மீகா 3 : 1 (RCTA)
அப்பொழுது நான் சொன்னேன்: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ராயேல் வீட்டாரை ஆள்பவர்களே, கேளுங்கள்! நீதியை அறிந்து கொள்வது உங்கள் கடமையன்றோ?
மீகா 3 : 2 (RCTA)
நீங்களோ நன்மையைப் பகைத்துத் தீமையை இச்சிக்கிறீர்கள், என் மக்களின் தோலையுரிக்கிறீர்கள், அவர்களின் எலும்புகளிலிருந்து சதையைக் கிழிக்கிறீர்கள்.
மீகா 3 : 3 (RCTA)
அந்தத் தலைவர்கள் என் மக்களின் சதையைத் தின்கிறார்கள், அவர்களுடைய தோலையுரிக்கிறார்கள்; அவர்கள் எலும்புகளை முறித்துச் சட்டியில் வேகும் சதை போலவும், கொப்பரையில் போடும் இறைச்சி போலவும் துண்டிக்கிறார்கள்.
மீகா 3 : 4 (RCTA)
பின்னர் அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுவர், ஆனால் அவர்களுக்கு அவர் செவிசாய்க்க மாட்டார்; அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்வார்; ஏனெனில் அவர்கள் கொடிய செயல்கள் புரிந்தார்கள்.
மீகா 3 : 5 (RCTA)
என் மக்களைத் தவறான நெறியில் நடத்துகிற தீர்க்கதரிசிகளைக் குறித்து ஆண்டவர் சொல்லுகிறார்: வயிற்றுக்குத் தீனி கிடைக்கும் வரையில் "சமாதானம்!" என்று முழங்குகிறார்கள்; எவனாவது அவர்களுக்கு உண்ணக் கொடுக்கவில்லையெனில், அவனுக்கு எதிராய்ப் போர் தொடுக்கிறார்கள்.
மீகா 3 : 6 (RCTA)
ஆதலால் உங்களை இருள் சூழும், இனிக்காட்சி கிடைக்காது, காரிருள் கவ்விக்கொள்ளும், முன்னுரைத்தல் இராது; தீர்க்கதரிசிகளுக்கு அந்திக்காலம் வந்துவிட்டது; பகலும் அவர்களுக்கு இருளாக இருக்கும்.
மீகா 3 : 7 (RCTA)
காட்சி காண்பவர்கள் வெட்கிப்போவார்கள், முன்னுரைப்பவர்களும் நாணிப் போவார்கள்; அவர்கள் அனைவரும் வாயைப் பொத்திக் கொள்வார்கள்; ஏனெனில் கடவுளிடமிருந்து வாக்கு ஏதும் வாராது.
மீகா 3 : 8 (RCTA)
ஆனால் யாக்கோபுக்கு அதன் அக்கிரமத்தையும், இஸ்ராயேலுக்கு அதன் பாவத்தையும் எடுத்துக்காட்ட நான் வல்லமையாலும் ஆண்டவரின் ஆவியாலும், நீதியாலும் ஆற்றலாலும் நிரப்பப்பட்டுள்ளேன்.
மீகா 3 : 9 (RCTA)
யாக்கோபு வீட்டாரின் தலைவர்களே, இஸ்ராயேல் வீட்டாரை ஆள்பவர்களே, நீதியானதை அருவருத்து நேர்மையானதையெல்லாம் கோணலாக்குகிறவர்களே,
மீகா 3 : 10 (RCTA)
இரத்தப்பழியால் சீயோனையும், அக்கிரமத்தால் யெருசலேமையும் கட்டியெழுப்புகிறவர்களே, இதைக் கேளுங்கள்:
மீகா 3 : 11 (RCTA)
அதன் தலைவர்கள் கையூட்டு வாங்கிக் கொண்டு வழக்குத் தீர்க்கிறார்கள்; அதன் அர்ச்சகர்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர், அதன் தீர்க்கதரிசிகள் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர். இவ்வளவும் செய்து கொண்டே "ஆண்டவர் நம் நடுவில் இருக்கிறாரல்லரோ? தீங்கெதுவும் நமக்கு நேராது" என்று சொல்லி, ஆண்டவரை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மீகா 3 : 12 (RCTA)
ஆதலால், உங்களை முன்னிட்டு சீயோன் வயல் வெளியைப் போல் உழப்படும், யெருசலேம் பாழடைந்த மண் மேடாகும், திருக்கோயிலுள்ள மலையானது காடாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12