மத்தேயு 6 : 1 (RCTA)
"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள். இல்லையேல், வானகத்திலுள்ள உங்கள் தந்தையிடம் உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.
மத்தேயு 6 : 2 (RCTA)
எனவே, நீ பிச்சையிடும்பொழுது, மக்கள் புகழ வேண்டுமென்று வெளிவேடக்காரர் செபக்கூடங்களிலும் தெருக்களிலும் செய்வதுபோல், உனக்குமுன் பறைசாற்றச் செய்யாதே. அவர்கள் தங்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 6 : 3 (RCTA)
நீ பிச்சையிடும்பொழுதோ, உன் வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும். அப்பொழுது,
மத்தேயு 6 : 4 (RCTA)
நீ இடும் பிச்சை மறைவாயிருக்கும்; மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.
மத்தேயு 6 : 5 (RCTA)
"நீங்கள் செபம் செய்யும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம்; ஏனெனில், மனிதர் பார்க்கும்படி, அவர்கள் செபக்கூடங்களிலும் தெருக்கோடிகளிலும் நின்று செபம் செய்ய விரும்புவர். அவர்கள் தங்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 6 : 6 (RCTA)
நீயோ செபம் செய்யும்பொழுது, உன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு, மறைவாயுள்ள உன் தந்தையை நோக்கிச் செபம் செய். மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.
மத்தேயு 6 : 7 (RCTA)
செபம் செய்யும்பொழுது, புறவினத்தாரைப்போல நீங்கள் பிதற்றவேண்டாம். அதிகம் பேசுவதால், தங்கள் செபம் கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
மத்தேயு 6 : 8 (RCTA)
நீங்கள் அவர்களைப் போல் இருக்கவேண்டாம். நீங்கள் கேட்பதற்கு முன்னமே உங்களுக்குத் தேவையானது இன்னது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும்.
மத்தேயு 6 : 9 (RCTA)
"ஆதலால், நீங்கள் இவ்வாறு செபியுங்கள்: வானகத்திலுள்ள எங்கள் தந்தாய், உமது பெயர் பரிசுத்தம் எனப் போற்றப்படுக,
மத்தேயு 6 : 10 (RCTA)
உமது அரசு வருக, உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக.
மத்தேயு 6 : 11 (RCTA)
எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
மத்தேயு 6 : 12 (RCTA)
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னித்தருளும்.
மத்தேயு 6 : 13 (RCTA)
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
மத்தேயு 6 : 14 (RCTA)
"மனிதருடைய குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களாகில், உங்கள் வானகத் தந்தை உங்களையும் மன்னிப்பார்.
மத்தேயு 6 : 15 (RCTA)
மனிதரை நீங்கள் மன்னியாவிடில், உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்கமாட்டார்.
மத்தேயு 6 : 16 (RCTA)
"நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப்போல முகவாட்டமாய் இருக்கவேண்டாம். அவர்கள் நோன்பு இருப்பதை மனிதர் பார்க்கும்பொருட்டுத் தங்கள் முகத்தை விகாரப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 6 : 17 (RCTA)
நீ நோன்பு இருக்கும்போது தலைக்கு எண்ணெய் தடவு; முகத்தைக் கழுவு.
மத்தேயு 6 : 18 (RCTA)
அப்பொழுது நீ நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாமல், மறைவாயுள்ள உன் தந்தைக்குமட்டும் தெரியும். மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.
மத்தேயு 6 : 19 (RCTA)
"மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் கன்னமிட்டுத் திருடுவர்.
மத்தேயு 6 : 20 (RCTA)
ஆனால் விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள். அங்கே பூச்சியும் துருவும் அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.
மத்தேயு 6 : 21 (RCTA)
உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
மத்தேயு 6 : 22 (RCTA)
"உன் கண்தான் உன் உடலுக்கு விளக்கு; உன் கண் தெளிவாயிருந்தால் உன் உடல் முழுதும் ஒளியுள்ளதாய் இருக்கும்.
மத்தேயு 6 : 23 (RCTA)
உன் கண் கெட்டிருந்தால் உன் உடல் முழுவதும் இருண்டிருக்கும். ஆகவே உன்னுள் இருக்கும் ஒளியே இருளாயிருந்தால், இருள் என்னவாயிருக்கும்!
மத்தேயு 6 : 24 (RCTA)
"எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது. ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான். அல்லது, ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது.
மத்தேயு 6 : 25 (RCTA)
"ஆதலால் உங்களுக்குச் சொல்லுகிறேன்: உயிர்வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலை மூட எதை உடுப்பது என்றோ கவலைப்பட வேண்டாம். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவையல்லவா ?
மத்தேயு 6 : 26 (RCTA)
வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் வானகத் தந்தை அவற்றிற்கும் உணவளிக்கிறார். நீங்கள் அவற்றிலும் மிக மேலானவர்களன்றோ ?
மத்தேயு 6 : 27 (RCTA)
கவலைப்படுவதனால் உங்களில் எவன் தன் வளர்த்திக்கு ஒரு முழம் கூட்டமுடியும் ?
மத்தேயு 6 : 28 (RCTA)
உங்கள் உடையைப்பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் ? வயல்வெளி மலர்கள் எப்படி வளர்கின்றன என்று கவனியுங்கள். அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.
மத்தேயு 6 : 29 (RCTA)
ஆயினும் சாலொமோன்கூடத் தன் மாட்சியிலெல்லாம் இவற்றில் ஒன்றைப்போலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 6 : 30 (RCTA)
குறைவான விசுவாசம் உள்ளவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் வயல்வெளிப் புல்லைக் கடவுள் இவ்வாறு உடுத்துவாரானால் உங்களுக்கு எவ்வளவுதான் செய்யமாட்டார்!
மத்தேயு 6 : 31 (RCTA)
ஆதலால், எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.
மத்தேயு 6 : 32 (RCTA)
ஏனெனில், புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடுவர். உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.
மத்தேயு 6 : 33 (RCTA)
ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்; இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
மத்தேயு 6 : 34 (RCTA)
நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். நாளைய தினம் தன்னைப்பற்றிக் கவலைகொள்ளும். அன்றன்றைய தொல்லை அன்றன்றைக்குப் போதும்.
❮
❯