நாகூம் 3 : 1 (RCTA)
இரத்தக்கறை படிந்த நகரத்துக்கு ஐயோ கேடு! அதில் பொய்களும் கொள்ளைப் பொருளும் நிறைந்துள்ளன, சூறையாடல் அங்கே ஓயாமல் நடக்கிறது.
நாகூம் 3 : 2 (RCTA)
இதோ சாட்டைகளின் ஓசை, சக்கரங்களின் கிறீச்சொலி, தாவிப்பாயும் குதிரைகள், உருண்டு வரும் தேர்கள்!
நாகூம் 3 : 3 (RCTA)
சீறித் தாக்கும் குதிரை வீரர்கள், மின்னும் வாள், பளபளக்கும் ஈட்டி, வெட்டுண்டவர்களின் கூட்டம், பிணங்களின் குவியல், செத்தவர்களுக்குக் கணக்கில்லை- பிணங்களின்மேல் இடறி விழுகின்றனர்!
நாகூம் 3 : 4 (RCTA)
இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன? பேரழகும் கவர்ச்சியும் நிறைந்தவளாய், தன் வேசித்தனங்களால் மக்களினங்களையும், தன் மயக்கும் கவர்ச்சியால் கோத்திரங்களையும், விற்றுப்போடுகிற அந்த விலைமகளின் கணக்கிலடங்காத வேசித்தனங்களே காரணம்.
நாகூம் 3 : 5 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, நாம் உனக்கெதிராக இருக்கிறோம் உன் முகத்துக்கு மேலாக உன் உள்ளாடையைத் தூக்குவோம்; மக்களினங்கள் உன் அவமானத்தையும், அரசுகள் உன் ஈனத்தையும் பார்க்கும்படி செய்வோம்;
நாகூம் 3 : 6 (RCTA)
அருவருப்பானவற்றை உன்மீது எறிவோம், உன்னை வெறுப்புடன் நடத்திப் பகடிப்பொருள் ஆக்குவோம்;
நாகூம் 3 : 7 (RCTA)
உன்னை ஏறெடுத்துப் பார்ப்பவரெல்லாம் பின்வாங்கி, ' நினிவே பாழாய்ப் போய்விட்டது' என்று சொல்லுவார்கள்; உனக்காக இரங்குவோர் உண்டோ? உனக்கு ஆறுதல் சொல்வாரை எங்கே தேடுவோம்?
நாகூம் 3 : 8 (RCTA)
நைல் நதியின் கரையருகில் நீரால் சூழ்ந்து, கடலை நீரரணாகவும், தண்ணீரை மதிலாகவும் கொண்ட நோ-அமோனை விட நீ சிறப்புற்றாயோ?
நாகூம் 3 : 9 (RCTA)
எத்தியோப்பியாவும் எகிப்தும் அதன் வலிமையாயிருந்தன, அந்த வலிமைக்கு எல்லையில்லை; ஆப்பிரிக்காவும் லிபியும் உதவியாய் இருந்தன.
நாகூம் 3 : 10 (RCTA)
இருந்தும் அந்நாட்டு மக்கள் சிறை பிடிக்கப்பட்டனர், அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்; அதன் குழந்தைகள் தெருக்கள் தோறும் நசுக்கப் பட்டனர், அதன் பெருங்குடி மக்கள் மேல் சீட்டுப் போடப்பட்டது, அந்நாட்டின் பெரிய மனிதர்கள் அனைவரும் சங்கிலிகளால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர்.
நாகூம் 3 : 11 (RCTA)
நீயும் குடிவெறியேறிக் கிடப்பாய், அனைவரும் உன் மேல் அருவருப்புக் கொள்வர்; நீயும் உன் பகைவனிடமிருந்து தப்பப் புகலிடம் தேடியலைய நேரிடும்.
நாகூம் 3 : 12 (RCTA)
உன் அரண்கள் யாவும் முன்பே பழுத்த கனிகள் நிறைந்த அத்தி மரங்களுக்கு ஒப்பானவை; மரங்களைப் பிடித்து உலுக்கினால், பழங்கள் தின்பவன் வாயில் விழும்.
நாகூம் 3 : 13 (RCTA)
இதோ, உன்னிடத்தில் இருக்கும் போர் வீரர்கள் உன்னிடமுள்ள பெண்களே! உன் நாட்டு வாயில்கள் பகைவர்க்குப் பரக்கத் திறந்துள்ளன, உன் தாழ்ப்பாள்கள் நெருப்புக்கு இரையாயின.
நாகூம் 3 : 14 (RCTA)
முற்றுகை நாட்களுக்காகத் தண்ணீர் சேமித்து வை, உன்னுடைய அரண்களை வலிமைப்படுத்து; களி மண்ணைப் பிசைந்துச் சேறாக்கு, செங்கல் அறுக்கச் சட்டங்களை எடு.
நாகூம் 3 : 15 (RCTA)
ஆயினும் நெருப்பு உன்னை விழுங்கும், வாளால் நீ வெட்டுண்டு மடிவாய், வெட்டுக்கிளி போல் உன்னை விழுங்கி விடும். வெட்டுக்கிளிகள் பறந்தோடுகின்றன: வெட்டுக்கிளி போல நீங்கள் பலுகுங்கள், பச்சைக்கிளி போல நீங்கள் பெருகுங்கள்;
நாகூம் 3 : 16 (RCTA)
விண்மீன்களை விட மிகுதியாக உன் வணிகர்களைப் பெருகச்செய்தாய்; வெட்டுக்கிளி இறக்கையை விரித்துப் பறந்தோடி விடுகிறது.
நாகூம் 3 : 17 (RCTA)
உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும், உன் அரசியல் அலுவலர்கள் வெட்டுக்கிளி கூட்டத்திற்கும் நிகர்; குளிர்ந்த நாளில் வேலிகள் மேல் உட்கார்ந்திருக்கின்றன, கதிரவன் எழுந்ததும் பறந்தோடி விடுகின்றன; அதன் பின் எங்கிருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.
நாகூம் 3 : 18 (RCTA)
அசீரிய அரசனே, உன் மேய்ப்பர்கள் துயில் கொண்டனர், உன் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர், கூட்டுவாரின்றி உன் மக்கள் மலைகளில் சிதறிப்போயினர்.
நாகூம் 3 : 19 (RCTA)
உன் காயத்துக்கு மருந்தில்லை, உன் புண் குணமாகாது; உன்னைப் பற்றிய செய்தி கேட்கும் யாவரும் கைகொட்டுவர்; ஏனெனில் உன் இடைவிடாக் கொடுமையால் துன்புறாதவர் உண்டோ?
❮
❯