மத்தேயு 18 : 1 (RCTA)
அந்நேரத்தில் சீடர் இயேசுவை அணுகி, "விண்ணரசில் யார் பெரியவன்?" என்று கேட்டனர்.
மத்தேயு 18 : 2 (RCTA)
இயேசு ஒரு குழந்தையை அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தி,
மத்தேயு 18 : 3 (RCTA)
கூறியதாவது: "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள்.
மத்தேயு 18 : 4 (RCTA)
எனவே, இக்குழந்தையைப்போலத் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுகிறவன் எவனோ, அவனே விண்ணரசில் பெரியவன்.
மத்தேயு 18 : 5 (RCTA)
"மேலும் இத்தகைய குழந்தை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்கிறவன் எவனும், என்னையே ஏற்றுக்கொள்கிறான்.
மத்தேயு 18 : 6 (RCTA)
ஆனால் என்மீது விசுவாசம்கொள்ளும் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ, அவன் கழுத்தில் பெரிய எந்திரக் கல்லைத் தொங்கவிட்டு நடுக்கடலில் அவனை ஆழ்த்தி விடுவது அவனுக்கு நலம்.
மத்தேயு 18 : 7 (RCTA)
இடறல் நிமித்தம் உலகிற்கு ஐயோ கேடு! ஏனெனில், இடறல் வந்தே தீரும். ஆனால், யாரால் இடறல் வருகிறதோ அவனுக்கு ஐயோ கேடு!
மத்தேயு 18 : 8 (RCTA)
"உன் கையாவது காலாவது உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டி எறிந்துவிடு. இரண்டு கைகளோடு அல்லது இரண்டு கால்களோடு முடிவில்லா நெருப்பில் தள்ளப்படுவதைவிட, கை ஊனனாய் அல்லது கால் முடவனாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.
மத்தேயு 18 : 9 (RCTA)
உன் கண் உனக்கு இடறலாய் இருந்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடு. இரண்டு கண்களோடு எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.
மத்தேயு 18 : 10 (RCTA)
"இச்சிறுவருள் ஒருவனையும் புறக்கணியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18 : 11 (RCTA)
அவர்களுடைய விண்ணுலகத் தூதர் வானகத்திலுள்ள என் தந்தையின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
மத்தேயு 18 : 12 (RCTA)
"இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்க, அவற்றுள் ஒன்று வழி தவறிப்போனால் தொண்ணுற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுவிட்டுத் தவறிப்போனதைத் தேடிச்செல்வான். அன்றோ?
மத்தேயு 18 : 13 (RCTA)
அதைக் கண்டுபிடிக்க நேர்ந்தால், தவறிப்போகாத தொண்ணுற்றொன்பது ஆடுகளைப் பற்றி அவன் கொள்ளும் மகிழ்ச்சியைவிட, அவ்வொன்றைப்பற்றி அவன் கொள்ளும் மகிழ்ச்சி பெரிதாம் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18 : 14 (RCTA)
அவ்விதமே, இச்சிறுவருள் ஒருவன்கூட அழிவுறுவது வானகத்தில் உள்ள உங்கள் தந்தையின் விருப்பமன்று.
மத்தேயு 18 : 15 (RCTA)
"உன் சகோதரன் உனக்கு எதிராகக் குற்றஞ்செய்திருந்தால் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில் அவனைக் கண்டித்துப்பார். அவன் உனக்குச் செவிசாய்த்தால் உன் சகோதரனை உன்வச மாக்கிக்கொள்வாய்.
மத்தேயு 18 : 16 (RCTA)
அவன் உனக்குச் செவிசாய்க்காவிட்டால், உன்னுடன் ஒருவர் அல்லது இருவரைச் சேர்த்துக்கொள். 'இவ்வாறு இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் சொற்படி காரியம் எல்லாம் தீரும்.'
மத்தேயு 18 : 17 (RCTA)
அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில், திருச்சபையிடம், சொல். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில், அவன் உனக்குப் புற இனத்தான் போலவும் ஆயக்காரன்போலவும் இருக்கட்டும்.
மத்தேயு 18 : 18 (RCTA)
"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மண்ணுலகில் நீங்கள் எதெல்லாம் கட்டுவீர்களோ, அதெல்லாம் விண்ணுலகிலும் கட்டப்பட்டதாகவே இருக்கும். மண்ணுலகில் நீங்கள் எதெல்லாம் அவிழ்ப்பீர்களோ, அதெல்லாம் விண்ணுலகிலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்.
மத்தேயு 18 : 19 (RCTA)
"மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: மண்ணுலகில் உங்களில் இருவர் தாங்கள் கேட்கும் எதைக்குறித்தும் மனமொத்திருந்தால் அது விண்ணுலகிலுள்ள என் தந்தையால் அவர்களுக்கு அருளப்படும்.
மத்தேயு 18 : 20 (RCTA)
இரண்டு, மூன்று பேர்என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."
மத்தேயு 18 : 21 (RCTA)
பின்னர், இராயப்பர் அவரை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு எதிராகக் குற்றஞ் செய்துவந்தால், நான் அவனை எத்தனை முறை மன்னிப்பது? ஏழு முறைவரைக்குமா?" என்று கேட்டார்.
மத்தேயு 18 : 22 (RCTA)
அதற்கு இயேசு கூறியதாவது: "ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18 : 23 (RCTA)
"ஆகவே விண்ணரசு, தன் ஊழியரிடம் கணக்குக் கேட்க விரும்பிய ஓர் அரசனுக்கு ஒப்பாகும்.
மத்தேயு 18 : 24 (RCTA)
கணக்குக் கேட்கத் தொடங்கிய பொழுது, அவனிடம் பத்தாயிரம் 'தாலாந்து' கடன்பட்ட ஒருவனைக் கொண்டுவந்தனர்.
மத்தேயு 18 : 25 (RCTA)
அவன் கடன் தீர்க்க வகையற்றிருந்ததால், அவனையும் அவன் மனைவி மக்களையும் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் விற்றுக் கடனைத் தீர்க்குமாறு தலைவன் கட்டளையிட்டான்.
மத்தேயு 18 : 26 (RCTA)
அவ்வூழியனோ அவன் காலில் விழுந்து, 'பொறுத்துக்கொள்ளும்; கடன் எல்லாம் தீர்த்துவிடுகிறேன்' என்று வேண்டினான்.
மத்தேயு 18 : 27 (RCTA)
அவ்வூழியனுடைய தலைவன் மனமிரங்கி அவன் கடனை மன்னித்து அவனை விட்டுவிட்டான்.
மத்தேயு 18 : 28 (RCTA)
அவ்வூழியன் வெளியே சென்றதும், தன் உடனூழியரில் தன்னிடம் நூறு வெள்ளிக்காசு கடன்பட்ட ஒருவனைக் கண்டான். அவனைப் பிடித்துக் கழுத்தை நெரித்து, 'நீ பட்ட கடனைத் தீர்த்துவிடு' என்று கேட்டான்.
மத்தேயு 18 : 29 (RCTA)
அந்த உடனூழியன், காலில் விழுந்து, 'பொறுத்துக்கொள்ளும்; எல்லாம் தீர்த்துவிடுகிறேன்' என்று அவனை வேண்டினான்.
மத்தேயு 18 : 30 (RCTA)
அவனோ இணங்கவில்லை. ஆனால், கடனைத் தீர்க்குமட்டும் அவனைச் சிறையில் அடைத்தான்.
மத்தேயு 18 : 31 (RCTA)
அவனுடைய உடனூழியர் நடந்ததைக் கண்டு மிகவும் வருந்தித் தலைவனிடம் சென்று நடந்ததை யெல்லாம் அறிவித்தனர்.
மத்தேயு 18 : 32 (RCTA)
அப்போது, அவனுடைய தலைவன் அவனை அழைத்து, 'கெட்ட ஊழியனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் உன் கடனையெல்லாம் மன்னித்தேன்.
மத்தேயு 18 : 33 (RCTA)
ஆகவே, நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல, நீயும் உன்னுடைய உடனூழியனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?' என்று கேட்டு,
மத்தேயு 18 : 34 (RCTA)
சினந்து, கடன் முழுவதும் தீர்க்கும்வரை வதைப்போரிடம் அவனைக் கையளித்தான்.
மத்தேயு 18 : 35 (RCTA)
உங்களுள் ஒவ்வொருவனும் தன் சகோதரனை முழு உள்ளத்தோடு மன்னிக்காவிட்டால், என் வானகத் தந்தையும் அவ்வாறே உங்களுக்குச் செய்வார்."
❮
❯