RCTA)
தேமானே, உன் வீரர்கள் திகிலடைவர், ஏசாவின் மலையில் உள்ள ஒவ்வொருவனும் மாண்டுபோவான்.
ஒபதியா 1 : 10 (RCTA)
உன் சகோதரன் யாக்கோபுக்கு எதிராக நீ செய்த கொலைப்பழி, அக்கிரமம் இவற்றுக்காக வெட்கம் உன்னைப் பிடுங்கித் தின்னும்; நீ என்றென்றைக்கும் அழிந்துபோவாய்.
ஒபதியா 1 : 11 (RCTA)
நீ உதவிசெய்ய முன்வராமல் விலகி நின்ற அந்நாளில்- அந்நியர்கள் அவன் செல்வத்தை வாரிச் சென்ற அந்நாளில்- வெளி நாட்டார் அவன் வாயில்கள் வழியாய் நுழைந்து யெருசலேமுக்காகத் தங்களுக்குள் சீட்டுப் போட்ட போது, நீயும் அவர்களுள் ஒருவனாக இருந்தாயே!
ஒபதியா 1 : 12 (RCTA)
உன் சகோதரனுடைய நாளைக் கண்டு, அவன் துன்ப நாளைக் கண்டு நீ மகிழ்ச்சியடையாதே; யூதாவின் மக்களைப் பார்த்து, அவர்களின் அழிவுநாளில் அக்களியாதே. அவர்களின் வேதனை நாளில் அவர்களைப் பழித்துக் காட்டாதே.
ஒபதியா 1 : 13 (RCTA)
நம் மக்கள் கேடுற்ற நாளில் அவர்களுடைய வாயிலுக்குள் நுழையாதே; அவர்கள் அழிவுற்ற நாளில் அவர்களுடைய பொருட்களைக் கொள்ளையடிக்காதே.
ஒபதியா 1 : 14 (RCTA)
அவர்களுள் தப்பியோடுகிறவர்களை வெட்டி வீழ்த்தும்படி நாற்சந்திகளில் காத்து நிற்காதே; அவர்களின் வேதனை நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக் கொடுக்காதே.
ஒபதியா 1 : 15 (RCTA)
ஏனெனில் ஆண்டவரின் நாள் எல்லா மக்களினங்கள் மேலும் வரப் போகிறது. பிறருக்கு நீ செய்தது போலவே உனக்கும் செய்யப்படும், உன் செயல்கள் உன் தலை மேலேயே சுமத்தப்படும்.
ஒபதியா 1 : 16 (RCTA)
நமது பரிசுத்த மலை மேல் நம் கோபத்தின் பாத்திரத்தை நீங்கள் குடித்தது போலவே, புறவினத்தார் அனைவரும் தாராளமாய் அதைக் குடிப்பார்கள்; ஆம், மேலும் மேலும் குடிப்பார்கள், கடைசித் துளிவரையில் குடிப்பார்கள், இருந்தும் இல்லாதவர்களைப் போல் ஆவார்கள்.
ஒபதியா 1 : 17 (RCTA)
ஆனால் சீயோன் மலையில் தப்பிப் பிழைத்தவர்கள் இருப்பார்கள், அதுவும் பரிசுத்த இடமாய் இருக்கும்; தங்களை ஆட்கொண்டவர்களை இப்பொழுது யாக்கோபு வீட்டார் ஆட்கொள்வர்.
ஒபதியா 1 : 18 (RCTA)
யாக்கோபின் வீட்டார் நெருப்பாய் இருப்பர், யோசேப்பின் வீட்டார் தீக்கொழுந்தாய் இருப்பர், ஏசாவின் வீட்டார் வைக்கோலாய் இருப்பர்; அவர்கள் இவர்களை முற்றிலும் சுட்டுப் பொசுக்கி விடுவர், ஏசாவின் வீட்டாருள் தப்பிப் பிழைத்தவர் யாருமிரார்; ஏனெனில் இதை ஆண்டவரே சொல்லிவிட்டார்.
ஒபதியா 1 : 19 (RCTA)
தென்னாட்டில் வாழ்பவர்கள் ஏசாவின் மலையையும், சமவெளியில் இருப்பவர்கள் பிலிஸ்தியர் நாட்டையும் உரிமையாக்கிக் கொள்வார்கள். எப்பீராயிம் நாட்டையும், சமாரியா நாட்டையும் அவர்கள் உரிமையாக்கிக் கொள்வார்கள்; பென்யமீனோ கலகாத்தைச் சொந்தமாக்கிக் கொள்வான்.
ஒபதியா 1 : 20 (RCTA)
இஸ்ராயேல் மக்களுள் இந்தப் படையிலிருந்து நாடு கடத்தப்பட்டோர் பெனீசியாவிலிருந்து சரெப்தா வரையில் உரிமையாக்கிக் கொள்வர்; யெருசலேமிலிருந்து செப்பாராதுக்கு நாடு கடத்தப்பட்டோர் தென்னாட்டு நகரங்களை உரிமையாக்கிக் கொள்வர்.
ஒபதியா 1 : 21 (RCTA)
ஏசாவின் மலையை ஆளும்படி வெற்றி வீரராக சீயோன் மலைமீது ஏறுவார்கள்; அரசு ஆண்டவருக்கே உரியதாய் இருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21