மத்தேயு 5 : 1 (RCTA)
இயேசு திரளான கூட்டத்தைக் கண்டு, மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரை அணுகினர்.
மத்தேயு 5 : 2 (RCTA)
அவர் திருவாய் மலர்ந்து போதிக்கலானார்:
மத்தேயு 5 : 3 (RCTA)
"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே.
மத்தேயு 5 : 4 (RCTA)
துயருறுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்.
மத்தேயு 5 : 5 (RCTA)
சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர், ஏனெனில், மண்ணுலகு அவர்களது உரிமையாகும்.
மத்தேயு 5 : 6 (RCTA)
நீதியின்பால் பசிதாகமுள்ளோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் நிறைவு பெறுவர்.
மத்தேயு 5 : 7 (RCTA)
இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.
மத்தேயு 5 : 8 (RCTA)
தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.
மத்தேயு 5 : 9 (RCTA)
சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்.
மத்தேயு 5 : 10 (RCTA)
நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே.
மத்தேயு 5 : 11 (RCTA)
என்பொருட்டுப் பிறர் உங்களை வசைகூறித் துன்புறுத்தி, உங்கள்மேல் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லும்போது, நீங்கள் பேறுபெற்றோர்.
மத்தேயு 5 : 12 (RCTA)
அகமகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், வானகத்தில் உங்கள் கைம்மாறு மிகுதியாகும். உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் இவ்வாறே துன்புறுத்தினர்.
மத்தேயு 5 : 13 (RCTA)
"உலகிற்கு உப்பு நீங்கள். உப்பு சாரமற்றுப்போனால் வேறு எதனால் சாரம் பெறும் ? இனி, வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடுமேயொழிய, ஒன்றுக்கும் உதவாது.
மத்தேயு 5 : 14 (RCTA)
"உலகிற்கு ஒளி நீங்கள். மலைமேல் உள்ள ஊர் மறைவாயிருக்க முடியாது.
மத்தேயு 5 : 15 (RCTA)
மேலும், விளக்கைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்கமாட்டார்கள்; மாறாக, வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்பொருட்டு, விளக்குத் தண்டின்மீது வைப்பார்கள்.
மத்தேயு 5 : 16 (RCTA)
அப்படியே, மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக.
மத்தேயு 5 : 17 (RCTA)
"திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வந்தேனென்று நினைக்க வேண்டாம். அழிப்பதற்கன்று, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
மத்தேயு 5 : 18 (RCTA)
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகுமுன் திருச்சட்டத்தின் ஒரு சிற்றெழுத்தோ புள்ளியோ ஒழிந்துபோகாது; எல்லாம் நிறைவேறும்.
மத்தேயு 5 : 19 (RCTA)
ஆகையால்,இச்சின்னஞ் சிறு கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அப்படியே மனிதர்க்கும் போதிப்பவன், விண்ணரசில் மிகச் சிறியவன் எனப்படுவான். அவற்றைக் கடைப்பிடித்துப் போதிப்பவனோ, விண்ணரசில் பெரியவன் எனப்படுவான்.
மத்தேயு 5 : 20 (RCTA)
உங்களுக்குச் சொல்லுகிறேன்: மறைநூல் அறிஞர், பரிசேயர் இவர்களின் ஒழுக்கத்தைவிட உங்கள் ஒழுக்கம் சிறந்திராவிட்டால், விண்ணரசு சேரமாட்டீர்கள்.
மத்தேயு 5 : 21 (RCTA)
'கொலை செய்யாதே, கொலை செய்வோன் தீர்ப்புக்குள்ளாவான்' என்று முன்னோர்க்குச் சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.
மத்தேயு 5 : 22 (RCTA)
நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: தன் சகோதரனிடம் சினம் கொள்வோன் தீர்ப்புக்குள்ளாவான். தன் சகோதரனை 'முட்டாள்' என்பவன், தலைமைச் சங்கத் தீர்ப்புக்குள்ளாவான். அவனை 'மதிகெட்டவனே' என்பவனோ எரிநரகத்திற்குள்ளாவான்.
மத்தேயு 5 : 23 (RCTA)
நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது, உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,
மத்தேயு 5 : 24 (RCTA)
அங்கேயே, பீடத்தின்முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து.
மத்தேயு 5 : 25 (RCTA)
"நீ உன் எதிரியோடு போகும்போது, வழியிலேயே அவனுடன் விரைவாகச் சமரசம் செய்துகொள். இல்லையேல், உன் எதிரி உன்னை நீதிபதியிடம் கையளிக்க, நீதிபதி உன்னைக் காவலனிடம் கையளிக்கக்கூடும்; நீ சிறையில் அடைபட நேரிடும்.
மத்தேயு 5 : 26 (RCTA)
உறுதியாகவே உனக்குச் சொல்லுகிறேன்: கடைசிக் காசை நீ கொடுத்துத் தீர்க்கும்வரை, அங்கிருந்து வெளியேறமட்டாய்.
மத்தேயு 5 : 27 (RCTA)
" ' விபசாரம் செய்யாதே ' என்று முன்னோர்களுக்குச் சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.
மத்தேயு 5 : 28 (RCTA)
நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும், ஏற்கெனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபசாரம் செய்தாயிற்று.
மத்தேயு 5 : 29 (RCTA)
"உன் வலக்கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு. உன் உடல் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளுள் ஒன்று அழிந்துபோவது உனக்கு நலம்.
மத்தேயு 5 : 30 (RCTA)
உன் வலக்கை உனக்கு இடறலாயிருந்தால், அதை வெட்டி எறிந்துவிடு. உன் உடல் முழுவதும் நரகத்துக்குச் செல்வதை விட, உன் உறுப்புகளுள் ஒன்று அழிந்துபோவது உனக்கு நலம்.
மத்தேயு 5 : 31 (RCTA)
தன் மனைவியை விலக்கிவிடுகிறவன் எவனும் அவளுக்கு முறிவுச்சீட்டு கொடுக்கட்டும்' என்று கூறியுள்ளது. நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்:
மத்தேயு 5 : 32 (RCTA)
கெட்ட நடத்தைக்காக அன்றி எவெனாருவன் தன் மனைவியை விலக்கிவிடுகிறானோ, அவன் அவளை விபசாரியாகும்படி செய்கிறான். விலக்கப்பட்டவளை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.
மத்தேயு 5 : 33 (RCTA)
"மேலும், 'பொய்யாணை இடாதே, ஆணையிட்டு நேர்ந்துகொண்டதை ஆண்டவருக்குச் செலுத்து' என்று முன்னோருக்குச் சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.
மத்தேயு 5 : 34 (RCTA)
நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது கடவுளின் அரியணை.
மத்தேயு 5 : 35 (RCTA)
மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது கடவுளின் கால்மணை. யெருசலேமின் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது பேரரசரின் நகரம்.
மத்தேயு 5 : 36 (RCTA)
உன் தலையின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில், உன் தலைமயிர் ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ, கறுப்பாக்கவோ உன்னால் இயலாது.
மத்தேயு 5 : 37 (RCTA)
உங்கள் பேச்சு, 'ஆம் என்றால், ஆம்; இல்லை என்றால், இல்லை' என்று இருக்கட்டும். இதற்கு மிஞ்சினதெல்லாம் தீயவனிடமிருந்தே வருகிறது.
மத்தேயு 5 : 38 (RCTA)
"கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்று சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.
மத்தேயு 5 : 39 (RCTA)
நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: தீயோனை எதிர்க்கவேண்டாம். ஆனால் யாராவது உன் வலக்கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு.
மத்தேயு 5 : 40 (RCTA)
யாராவது வழக்காடி, உன் உள்ளாடையை எடுத்துக்கொள்ள விரும்பினால், அவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு.
மத்தேயு 5 : 41 (RCTA)
யாராவது உன்னை ஒரு கல் தொலைவு வரக் கட்டாயப்படுத்தினால், இரு கல் தொலைவு அவனோடு செல்.
மத்தேயு 5 : 42 (RCTA)
கேட்கிறவனுக்குக் கொடு; உன்னிடம் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகம் கோணாதே.
மத்தேயு 5 : 43 (RCTA)
அயலானுக்கு அன்பு; பகைவனுக்கு வெறுப்பு' என்று சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.
மத்தேயு 5 : 44 (RCTA)
நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்.
மத்தேயு 5 : 45 (RCTA)
அப்பொழுது வானகத்திலுள்ள உங்கள் தந்தையின் மக்களாயிருப்பீர்கள். அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரோனை உதிக்கச் செய்கிறார். நீதியுள்ளோர் மேலும் நீதியற்றோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்.
மத்தேயு 5 : 46 (RCTA)
உங்களுக்கு அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்தால், உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? ஆயக்காரரும் இவ்வாறே செய்வதில்லையா?
மத்தேயு 5 : 47 (RCTA)
உங்கள் சகோதரருக்கு மட்டும் வணக்கம் செய்வீர்களாகில், நீங்கள் என்ன பெரிய காரியம் செய்கிறீர்கள்? புறவினத்தாரும் இவ்வாறே செய்வதில்லையா?
மத்தேயு 5 : 48 (RCTA)
ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
❮
❯