எண்ணாகமம் 17 : 1 (RCTA)
பின் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ இஸ்ராயேல் மக்களோடு பேசி,
எண்ணாகமம் 17 : 2 (RCTA)
அவர்களின் ஒவ்வொரு கோத்திரத் தலைவனுக்கும் ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பெயர் எழுதுவாய்.
எண்ணாகமம் 17 : 3 (RCTA)
லேவியினுடைய கோத்திரத்திற்கு ஆரோனுடைய பெயரை எழுதக் கடவாய்.
எண்ணாகமம் 17 : 4 (RCTA)
அன்றியும், வேறொரு கோலிலே எல்லாக் கோத்திரங்களின் பெயரும் வேறு வேறாக எழுதப்படவேண்டும். அவைகளை உடன்படிக்கைக் கூடாரத்திலே வாக்குத்தத்தத்தின் கூடாரத்துக்கு முன் வைப்பாய்.
எண்ணாகமம் 17 : 5 (RCTA)
அங்கு நாம் உன்னோடு பேசுவோம். அவர்களில் நாம் எவனைத் தெரிந்து கொண்டோமோ அவனுடைய கோல் துளிர்க்குமாகையால், இஸ்ராயேல் மக்கள் உங்களை விரோதித்து முறுமுறுக்கிற முறைப்பாடுகளை இவ்வாறு நிறுத்துவோம் (என்றருளினார்).
எண்ணாகமம் 17 : 6 (RCTA)
அவ்வாறே மோயீசன் இஸ்ராயேல் மக்களோடு பேசினவுடனே, ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவனும் ஒவ்வொரு கோலைக் கொடுத்தான். ஆரோனுடைய கோலைத் தவிர பன்னிரண்டு கோல்கள் இருந்தன.
எண்ணாகமம் 17 : 7 (RCTA)
மோயீசன் அவைகளைச் சாட்சியக் கூடாரத்தில் ஆண்டவர் முன்னிலையில் வைத்தார்.
எண்ணாகமம் 17 : 8 (RCTA)
மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது ஆரோனுடைய கோல் துளிர்விட்டிருக்கவும், துளிர்கள் வளர்ந்து பூத்திருக்கவும், பூக்கள் மலர்ந்து வாதுமைப் பிஞ்சுகள் தோன்றியிருக்கவும் கண்டார்.
எண்ணாகமம் 17 : 9 (RCTA)
அப்பொழுது மோயீசன் ஆண்டவருடைய முன்னிலையிலிருந்து எல்லாக் கோல்களையும் இஸ்ராயேல் மக்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதைப் பார்த்தபிறகு, தத்தம் கோலை வாங்கிக் கொண்டனர்.
எண்ணாகமம் 17 : 10 (RCTA)
அந்நேரத்தில் ஆண்டவர் மோயீசனை நோக்கி: ஆரோனின் கோலை நீ கொண்டு போய், கலகக்காரராகிய இஸ்ராயேல் மக்களுக்கு எச்சரிக்கைக் குறிப்பாக அதை உடன்படிக்கைக் கூடாரத்திலே வைக்கவேண்டும். இப்படி நமக்கு முன்பாக அவர்களுடைய முறுமுறுப்பு ஒழியாவிட்டால், அவர்கள் செத்துப்போவார்களென்று அஞ்சக்கடவார்கள் என்றார்.
எண்ணாகமம் 17 : 11 (RCTA)
மோயீசன் ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்.
எண்ணாகமம் 17 : 12 (RCTA)
இஸ்ராயேல் மக்களோ மோயீசனை நோக்கி இதோ பாரும்: நாங்கள் எல்லாரும் மடிந்து அழிந்து போகிறோமே!
எண்ணாகமம் 17 : 13 (RCTA)
ஆண்டவருடைய ஆலயத்தை அணுகுகிற எவனும் சாகிறானே! நாங்கள் எல்லாரும் செத்துத்தான் தீருவோமோ? என்றார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13