மீகா 2 : 1 (RCTA)
தங்கள் படுக்கைகளில் தீமையைத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் அதைச் செய்து முடிக்கிறார்கள், அவர்கள் கைகளும் அந்தத் திறமையைக் கொண்டுள்ளன!
மீகா 2 : 2 (RCTA)
நிலங்கள் மேல் ஆசை கொண்டு வலுவந்தமாய்ப் பிடுங்குகிறார்கள், வீடுகளை விரும்பி வஞ்சகமாய்க் கவர்கிறார்கள்; ஆளையும் வீட்டையும் பறிமுதல் செய்து, ஒடுக்கிச் சொந்தக்காரனையும் சொத்தையும் கவர்ந்து கொள்ளுகிறார்கள்.
மீகா 2 : 3 (RCTA)
ஆதலால் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ, இந்த இனத்தார்க்கும் எதிராய் நாமே தீமை செய்யத் திட்டமிடுகிறோம்; அதினின்று உங்கள் தலையை உங்களால் விடுவிக்க இயலாது; நீங்கள் இறுமாந்து நடக்கமாட்டீர்கள், ஏனெனில் காலம் பொல்லாததாய் இருக்கும்.
மீகா 2 : 4 (RCTA)
அந்நாளில் மக்கள் உங்கள்மேல் வசைப்பாடல் புனைந்து, "நாங்கள் முற்றிலும் பாழாய்ப்போனோம், என் மக்களின் உரிமைச் சொத்து பறிபோயிற்று. ஐயோ, என்னிடமிருந்து அது பறிக்கப்படுகிறதே! கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறதே!" என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.
மீகா 2 : 5 (RCTA)
ஆகையால், நூல் பிடித்துப் பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் ஆண்டவரின் சபையில் ஒருவனும் இரான்.
மீகா 2 : 6 (RCTA)
பிதற்றாதீர்கள்" என்று அவர்கள் பிதற்றுகிறார்கள்; "இப்படியெல்லாம் பிதற்றல் வேண்டா, எந்த வகையான அவமானமும் நேரிடாது;
மீகா 2 : 7 (RCTA)
யாக்கோபின் வீடு சாபத்திற்குள்ளாகுமோ? ஆண்டவர் பொறுமையை இழந்துவிட்டாரோ? அவரது செயல்முறை இதுதானோ? தம் மக்களாகிய இஸ்ராயேலுக்கு அவர் பேசுவதெல்லாம் பரிவுள்ள சொற்களல்லவோ?" என்கிறார்கள்.
மீகா 2 : 8 (RCTA)
ஆனால் நீங்கள் தான் நம் மக்களுக்கு விரோதமாய்ப் பகைவனைப் போல் எழும்புகிறீர்கள்; மாசற்றவனிடமிருந்து மேலாடையைப் பறிக்கிறீர்கள், அமைதியாய் இருப்பவன் மேல் போர் தொடுக்கிறீர்கள்.
மீகா 2 : 9 (RCTA)
எம் மக்களின் பெண்களை நீங்கள் அவர்களுடைய இனிமையான வீடுகளிலிருந்து விரட்டுகிறீர்கள்; அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடமிருந்து என்றென்றைக்கும் நம் மகிமையை எடுத்து விடுகிறீர்கள்.
மீகா 2 : 10 (RCTA)
எழுந்து போய்விடுங்கள், இது இளைப்பாறும் இடமன்று; நாடு தீட்டுப்பட்டுவிட்டது, பேரழிவுக்கு உள்ளாகப் போகிறது.
மீகா 2 : 11 (RCTA)
திராட்சை இரசத்தையும் மதுவையும் உங்களுக்கு நான் பொழிவேன்" என்று வீண் சொற்களையும் பொய்களையும் ஒருவன் பிதற்றினால், அவனே இந்த மக்களுக்குகந்த தீர்க்கதரிசி.
மீகா 2 : 12 (RCTA)
யாக்கோபே, உங்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்ப்போம், இஸ்ராயேலில் எஞ்சினோரை ஒன்று கூட்டுவோம்; ஆடுகளைக் கிடையில் மடக்குவதுபோலும், மந்தையை மேய்ச்சல் நிலத்தில் வளைப்பது போலும் ஒன்றாக உங்களைக் கூட்டிச் சேர்ப்போம்; வருகின்ற கூட்டத்தின் ஆரவாரம் மிகுதியாய் இருக்கும்.
மீகா 2 : 13 (RCTA)
வழியைத் திறப்பவர் அவர்கள் முன்னால் நடப்பார், அவர் முன்னால் நடக்க, அவர்கள் உள்ளே போய் வெளியே வருவார்கள்; அவர்களுடைய அரசர் அவர்களுக்கு முன்னால் செல்வார், ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்.
❮
❯