மத்தேயு 19 : 1 (RCTA)
இயேசு இவ்வார்த்தைகளைச் சொல்லி முடித்தபின் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயா பகுதிக்கு வந்தார்.
மத்தேயு 19 : 2 (RCTA)
பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது. அவர்களை அங்கே குணமாக்கினார்.
மத்தேயு 19 : 3 (RCTA)
பரிசேயர் அவரிடம் வந்து, "எக்காரணத்திற்காவது ஒருவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று அவரைச் சோதிக்கக் கேட்டனர்.
மத்தேயு 19 : 4 (RCTA)
அதற்கு அவர், "படைத்தவர் தொடக்கத்திலிருந்தே 'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்' என்றும்,
மத்தேயு 19 : 5 (RCTA)
'ஆதலால் கணவன் தன் தாய் தந்தையரை விட்டுத் தன் மனைவியோடு கூடி இருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர் எனக் கூறினார்' என்றும் நீங்கள் படித்ததில்லையா?
மத்தேயு 19 : 6 (RCTA)
இனி அவர்கள் இருவர் அல்லர், ஒரே உடல். ஆகவே, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.
மத்தேயு 19 : 7 (RCTA)
அவர்கள், "அப்படியானால் முறிவுச்சீட்டுக் கொடுத்து, மனைவியை விலக்கிவிடும்படி மோயீசன் கட்டளையிட்டது ஏன்?" என்று கேட்டனர்.
மத்தேயு 19 : 8 (RCTA)
அவரோ, "உங்கள் முரட்டுத்தனத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிட மோயீசன் அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கத்திலோ அப்படி இல்லை.
மத்தேயு 19 : 9 (RCTA)
நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: கெட்ட நடத்தைக்காக அன்றி, எவனொருவன் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொருத்தியை மணந்துகொள்கின்றானோ, அவன் விபசாரம் செய்கிறான்" என்று அவர்களுக்குச் சொன்னார்.
மத்தேயு 19 : 10 (RCTA)
சீடர்கள் அவரை நோக்கி, "கணவன் மனைவியின் நிலை இப்படியென்றால், மணந்து கொள்ளாதிருப்பதே நலம்" என்று சொன்னார்கள்.
மத்தேயு 19 : 11 (RCTA)
அவரோ, "அருள் பெற்றவரன்றி வேறு எவரும் இதை உணர்ந்துகொள்வதில்லை.
மத்தேயு 19 : 12 (RCTA)
ஏனெனில், தாய் வயிற்றினின்று அண்ணகராய்ப் பிறந்தவரும் உளர்; மனிதரால் அண்ணகரானவரும் உளர்; விண்ணரசை முன்னிட்டுத் தம்மைத்தாமே அண்ணகராக்கிக் கொண்டவரும் உளர். உணர்ந்துகொள்ள கூடியவன் உணர்ந்துகொள்ளட்டும்" என்றார்.
மத்தேயு 19 : 13 (RCTA)
பின்னர், அவர் குழந்தைகள்மேல் தம் கைகளை வைத்துச் செபிக்குமாறு அவர்களை அவரிடம் கொண்டுவந்தனர்.
மத்தேயு 19 : 14 (RCTA)
சீடர் அவர்களை அதட்டினர். இயேசுவோ அவர்களிடம், "குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்க வேண்டாம். வரவிடுங்கள். ஏனெனில், விண்ணரசு இத்தகையோரதே" என்றார்.
மத்தேயு 19 : 15 (RCTA)
அவர்கள்மீது கைகளை வைத்தபின் அங்கிருந்து சென்றார்.
மத்தேயு 19 : 16 (RCTA)
இதோ, ஒருவன் அவரிடம் வந்து, "போதகரே, முடிவில்லா வாழ்வு பெற நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.
மத்தேயு 19 : 17 (RCTA)
அவர் அவனை நோக்கி, "நன்மையைப்பற்றி என்னைக் கேட்பதேன்? நல்லவர் ஒருவரே. வாழ்வு பெற விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி" என்றார்.
மத்தேயு 19 : 18 (RCTA)
அவன், "எவற்றை?" என்றான். இயேசு, "கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச் சான்று சொல்லாதே.
மத்தேயு 19 : 19 (RCTA)
தாய் தந்தையரைப் போற்று. மேலும், உன் மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான் மீதும் அன்பு காட்டுவாயாக" என்று கூறினார்.
மத்தேயு 19 : 20 (RCTA)
வாலிபன் அவரிடம், "இவை எல்லாம் கடைப்பிடித்து வருகிறேன், என்னிடத்தில் இன்னும் குறைவாய் இருப்பதென்ன?" என்று கேட்டான்.
மத்தேயு 19 : 21 (RCTA)
அதற்கு இயேசு, "நீ நிறைவு பெற விரும்பினால், போய் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்னர் வந்து என்னைப் பின்செல்" என்றார்.
மத்தேயு 19 : 22 (RCTA)
இவ்வார்த்தையைக் கேட்டு அவ்வாலிபன் வருத்தத்துடன் சென்றான். ஏனெனில், அவனுக்கு ஏராளமான சொத்து இருந்தது.
மத்தேயு 19 : 23 (RCTA)
இயேசு தம் சீடரிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது.
மத்தேயு 19 : 24 (RCTA)
மீண்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.
மத்தேயு 19 : 25 (RCTA)
இவற்றைக் கேட்டு அவருடைய சீடர் மிகவும் மலைத்துப் போய், "அப்படியானால் யார்தான் மீட்புப்பெற முடியும்?" என்று கேட்டனர்.
மத்தேயு 19 : 26 (RCTA)
இயேசு அவர்களை உற்றுநோக்கி, "மனிதரால் இது முடியாது. ஆனால், கடவுளால் எல்லாம் முடியும்" என்று சொன்னார்.
மத்தேயு 19 : 27 (RCTA)
அப்போது இராயப்பர், "இதோ! நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்சென்றோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்று அவரைக் கேட்டார்.
மத்தேயு 19 : 28 (RCTA)
இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உலகம் புத்துயிர் பெறும் நாளில் மனுமகன் தமது மாட்சி அரியணையில் வீற்றிருக்கும்போது என்னைப் பின்சென்ற நீங்களும் இஸ்ராயேலின் பன்னிரு கோத்திரங்களுக்கும் நடுவராகப் பன்னிரு அரியணையில் வீற்றிருப்பீர்கள்.
மத்தேயு 19 : 29 (RCTA)
மேலும் வீட்டையோ சகோதரர் சகோதரியையோ தாய் தந்தையையோ மக்களையோ நிலபுலங்களையோ என் பெயரின் பொருட்டுத் துறந்துவிடும் எவனும் பன்மடங்கு பெறுவான்; முடிவில்லாத வாழ்வும் பெற்றுக்கொள்வான்.
மத்தேயு 19 : 30 (RCTA)
"முதலானோர் பலர் கடைசியாவர்; கடைசியானோர் பலர் முதலாவர்.
❮
❯