எண்ணாகமம் 22 : 1 (RCTA)
அதன் பிறகு இஸ்ராயேலர் பயணம் செய்து, யோர்தான் நதிக்கு அக்கரையிலுள்ள எரிக்கோ நகர் கட்டப்பட்டுள்ள மோவாப் சமவெளிகளில் பாளையம் இறங்கினார்கள்.
எண்ணாகமம் 22 : 2 (RCTA)
சேப்போரிக் புதல்வனான பாலாக் இஸ்ராயேலர் அமோறையருக்குச் செய்த யாவையும் கேள்விப்பட்டு,
எண்ணாகமம் 22 : 3 (RCTA)
அச்சத்தால் மனம் கலங்கிய மோவாபியர்அவர்களுக்கு ஆற்றமாட்டாமல் பின்னடைவார்களென்று கண்டு,
எண்ணாகமம் 22 : 4 (RCTA)
மதியானியரின் முதியோரை நோக்கி: மாடு புல்லை வேரற மேய்வதுபோல, இஸ்ராயேலர் நமது எல்லைகளுக்குள் வாழ்கிற யாவரையும் அழித்துவிடுவார்கள் என்றான். இந்தப் பாலாக்கே அக்காலத்தில் மோவாபிலே அரசனாய் இருந்தவன்.
எண்ணாகமம் 22 : 5 (RCTA)
அவன் என்ன செய்தானென்றால், அம்மோனியர்நாட்டில் ஓடும் ஆற்றின் அருகே பேயோரின் புதல்வன் பாலாம் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு குறிசொல்பவன். அவனை அழைத்து வரும்படி பாலாக் தன் பிரதிநிதிகளை அனுப்பி: எகிப்திலிருந்து ஒரு மக்கட்கூட்டம் வந்திருக்கிறது. அவர்கள் நாடெங்கும் பரவி, என் எதிரே பாளையம் இறங்கினார்கள்.
எண்ணாகமம் 22 : 6 (RCTA)
அவர்கள் என்னிலும் வலியர். எப்டியேனும் நான் அவர்களை முறியடித்து நாட்டினின்று துரத்தும்படியாய், நீர் இங்கு வந்து அவர்களைச் சபிக்க வேண்டும். ஏனெனெறால், நீர் யார் யாருக்கு ஆசீர்அளிப்பீரோ அவர்கள் ஆசீர் அடைவார்களென்றும், யார்யாரைச் சபிப்பீரோ அவர்கள் சபிக்கப்பட்டவராவரென்றும் எனக்குத்தெரியும் என்று சொல்லச் சொன்னான்.
எண்ணாகமம் 22 : 7 (RCTA)
அவ்வாறே மோவாபின் பெரியோர்களும் மதியானிய முதியோர்களும் குறி சொல்வதற்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு பயணமானார்கள். அவர்கள் பாலாமிடம் போய்ச் சேர்ந்து பாலாக்கின் வார்த்தைகளைச் சொல்லிய பின்பு, அவன் அவர்களை நோக்கி:
எண்ணாகமம் 22 : 8 (RCTA)
நீங்கள் இன்று இரவு இங்கே தங்குங்கள். ஆண்டவர் எனக்குச் சொல்வதெல்லாம் உங்களுக்கு அறிவிப்பேன் என்றான். அவர்கள் பாலாமிடம் தங்கியிருக்கையில், ஆண்டவர் வந்து அவனை நோக்கி:
எண்ணாகமம் 22 : 9 (RCTA)
உன்னிடம் இருக்கிற அந்த மனிதர்கள் எதற்காக வந்தார்கள் என்று வினவ, அவன்:
எண்ணாகமம் 22 : 10 (RCTA)
சேப்போரின் புதல்வனான பாலாக் என்னும் மோவாபியருடைய அரசன் அவர்களை என்னிடம் அனுப்பி:
எண்ணாகமம் 22 : 11 (RCTA)
நாடெங்கும் பரவிய ஒரு மக்கட்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது. ஆகையால், நீ வந்து அவர்களைச் சபிக்க வேண்டும். சபித்தால், நான் எப்படியாவது அவர்களோடு போர்புரிந்து, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச் சொன்னான் என்றான்.
எண்ணாகமம் 22 : 12 (RCTA)
கடவுள் பாலாமை நோக்கி: நீ அவர்களோடு போகாதே. அந்த மக்கட் கூட்டத்தையும் நீ சபிக்கவேண்டாம். அது ஆசிர்பெற்ற குலமே என்றருளினார்.
எண்ணாகமம் 22 : 13 (RCTA)
பாலாம் காலையில் எழுந்து: ஆண்டவர் உங்களோடு போக வேண்டாமென்று விலக்கியுள்ளார். ஆதலால், நீங்கள் உங்கள் நாட்டுக்குப் போகலாம் என்று சொன்னான்.
எண்ணாகமம் 22 : 14 (RCTA)
பிரதிநிதிகள் திரும்பிப் பாலாக்கிடம் போய்: பாலாம் எங்களோடு வரமாட்டேனென்று சொன்னான் என்றார்கள்.
எண்ணாகமம் 22 : 15 (RCTA)
பாலாக் அவர்களைக்காட்டிலும் அதிக மதிப்பிற்குரிய உயர்குலப் பிரபுக்களை மறுபடியும் (அனுப்பினான்).
எண்ணாகமம் 22 : 16 (RCTA)
இவர்கள் பாலாமிடம் போய்: சேப்போரின் புதல்வனான பாலாக் எங்களை அனுப்பி: நீ என்னிடம் வருவதற்குத் தடை எதுவும் வேண்டாம்.
எண்ணாகமம் 22 : 17 (RCTA)
உம்மை மதித்துப் போற்றவும், நீர் கேட்கிறதெல்லாம் கொடுக்கவும் தயாராயிருக்கிறேன். வாரும், வந்து அவர்களைச் சபியும் என்று உம்மிடம் சொல்லக் கட்டளையிட்டான் என்றார்கள்.
எண்ணாகமம் 22 : 18 (RCTA)
பாலாம் அவர்களை நோக்கி: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியையும் பொன்னையும் தந்தாலும், நான் கடவுளாகிய ஆண்டவர் சொல்லியதற்கு அதிகமாகவும் அல்லது குறைவாகவும் சொல்லி, அவருடைய வார்த்தையைப் புரட்டுதல் என்னாலே இயலாது.
எண்ணாகமம் 22 : 19 (RCTA)
ஆயினும், ஆண்டவர் மறுபடியும் எனக்கு என்ன சொல்வார் என்பதை நான் அறியும் பொருட்டு, இந்த இரவிலும் இங்கே தங்க வேண்டுமென்று உங்களை மிகவும் மன்றாடுகிறேன் என்றான்.
எண்ணாகமம் 22 : 20 (RCTA)
இரவிலே கடவுள் பாலாமிடம் வந்து: இந்த மனிதர்கள் உன்னை அழைக்க வந்துள்ளார்களாதலால், நீ எழுந்து அவர்களோடு போனாலும் போலாம். ஆனால், நாம் உனக்குக் கட்டளையிட்டிருக்கிறபடி மட்டுமே செய்வாய் என்றுரைத்தார்.
எண்ணாகமம் 22 : 21 (RCTA)
பாலாம் காலையில் எழுந்து தன் கோவேறு கழுதைக்குச் சேணங்கட்டி அவர்களோடு புறப்பட்டுப் போனான்.
எண்ணாகமம் 22 : 22 (RCTA)
அவன் போனதினால் கடவுளுக்குக் கோபம் மூண்டது. ஆண்டவருடைய தூதரான ஒருவர் பாலாமுக்கு எதிரே வந்து வழியில் நின்றுகொண்டிருந்தார். பாலாமோ தன் கழுதைமேல் உட்கார்ந்திருந்தான். அவன் வேலைக்காரர் இருவரும்பக்கத்தில் நடந்து வந்தார்கள்.
எண்ணாகமம் 22 : 23 (RCTA)
வாளை உருவிப் பாதையில் நின்று கொண்டிருந்த வானவரைக் கண்டு, கழுதை வழியைவிட்டு வயலிலே விலகிப் போயிற்று. பாலாம் அதை அடித்துப் பாதையிலே திருப்ப முயன்றான்.
எண்ணாகமம் 22 : 24 (RCTA)
(அங்கே) மதில்களால் சூழப்பட்ட கொடிமுந்திரித் தோட்டங்கள் இருந்தன. வானவர் அந்த இரு சுவர்களுக்கிடையே நின்று கொண்டார்.
எண்ணாகமம் 22 : 25 (RCTA)
கோவேறு கழுதை அவரைக் கண்டு, சுவரோரமாய் ஒதுங்கி, பாலாமுடைய காலைச் சுவரோடு நெருக்கி நசுக்கி விட்டது. அவனோ அதைத் திரும்ப அடித்தான்.
எண்ணாகமம் 22 : 26 (RCTA)
அப்பொழுது வானவர் வலப்புறமும் இடப்புறமும் விலக இடமில்லாத ஒடுக்கமான இடத்தில் ஒதுங்கி நின்றார்.
எண்ணாகமம் 22 : 27 (RCTA)
நின்று கொண்டிருந்த வானவரைக் கண்டதும், கழுதை தன்மேல் உட்கார்ந்திருந்தவனுடைய கால்களின் கீழே படுத்துக் கொண்டது. பாலாம் சினம் கொண்டு கழுதையை மேன்மேலும் அடிக்க,
எண்ணாகமம் 22 : 28 (RCTA)
ஆண்டவர் கழுதையின் வாயைத் திறந்தார். அது பாலாமை நோக்கி: நீர் என்னை ஏன் அடிக்கிறீர்? மூன்று தடவையும் என்னை அடித்தீரே; நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.
எண்ணாகமம் 22 : 29 (RCTA)
என்னைக் கேலி செய்ததனால் நீ அடிக்குத்தகுதியாயிருக்கிறாய். என் கையில் ஒரு வாள் இருந்தாலோ உன்னைக் கொன்று போட்டிருப்பேன் என்றான்.
எண்ணாகமம் 22 : 30 (RCTA)
கோவேறு கழுதை: என் மீது ஏறின நாள்முதல் இந்நாள் வரையிலும் நீர் சவாரி செய்த கழுதை நான்தான் அல்லவா? இப்படி எப்போதேனும் நான் உம்மிடம் துடுக்குச் செய்ததுண்டோ என்று கேட்க, பாலாம்:
எண்ணாகமம் 22 : 31 (RCTA)
இல்லை என்றான். அந்நேரத்திலே ஆண்டவர் பாலாமுடைய கண்களைத் திறந்தார். அவன் வாள் உருவிப் பாதையில் நின்றுகொண்டிருந்த வானவரைக் கண்டு, குப்புறவிழுந்து அவரை வணங்கினான்.
எண்ணாகமம் 22 : 32 (RCTA)
வானவர் அவனை நோக்கி: உன் கோவேறு கழுதை நீ மும்முறை அடிப்பானேன்? உன் நடத்தை கெட்டது. அது எனக்கு மாறுபடாய் இருப்பதினால், நான் உனக்கு எதிரியாக வந்துநிற்கிறேன்.
எண்ணாகமம் 22 : 33 (RCTA)
உன் கேவேறு கழுதை விலகி எனக்கு இடம் கொடாதிருந்திருக்குமாயின், உன்னைக் கொன்றுவிட்டு அதை உயிரோடு விட்டு வைத்திருந்திருப்பேன் என்றார்.
எண்ணாகமம் 22 : 34 (RCTA)
பாலாம்: நான் பாவம் செய்தேன். வழியிலே நீர் எனக்கு எதிராக நின்று கொண்டிருந்தீரென்று அறியாதிருந்தேன். இப்பொழுது நான் வழிபோகிறது உமக்கு ஒவ்வாதிருக்குமாயின், இதோ திரும்பிப்போகிறேன் என்றான்.
எண்ணாகமம் 22 : 35 (RCTA)
வானவர் அவனை நோக்கி: நீ இவர்களோடு போ. ஆனால், நான் உனக்குக் கட்டளையிடும் வார்த்தையேயன்றி வேறு வார்த்தை சொல்லாதபடி நீ எச்சரிக்கையாய் இரு என்றார். அப்படியே (பாலாம்) பிரபுக்களோடு போனான்.
எண்ணாகமம் 22 : 36 (RCTA)
பாலாம் வருவதைக் கேள்வியுற்றவுடனே பாலாக் அரசன் அர்னோன் ஆற்றின் கடைசி எல்லையிலுள்ள மோவாபியரின் ஒரு நகரம்வரையிலும் அவனுக்கு எதிர்கொண்டு போய், பாலாமை நோக்கி:
எண்ணாகமம் 22 : 37 (RCTA)
நான் உம்மை அழைக்கும்படி பிரதிநிதிகளை அனுப்பியிருந்தேனே; நீர் விரைவாய் என்னிடம் ஏன் வரவில்லை? தகுந்த பரிசில் உமக்குக் கொடுக்க என்னால் இயலாதென்று நினைத்துத்தானோ அப்படிச் செய்தீர் என்று வினவினான்.
எண்ணாகமம் 22 : 38 (RCTA)
அதற்குப் பாலாம்: இதோ வந்தேன். கடவுள் என் வாயிலே வைக்கும் வார்த்தையையன்றி வேறு வார்த்தை சொல்ல என்னால் ஆகுமோ என்று பதில் கூறினான்.
எண்ணாகமம் 22 : 39 (RCTA)
அதன்பின் அவர்கள் இருவரும் கூடிப்போய், (பாலாக்கின்) நாட்டைச் சேர்ந்த கடைசி எல்லையிலுள்ள ஒரு நகரத்தை அடைந்தார்கள்.
எண்ணாகமம் 22 : 40 (RCTA)
அங்கே பாலாக் ஆடுமாடுகளைப் பலியிட்டு பாலாமுக்கும் அவனோடிருந்த பிரவுக்களுக்கும் பரிசில்கள் அனுப்பினான்.
எண்ணாகமம் 22 : 41 (RCTA)
மறுநாள் காலையில் பாலாக் (அரசன்) பாலாமை அழைத்து, பாவால் மேடுகளின்மேல் அவனைக் கூட்டிக் கொண்டுபோனான். பாலாம் அங்கிருந்து இஸ்ராயேலருடைய கடைசிப் பாளையத்தை பார்த்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41

BG:

Opacity:

Color:


Size:


Font: