மத்தேயு 4 : 1 (RCTA)
பின்னர் இயேசு அலகையினால் சோதிக்கப்படுமாறு பாலைவனத்திற்கு ஆவியானவரால் அழைத்துச் செல்லப்பெற்றார்.
மத்தேயு 4 : 2 (RCTA)
அங்கு நாற்பது பகலும் நாற்பது இரவும் நோன்பிருந்தபின் பசியுற்றார்.
மத்தேயு 4 : 3 (RCTA)
சோதிப்பவன் அவரை அணுகி, "நீர் கடவுளின் மகனானால் இந்தக் கற்கள் அப்பம் ஆகும்படி கட்டளையிடும்" என்றான்.
மத்தேயு 4 : 4 (RCTA)
அவரோ மறுமொழியாக: " ' மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர்வாழ்கிறான் ' என எழுதியிருக்கின்றதே" என்றார்.
மத்தேயு 4 : 5 (RCTA)
பின்னர் அலகை, அவரைத் திருநகரத்திற்குக் கொண்டுபோய்க் கோவில் முகட்டில் நிறுத்தி,
மத்தேயு 4 : 6 (RCTA)
"நீர் கடவுளின் மகனானால் கீழே குதியும்; ஏனெனில், ' தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார், உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என எழுதியுள்ளது" என்று சொல்ல,
மத்தேயு 4 : 7 (RCTA)
இயேசு அதனிடம், " ' உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே ' எனவும் எழுதியிருக்கின்றது" என்றார்.
மத்தேயு 4 : 8 (RCTA)
மீண்டும் அலகை அவரை மிக உயர்ந்த மலைக்குக் கொண்டுபோய் உலக அரசுகள் அனைத்தையும் அவற்றின் மாட்சியையும் காட்டி,
மத்தேயு 4 : 9 (RCTA)
"நீர் என்னைத் தெண்டனிட்டு வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குக் கொடுப்பேன்" என்றது.
மத்தேயு 4 : 10 (RCTA)
அப்பொழுது இயேசு அதனை நோக்கி, "போ அப்பாலே, சாத்தானே, ஏனெனில், ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரை மட்டுமே ஆராதிப்பாயாக ' என எழுதியிருக்கின்றது" என்றார்.
மத்தேயு 4 : 11 (RCTA)
பின்னர் அலகை அவரை விட்டகன்றது. அப்போது வானதூதர் அணுகி, அவருக்குப் பணிவிடை புரிந்தனர்.
மத்தேயு 4 : 12 (RCTA)
அருளப்பர் சிறைப்பட்டதைக் கேள்வியுற்று இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார்.
மத்தேயு 4 : 13 (RCTA)
அவர் நாசரேத்தூரை விட்டு, செபுலோன், நப்தலி நாட்டில் கடலோரமாயுள்ள கப்பர்நகூமுக்கு வந்து குடியிருந்தார்.
மத்தேயு 4 : 14 (RCTA)
இசையாஸ் இறைவாக்கினர் பின்வருமாறு கூறியது இப்படி நிறைவேற வேண்டியிருந்தது:
மத்தேயு 4 : 15 (RCTA)
' செபுலோன் நாடே! நப்தலி நாடே! கடல் நோக்கும் வழியே! யோர்தான் அக்கரைப் பகுதியே! புறவினத்தார் வாழும் கலிலேயாவே!
மத்தேயு 4 : 16 (RCTA)
இருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டனர். மரண நிழல் படும் நாட்டில் உள்ளோர்க்கு ஒளி உதித்தது. '
மத்தேயு 4 : 17 (RCTA)
அதுமுதல் இயேசு, "மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவிக்கத் தொடங்கினார்.
மத்தேயு 4 : 18 (RCTA)
கலிலேயாக் கடலோரமாய் இயேசு நடந்து செல்லுகையில், இராயப்பர் என்னும் சீமோனும், அவர் சகோதரர் பெலவேந்திரருமாகிய இரு சகோதரரைக் கண்டார். அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தனர். ஏனெனில், அவர்கள் மீன் பிடிப்போர்.
மத்தேயு 4 : 19 (RCTA)
அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; உங்களை, மனிதரைப் பிடிப்போராக்குவேன்" என்றார்.
மத்தேயு 4 : 20 (RCTA)
உடனே அவர்களும் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.
மத்தேயு 4 : 21 (RCTA)
அங்கிருந்து அப்பால் சென்று, செபெதேயுவின் மகன் யாகப்பரும், அவர் சகோதரர் அருளப்பருமாகிய வேறு இரு சகோதரர், தம் தந்தை செபெதேயுவோடு படகில் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அவர்களை அழைத்தார்.
மத்தேயு 4 : 22 (RCTA)
உடனே அவர்கள் தம் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.
மத்தேயு 4 : 23 (RCTA)
அவர் கலிலேயா எங்கும் சுற்றி, அவர்களுடைய செபக்கூடங்களில் போதித்து, விண்ணரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்து, மக்களிடையே எல்லா நோயையும் பிணியையும் குணமாக்கிவந்தார்.
மத்தேயு 4 : 24 (RCTA)
அவரைப்பற்றிய பேச்சு சீரியாநாடு முழுவதும் பரவியது. பல்வேறு நோய் நோக்காட்டினால் வருந்தும் பிணியாளர் அனைவரையும், பேய்பிடித்தோரையும் பைத்தியக்காரரையும் திமிர்வாதக்காரரையும் அவரிடம் கொண்டுவந்தனர். அவர் அவர்களைக் குணப்படுத்தினார்.
மத்தேயு 4 : 25 (RCTA)
கலிலேயா, தெக்கப்போலி, யெருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதியாகிய இடங்களிலிருந்து, மக்கள் கூட்டங் கூட்டமாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.
❮
❯