மத்தேயு 8 : 1 (RCTA)
அவர் மலையினின்று இறங்கியபின் பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது.
மத்தேயு 8 : 2 (RCTA)
இதோ! தொழுநோயாளி ஒருவன் வந்து அவரைப் பணிந்து, "ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்றான்.
மத்தேயு 8 : 3 (RCTA)
இயேசு கையை நீட்டி, "விரும்புகிறேன், குணமாகு" என்று சொல்லி அவனைத் தொட்டார். உடனே தொழுநோய் குணமாயிற்று.
மத்தேயு 8 : 4 (RCTA)
இயேசு அவனை நோக்கி, "பார்! ஒருவருக்கும் சொல்லாதே. ஆனால், போய் உன்னைக் குருவிடம் காட்டி, மோயீசன் கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து. அது அவர்களுக்கு அத்தாட்சியாகும்" என்றார்.
மத்தேயு 8 : 5 (RCTA)
அவர் கப்பர்நகூம் ஊருக்குள் போனபோது, நூற்றுவர்தலைவன் ஒருவன் அவரிடம் வந்து அவரை வேண்டி,
மத்தேயு 8 : 6 (RCTA)
"ஆண்டவரே, என் ஊழியன் திமிர்வாதத்தால் வீட்டில் கிடந்து மிகுந்த வேதனைப்படுகிறான்" என்றான்.
மத்தேயு 8 : 7 (RCTA)
இயேசு அவனை நோக்கி, "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.
மத்தேயு 8 : 8 (RCTA)
நூற்றுவர்தலைவன் மறுமொழியாகக் கூறியதாவது: "ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை சொன்னால் போதும்; என் ஊழியன் குணமடைவான்.
மத்தேயு 8 : 9 (RCTA)
ஏனெனில், நான் அதிகாரத்திற்கு உட்பட்டவனாயினும், எனக்கு அடியிலும் படைவீரர் உள்ளனர். ஒருவனை நோக்கி, ' போ ' என்றால் போகிறான்; வேறொருவனை நோக்கி, ' வா ' என்றால் வருகிறான். என் ஊழியனைப் பார்த்து, 'இதைச் செய்' என்றால் செய்கிறான்."
மத்தேயு 8 : 10 (RCTA)
இதைக் கேட்டு இயேசு வியந்து தம்மைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கி, "இஸ்ராயேலில் யாரிடமும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 8 : 11 (RCTA)
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து விண்ணரசில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுடன் பந்தி அமர்வார்கள்.
மத்தேயு 8 : 12 (RCTA)
அரசின் மக்களோ வெளியிருளில் தள்ளப்படுவர். அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
மத்தேயு 8 : 13 (RCTA)
பின்னர் இயேசு நூற்றுவர்தலைவனை நோக்கி, "நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" என்று சொன்னார். அந்நேரமே ஊழியன் குணமடைந்தான்.
மத்தேயு 8 : 14 (RCTA)
இயேசு இராயப்பரின் வீட்டுக்கு வந்து, அவருடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடப்பதைக் கண்டார்.
மத்தேயு 8 : 15 (RCTA)
அவர் அவளுடைய கையைத் தொடவே, காய்ச்சல் அவளை விட்டு நீங்கியது. அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை புரிந்தாள்.
மத்தேயு 8 : 16 (RCTA)
மாலையானதும் பேய்பிடித்த பலரை அவரிடம் கொண்டுவந்தனர். அவர் பேய்களை ஒரு வார்த்தையால் ஓட்டினார்; நோயுற்ற அனைவரையும் குணமாக்கினார். இவ்வாறு,
மத்தேயு 8 : 17 (RCTA)
' அவர் நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்; நம் நோய்களைச் சுமந்துகொண்டார் ' என்று இசையாஸ் இறைவாக்கினர் கூறியுள்ளது நிறைவேற வேண்டியிருந்தது.
மத்தேயு 8 : 18 (RCTA)
பெருங்கூட்டம் தம்மைச் சூழ்ந்திருப்பதை இயேசு கண்டு அக்கரைக்குச் செல்லக் கட்டளையிட்டார்.
மத்தேயு 8 : 19 (RCTA)
மறைநூல் அறிஞன் ஒருவன் வந்து, "போதகரே, நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்செல்லுவேன்" என்று அவரிடம் சொன்னான்.
மத்தேயு 8 : 20 (RCTA)
இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு; வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" என்றார்.
மத்தேயு 8 : 21 (RCTA)
அவருடைய சீடர்களுள் இன்னொருவன் அவரை நோக்கி, "ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர விடை கொடும்" என்றான்.
மத்தேயு 8 : 22 (RCTA)
இயேசு அவனைப் பார்த்து, "என்னைப் பின்செல். இறந்தோர் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்" என்றார்.
மத்தேயு 8 : 23 (RCTA)
அவர் படகில் ஏறவே, அவருடைய சீடர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.
மத்தேயு 8 : 24 (RCTA)
இதோ! கடலில் மாபெரும் கொந்தளிப்பு ஏற்பட, படகுக்குமேல் அலைகள் எழுந்தன. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.
மத்தேயு 8 : 25 (RCTA)
சீடர் அவரிடம் வந்து அவரை எழுப்பி, "ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்; மடிந்துபோகிறோம்" என்றனர்.
மத்தேயு 8 : 26 (RCTA)
இயேசு அவர்களை நோக்கி, "குறைவான விசுவாசம் உள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயம் ?" என்று கூறி, எழுந்து காற்றையும் கடலையும் கடியவே, பேரமைதி உண்டாயிற்று.
மத்தேயு 8 : 27 (RCTA)
அங்கிருந்தவர்கள் வியந்து, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யார் ?" என்றனர்.
மத்தேயு 8 : 28 (RCTA)
அவர் அக்கரை சேர்ந்து, கதரேனர் நாட்டிற்கு வந்தபோது, பேய்பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி, அவருக்கு எதிரே வந்தனர். அவர்கள் எவ்வளவு கொடியவர்கள் என்றால், அவ்வழியே யாரும் போகமுடியாது.
மத்தேயு 8 : 29 (RCTA)
இதோ! அவர்கள், "கடவுளின் மகனே, எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்? குறித்த காலம் வருமுன்னே எங்களை வதைக்க இங்கே வந்தீரோ?" என்று கத்தினர்.
மத்தேயு 8 : 30 (RCTA)
அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் பன்றிகள் பல கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
மத்தேயு 8 : 31 (RCTA)
அப்போது பேய்கள் அவரை நோக்கி, "நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் அனுப்பும்" என்று வேண்டின.
மத்தேயு 8 : 32 (RCTA)
அவர், "போங்கள்" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே, கூட்டம் முழுவதும் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் மடிந்தது.
மத்தேயு 8 : 33 (RCTA)
பன்றிகளை மேய்த்தவர்களோ ஓடிப்போய் நகருக்குச் சென்று எல்லாவற்றையும், பேய்பிடித்தவர்களைப்பற்றிய செய்தியையும் அறிவித்தார்கள்.
மத்தேயு 8 : 34 (RCTA)
இதோ! நகரினர் அனைவரும் இயேசுவை எதிர்கொண்டு போய் அவரைக் கண்டு, தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டினர்.
❮
❯