மத்தேயு 3 : 1 (RCTA)
அக்காலத்திலே, ஸ்நாபக அருளப்பர் யூதேயாவின் பாலைவனத்தில் தோன்றி,
மத்தேயு 3 : 2 (RCTA)
மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவித்து வந்தார்.
மத்தேயு 3 : 3 (RCTA)
இவரைப்பற்றியே, ' ஆண்டவரது வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள், எனப் பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது ' என்று இசையாஸ் இறைவாக்கினர் கூறியுள்ளார்.
மத்தேயு 3 : 4 (RCTA)
இந்த அருளப்பர் உடுத்தியது, ஒட்டக மயிராடை; இடையில் கட்டியது, வார்க்கச்சை; உண்டது, வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும்.
மத்தேயு 3 : 5 (RCTA)
யெருசலேமிலும் யூதேயா முழுவதிலும், யோர்தானை அடுத்த நாடெங்கும் வாழ்ந்தோர் அவரிடம் போய்,
மத்தேயு 3 : 6 (RCTA)
தங்கள் பாவங்களை வெளியிட்டு, யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றுவந்தனர்.
மத்தேயு 3 : 7 (RCTA)
பரிசேயர், சதுசேயருள் பலர் நம்மிடம் ஞானஸ்நானம் பெற வருவதைக் கண்டு, அவர்களைப் பார்த்து, "விரியன்பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்துக்குத் தப்பித்துக்கொள்ள, உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவன் யார் ?
மத்தேயு 3 : 8 (RCTA)
எனவே, மனந்திரும்பியவர்க்கேற்ற செயலைச் செய்து காட்டுங்கள்.
மத்தேயு 3 : 9 (RCTA)
' ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை ' என்று சொல்லிக்கொள்ளத் துணியவேண்டாம். இக் கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்கு மக்களை எழுப்பக் கடவுள் வல்லவர் என்று உங்களுக்குக் கூறுகிறேன்.
மத்தேயு 3 : 10 (RCTA)
ஏற்கனவே அடி மரத்தில் கோடரி வைத்தாயிற்று. நற்கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, தீயில் போடப்படும்.
மத்தேயு 3 : 11 (RCTA)
நீங்கள் மனந்திரும்பியதைக் காட்ட உங்களுக்கு நான் நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப்பின் வருபவரோ என்னைவிட வல்லவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்ல நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
மத்தேயு 3 : 12 (RCTA)
அவர், சுளகைக் கையில் கொண்டு, தம் களத்தைத் துப்புரவாக்கிக் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியா நெருப்பில் சுட்டெரிப்பார்" என்றார்.
மத்தேயு 3 : 13 (RCTA)
பின்னர், இயேசு அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.
மத்தேயு 3 : 14 (RCTA)
அருளப்பரோ, "நானே உம்மிடம் ஞானஸ்நானம் பெறவேண்டியிருக்க, நீரா என்னிடம் வருவது ?" என்று சொல்லி அவரைத் தடுக்கப்பார்த்தார்.
மத்தேயு 3 : 15 (RCTA)
அதற்கு இயேசு, "இப்போதைக்கு விட்டுவிடும். ஏனெனில், இவ்வாறு நாம் நியமங்களெல்லாம் நிறைவேற்றுவது தகுதியே" என்று பதில் உரைக்க, அவரைத் தடைசெய்யாமல் விட்டுவிட்டார்.
மத்தேயு 3 : 16 (RCTA)
ஞானஸ்நானம் பெற்றவுடன் இயேசு தண்ணீரை விட்டு வெளியேறினார். அப்போது வானம் திறக்க, கடவுளின் ஆவியானவர் புறாவைப்போலத் தம்மீது இறங்கிவருவதைக் கண்டார்.
மத்தேயு 3 : 17 (RCTA)
அப்போது வானிலிருந்து, "இவரே என் அன்பார்ந்த மகன், இவரிடம் நான் பூரிப்படைகிறேன்" என்று ஒரு குரலொலி கேட்டது.
❮
❯