நெகேமியா 5 : 1 (RCTA)
அப்பொழுது சாதாரண மனிதர்களும் அவர்கள் மனைவியரும் தங்கள் சகோதரரான யூதர்களுக்கு எதிராகப் பெரிதும் முறையிட்டனர்.
நெகேமியா 5 : 2 (RCTA)
அவர்களுள் சிலர், "எங்கள் புதல்வர் புதல்வியரைச் சேர்த்து நாங்கள் அதிகம் பேர். எனவே, நாங்கள் உண்டு உயிர் வாழும் பொருட்டு எங்களுக்குத் தானியம் கிடைக்கச் செய்யுங்கள்" என்றனர்.
நெகேமியா 5 : 3 (RCTA)
இன்னும் சிலர், "எங்கள் நிலங்களையும் திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் நாங்கள் ஒற்றி வைத்து இப்பஞ்சத்தில் பிழைக்கத் தானியம் வாங்கினோம்" என்றனர்.
நெகேமியா 5 : 4 (RCTA)
வேறு சிலரோ, "நாங்கள் அரசருக்குச் செலுத்த வேண்டிய கப்பத்திற்காக, எங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் ஒற்றி வைத்துப் பணம் வாங்கினோம்.
நெகேமியா 5 : 5 (RCTA)
நாங்கள் வேறு, எம் சகோதரர் வேறா? எம் மக்களும் அவர்களுடைய மக்களும் ஒன்று தானோ! ஆயினும் நாங்கள் இதோ எங்கள் புதல்வர்களையும் புதல்வியரையும் அடிமைகளாய் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே! எங்கள் புதல்வியருள் சிலர் ஏற்கெனவே அடிமைகள் ஆகிவிட்டனர். அவர்களை மீட்கவோ எங்களுக்கு வசதி இல்லை. எங்கள் நிலங்களும் திராட்சைத் தோட்டங்களும் அந்நியரின் கைகளில் இருக்கின்றன" என்று முறுமுறுத்தனர்.
நெகேமியா 5 : 6 (RCTA)
இவ்வாறு அவர்கள் எழுப்பின கூக்குரலைக் கேட்ட நான் கோபம் கொண்டேன்.
நெகேமியா 5 : 7 (RCTA)
பிறகு நான் என்னுள் சிந்தித்து, பெரியோரையும் மக்கள் தலைவர்களையும் கண்டித்தேன். "நீங்கள் உங்கள் சகோதரர்களிடமிருந்து அநியாய வட்டி வாங்குவது ஏன்?" என்று கேட்டேன். அவர்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டினேன்.
நெகேமியா 5 : 8 (RCTA)
அவர்களைப் பார்த்து, "நீங்கள் அறிந்திருக்கிறது போல், நாங்கள் புறவினத்தாருக்கு விற்கப்பட்டிருந்த யூதர்களான நம் சகோதரரை நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு மீட்டு வந்துள்ளோம். ஆனால் நீங்களோ நமக்கே அடிமைகளாகும் பொருட்டு உங்கள் சகோதரரை விற்கவும் துணிந்து விட்டீர்களே, இது முறையா?" என்று கேட்டேன். அவர்கள் இதைக்கேட்டு மறுமொழி கூறாது மௌனமாய் இருந்தனர்.
நெகேமியா 5 : 9 (RCTA)
மீண்டும் நான் அவர்களை நோக்கி, "நீங்கள் செய்வது சரியன்று. நம் எதிரிகளான புறவினத்தார் நம்மை ஏளனம் செய்யாதவாறு நீங்கள் நம் கடவுளுக்கு அஞ்சி நடப்பதே முறை.
நெகேமியா 5 : 10 (RCTA)
நானும் என் சகோதரரும் என் ஊழியரும் பலருக்குப் பணத்தையும் தானியத்தையும் கடனாகக் கொடுத்து வருகிறோம். நாம் அக் கடனைக் கேளாது விட்டு விடுவோம்.
நெகேமியா 5 : 11 (RCTA)
இன்றே நீங்கள் அவர்கள் நிலங்களையும் திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும் வீடுகளையும் அவரவருக்குத் திருப்பிக் கொடுத்து விடுங்கள். மேலும் நீங்கள் அவர்களுக்குக் கடனாகக் கொடுத்திருக்கும் பணம், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றிற்கு அவர்களிடமிருந்து வட்டி வாங்க வேண்டாம்" என்று சொன்னேன்.
நெகேமியா 5 : 12 (RCTA)
அதற்கு அவர்கள், "நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்து விடுவோம். அவர்களிடம் வட்டி ஒன்றும் கேட்கமாட்டோம். நீர் சொன்னவாறே செய்வோம்" என்றனர். அப்பொழுது நான் குருக்களை அழைத்து, நான் சொன்னவாறு நடக்க வேண்டும் என்று அவர்களை ஆணையிடச் செய்தேன்.
நெகேமியா 5 : 13 (RCTA)
மேலும் நான் என் ஆடைகளை உதறி விட்டு, "இவ்வார்த்தைகளை நிறைவேற்றாதவன் எவனோ அவனைக் கடவுள் இவ்வாறே தம் வீட்டினின்றும் தம் திருப்பணியினின்றும் உதறிவிடக்கடவார். இவ்வாறு அவன் உதறி விடப்பட்டு வெறுமையாய்ப் போகக்கடவான்" என்று கூறினேன். இதற்கு எல்லாரும், "ஆமென்" என்று சொல்லிக் கடவுளைப் புகழ்ந்தனர்; பின்னர் தாம் சொன்னவாறே செய்து வந்தனர்.
நெகேமியா 5 : 14 (RCTA)
யூதா நாட்டில் ஆளுநராய் இருக்குமாறு அரசர் எனக்குக் கட்டளையிட்ட நாள் முதல், அதாவது அர்தக்சேர்செஸ் அரசரின் இருபதாம் ஆண்டுமுதல் முப்பத்திரண்டாம் ஆண்டுவரை, இப்பன்னிரண்டு ஆண்டுக் காலமாய் மக்கள் ஆளுநர்களுக்குச் செலுத்த வேண்டிய ஆண்டுப் படியை நானும் என் சகோதரரும் வாங்கிச் சாப்பிட்டதில்லை.
நெகேமியா 5 : 15 (RCTA)
எனக்கு முன் இருந்த ஆளுநர்களோ அதிகம் வரி விதித்து மக்களை வதைத்திருந்தனர். அதாவது, அவர்கள் நாற்பது சீக்கல் வெள்ளியோடு, உணவு, திராட்சை இரசம் முதலியவற்றையும் நாளும் வாங்கி வந்தனர். அவர்களுடைய வேலைக்காரரும் அதிகாரம் செலுத்தி அவர்களை நெருக்கி வந்தனர். நானோ கடவுளுக்கு அஞ்சி அவ்வாறு செய்யவில்லை.
நெகேமியா 5 : 16 (RCTA)
மேலும் மதில் வேலையை நானும் சேர்ந்தே செய்தேன்; ஒரு நிலத்தையாவது நான் வாங்கியதில்லை. என் ஊழியர் அனைவரும் அவ்வேலைக்கென்றே கூடி வந்தார்கள்.
நெகேமியா 5 : 17 (RCTA)
அதுவுமன்றி யூதர்களும் மக்கள் தலைவர்களுமான நூற்றைம்பது பேரோடு, அண்டை நாட்டினின்று வந்திருந்த புறவினத்தார் அனைவருமே என் பந்தியில் உணவு அருந்தினார்கள்.
நெகேமியா 5 : 18 (RCTA)
நாள் ஒன்றுக்கு கோழிகளைத் தவிர ஒரு காளையும் முதல் தரமான ஆறு ஆடுகளும் செலவாயின. பத்து நாளுக்கு ஒரு முறை பலவிதமான திராட்சை இரசமும் எராளமாக அவர்களுக்குப் பரிமாறப்பட்டது. எனினும் மக்கள் மிகவும் ஏழ்மையுற்றிருந்ததினால், ஆளுநர்க்குரிய ஆண்டுப் படியை நான் பெற்றுக் கொள்ளவில்லை.
நெகேமியா 5 : 19 (RCTA)
என் கடவுளே, நான் இம் மக்களுக்குச் செய்துள்ள எல்லாவற்றிற்கும் ஏற்ப நீர் என் மேல் இரக்கமாயிரும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19