மீகா 1 : 1 (RCTA)
யூதாவின் அரசர்களாகிய யோவாத்தான், ஆக்காஸ், எசேக்கியாஸ் ஆகியவர்களின் காலத்தில் மோரெஷூத் ஊராராகிய மிக்கேயாசுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் யெருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே:
மீகா 1 : 2 (RCTA)
மக்களினங்களே, நீங்களனைவரும் கேளுங்கள்; மண்ணுலகமே, அதிலுள்ளவையே, நீங்களும் செவிசாயுங்கள்; இறைவனாகிய ஆண்டவர் உங்களுக்கு எதிராய்ச் சாட்சிகூறப் போகிறார்; ஆண்டவர் தமது பரிசுத்த கோயிலிலிருந்து பேசுகிறார்.
மீகா 1 : 3 (RCTA)
இதோ, ஆண்டவர் தம் இருப்பிடத்திலிருந்து புறப்படுகிறார், இறங்கி வந்து உயர்ந்த இடங்களை மிதித்து நடப்பார்;
மீகா 1 : 4 (RCTA)
நெருப்பின் முன்னால் வைக்கப்பட்ட மெழுகு போலவும், பாதாளத்தில் பாய்ந்தோடும் வெள்ளம் போலவும் அவர் காலடியில் மலைகள் கரைந்து போகும், பள்ளத்தாக்குகள் பிளந்து போகும்.
மீகா 1 : 5 (RCTA)
இவையெல்லாம் யாக்கோபின் மீறுதலை முன்னிட்டும், இஸ்ராயேல் வீட்டாரின் பாவங்களை முன்னிட்டும் நேரிடும். யாக்கோபின் குற்றம் யாது? சமாரியா அல்லவோ? யூதா வீட்டாரின் பாவம் யாது? யெருசலேம் அல்லவோ?
மீகா 1 : 6 (RCTA)
ஆகையால் சமாரியாவைப் பாழடைந்த மண்மேடாகவும், திராட்சைத் தோட்டங்கள் வைக்கும் இடமாகவும் செய்வோம்; அதன் கற்களைப் பள்ளத்தாக்குகளில் உருட்டி விடுவோம், அதன் அடிப்படைகளை வெளியில் வாரி எறிவோம்.
மீகா 1 : 7 (RCTA)
அதன் படிமங்கள் யாவும் துகள் துகளாக்கப்படும், வருமானங்கள் எல்லாம் நெருப்பினால் எரிக்கப்படும்; அதன் சிலைகளை எல்லாம் நாம் நொறுக்கிப் போடுவோம். ஏனெனில் விலைமகளுக்குரிய பணயமாய் அவை சேர்க்கப்பட்டவை, விலைமகளுக்குரிய பணயமாகவே அவை போய்விடும்.
மீகா 1 : 8 (RCTA)
ஆதலால் நான் ஓலமிட்டழுவேன், வெறுங்காலோடும் ஆடையின்றியும் திரிவேன்; குள்ளநரிகள் போல் ஊளையிடுவேன், நெருப்புக்கோழிகள் போலப் புலம்புவேன்.
மீகா 1 : 9 (RCTA)
அதன் புண் ஆறாதது, யூதா வரையில் புரையோடியுள்ளது, என் மக்களின் வாயிலாகிய யெருசலேம் வரை வந்து விட்டது.
மீகா 1 : 10 (RCTA)
காத் நகரத்தில் இதை அறிவித்தல் வேண்டா, கண்ணீர் சிந்திப் புலம்ப வேண்டா; பேத்- லெயாபிராவில் புழுதியில் விழுந்து புரளுங்கள்.
மீகா 1 : 11 (RCTA)
ஷாப்பீரின் குடிகளே, ஆடையின்றி நாணத்துடன் அகலுங்கள், ஸானானில் வாழ்பவர்கள் வெளியில் புறப்படவில்லை; பேத்- எசெல் தனது அடித்தளத்தினின்று, உறுதியான அடைப்படையிலிருந்து தகர்க்கப்பட்டது.
மீகா 1 : 12 (RCTA)
மாரோத் நகர மக்கள் நன்மை வருமென ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர், ஏனெனில் தீங்கு ஆண்டவரிடமிருந்து இறங்கி யெருசலேமின் வாயில் மேல் விழுந்தது.
மீகா 1 : 13 (RCTA)
லாக்கீஷ் நகரமே, விரைந்தோடும் குதிரைகளைத் தேர்களோடு சேர்த்துப் பூட்டு; சீயோன் மகளின் பாவத்திற்கு நீயே ஊற்று, இஸ்ராயேலின் குற்றங்களை முதலில் பின்பற்றியது நீயே.
மீகா 1 : 14 (RCTA)
ஆதலால், மோரெஷூத் - காத்துக்கு நீ சீதனம் கொடுப்பாய், ஆக்ஸிப் வீடுகள் இஸ்ராயேல் அரசர்களுக்குக் கானல் நீராய்ப் போகும்.
மீகா 1 : 15 (RCTA)
மரேஷா குடிகளே, கொள்ளைக் காரன் உங்கள் மேல் திரும்பவும் வருவான், இஸ்ராயேலின் மகிமை அதுல்லாம் வரை செல்லும்.
மீகா 1 : 16 (RCTA)
உங்கள் செல்லப் பிள்ளைகளைக் குறித்து, உங்கள் தலை மயிரை வெட்டி மழித்துக் கொள்ளுங்கள்; கழுகைப் போல முற்றிலும் மழித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அவர்கள் உன்னிடமிருந்து நாடு கடத்தப்படுவார்.
❮
❯