மீகா 4 : 1 (RCTA)
இறுதி நாட்களில் ஆண்டவரின் கோயில் அமைந்துள்ள மலை மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நாட்டப் படும், குன்றுகளுக்கெல்லாம் மேலாக உயர்த்தப்படும், பலநாட்டு மக்கள் அதை நோக்கி ஓடிவருவர்.
மீகா 4 : 2 (RCTA)
மக்களினங்கள் கூடிவந்து, "வாருங்கள், ஆண்டவரின் மலைக்கு ஏறிச்செல்வோம், யாக்கோபின் கடவுளது கோயிலுக்குப் போவோம்; தம்முடைய வழிகளை அவர் நமக்குக் கற்பிப்பார், நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள். ஏனெனில் சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளியாகும், யெருசலேமிலிருந்தே ஆண்டவர் வாக்கு புறப்படும்.
மீகா 4 : 3 (RCTA)
பலநாட்டு மக்களுக்கிடையில் அவரே தீர்ப்பிடுவார், தொலைநாடுகளிலும் வலிமை மிக்க மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்; அவர்களோ, தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; நாட்டுக்கு எதிராய் நாடு வாள் எடுக்காது, அவர்களுக்கு இனிப் போர்ப்பயிற்சியும் அளிக்கப்படாது;
மீகா 4 : 4 (RCTA)
அவர்களுள் ஒவ்வொருவனும் தன் தன் திராட்சைக் கொடியின் கீழும், அத்தி மரத்தினடியிலும் அமர்ந்திருப்பான்; அவர்களை அச்சுறுத்துகிறவன் எவனுமில்லை, ஏனெனில் சேனைகளின் ஆண்டவரே இதைத் திருவாய் மலர்ந்தார்.
மீகா 4 : 5 (RCTA)
மக்களினங்கள் யாவும் தத்தம் கடவுளின் பேரால் நடப்பர், நாமோ நம் கடவுளாகிய ஆண்டவர் பேரால் என்றென்றும் நடப்போம்.
மீகா 4 : 6 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: அந்நாளில் நொண்டிகளை நாம் ஒன்றாய்ச் சேர்ப்போம், விரட்டப் பட்டோரையும் நாம் துன்புறுத்தியவர்களையும் கூட்டுவோம்.
மீகா 4 : 7 (RCTA)
நொண்டிகளை எஞ்சியிருக்கும் மக்களாய் ஆக்குவோம், விரட்டப்பட்டவர்களை வலிமையான இனமாக்குவோம்; அன்று முதல் என்றென்றைக்கும் ஆண்டவரே சீயோன் மலையிலிருந்து அவர்கள் மேல் அரசு செலுத்துவார்.
மீகா 4 : 8 (RCTA)
கிடையின் காவற் கோபுரமே, சீயோன் மகளெனும் மலையே, முதல் ஆளுகை, யெருசலேம் மகளின் அரசு உன்னிடம் வரும்.
மீகா 4 : 9 (RCTA)
இப்பொழுது நீ ஓலமிட்டுக் கதறுவானேன்? உன்னிடத்தில் அரசன் இல்லாமற் போயினானோ? பிரசவிக்கும் பெண்ணைப் போல நீ இவ்வாறு வேதனைப்பட உன் ஆலோசனைக்காரன் அழிந்து விட்டானோ?
மீகா 4 : 10 (RCTA)
சீயோன் மகளே, பிரசவ வேதனையிலிருப்பவளைப் போல நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு; ஏனெனில் இப்பொழுது நீ நகரத்தை விட்டு வெளியேறி நாட்டுப்புறத்தில் வாழ்வாய்; பபிலோனுக்குப் போவாய்; ஆங்கே நீ விடுதலை பெறுவாய், உன் பகைவர் கையிலிருந்து உன்னை ஆண்டவர் மீட்பார்.
மீகா 4 : 11 (RCTA)
பலநாட்டு மக்கள் உனக்கெதிராய் இப்பொழுது கூடுகின்றனர், "அந்நகரம் தீட்டுப்படக் கடவது, நம் கண் சீயோனின் அழிவைப் பார்த்துப் பூரிக்கக்கடவது" என்கிறார்கள்.
மீகா 4 : 12 (RCTA)
ஆனால் ஆண்டவரின் எண்ணங்கள் அவர்களுக்குத் தெரியாதவை, அவருடைய திட்டத்தை அவர்கள் கண்டு உணர்கிறதில்லை. புணையடிக்கும் களத்தில் அரிக்கட்டுகளைச் சேர்ப்பது போல் அவரும் அவர்களைச் சேர்த்து வைத்திருக்கிறார்.
மீகா 4 : 13 (RCTA)
சீயோன் மகளே, நீ எழுந்து புணையடி; ஏனெனில் நாம் உனக்கு இருப்புக் கொம்பும் வெண்கலக் குளம்புகளும் தருவோம்; மக்களினங்கள் பலவற்றை நீ நொறுக்குவாய், அவர்களிடம் கொள்ளை அடித்ததையும், அவர்களின் கருவூலங்களையும் அனைத்துலக இறைவனாகிய ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்.
❮
❯