மத்தேயு 16 : 1 (RCTA)
பரிசேயரும் சதுசேயரும் அவரிடம் வந்து வானிலிருந்து அருங்குறி ஒன்றைக்காட்டும்படி கேட்டு அவரைச் சோதித்தனர்.
மத்தேயு 16 : 2 (RCTA)
அதற்கு அவர், "மாலையில் வானம் சிவந்திருக்கிறது; அதனால் அமைதியாய் இருக்கும் என்பீர்கள்.
மத்தேயு 16 : 3 (RCTA)
காலையில் வானம் சிவந்து மந்தாரமாய் இருக்கிறது; அதனால் இன்று காற்றும் மழையுமாயிருக்கும் என்பீர்கள். வானத்தின் தோற்றத்தைப் பகுத்தறிய உங்களுக்குத் தெரியும். காலத்தின் குறிகளை அறிய உங்களால் முடியாதா ?
மத்தேயு 16 : 4 (RCTA)
கெட்டுப்போன விபசாரத் தலைமுறை அருங்குறி ஒன்று கேட்கிறது. யோனாசின் அருங்குறியேயன்றி வேறு எந்த அருங்குறியும் அதற்கு அளிக்கப்படாது" என்றார். பின் அவர்களை விட்டு நீங்கினார்.
மத்தேயு 16 : 5 (RCTA)
அவருடைய சீடர் கடலைக் கடந்து வந்தபோது அப்பம் கொண்டுவர மறந்து போயினர்.
மத்தேயு 16 : 6 (RCTA)
இயேசு அவர்களை நோக்கி, "பரிசேயர், சதுசேயருடைய புளிப்பு மாவைக்குறித்துக் கவனமாயிருங்கள், எச்சரிக்கை" என்று சொன்னார்.
மத்தேயு 16 : 7 (RCTA)
அவர்களோ, "நாம் அப்பம் கொண்டுவரவில்லையே" என்று தங்களுக்குள் எண்ணிக்கொண்டனர்.
மத்தேயு 16 : 8 (RCTA)
இதையறிந்த இயேசு, "குறைவான விசுவாசம் உள்ளவர்களே, உங்களிடம் அப்பமில்லை என்று உங்களுக்குள் சிந்திப்பானேன்?
மத்தேயு 16 : 9 (RCTA)
இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தபோது எத்தனை கூடை மீதி எடுத்தீர்கள்?
மத்தேயு 16 : 10 (RCTA)
ஏழு அப்பங்களை நாலாயிரம் போருக்குக் கொடுத்தபோது எத்தனை கூடை மீதிஎடுத்தீர்கள்? நினைவில்லையா?
மத்தேயு 16 : 11 (RCTA)
நான் சொன்னது அப்பத்தைப் பற்றியன்று என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளாதது எப்படி? ஆகவே, பரிசேயர், சதுசேயருடைய புளிப்புமாவைக் குறித்துக் கவனமாயிருங்கள்" என்றார்.
மத்தேயு 16 : 12 (RCTA)
கவனமாயிருக்கக் கூறியது, புளிப்புமாவைப் பற்றியன்று; பரிசேயர், சதுசேயருடைய போதனையைப் பற்றியே என்பதை அவர்கள் அப்பொழுதான் உணர்ந்து கொண்டனர்.
மத்தேயு 16 : 13 (RCTA)
இயேசு பிலிப்புச் செசரியா நகர்ப்புறம் வந்து தம் சீடரைப் பார்த்து, 'மனுமகன் யார் என்று மக்கள் சொல்லுகிறார்கள்?" என்று கேட்டார்.
மத்தேயு 16 : 14 (RCTA)
அவர்களோ, "சிலர் ஸ்நாபக அருளப்பர் என்றும், சிலர் எலியாஸ் என்றும், சிலர் எரேமியாஸ் அல்லது இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்" என்றனர்.
மத்தேயு 16 : 15 (RCTA)
"நீங்களோ நான் யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்று இயேசு அவர்களைக் கேட்டார்.
மத்தேயு 16 : 16 (RCTA)
சீமோன் இராயப்பர் மறுமொழியாக, "நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" என்றார்.
மத்தேயு 16 : 17 (RCTA)
அதற்கு இயேசு, "யோனாவின் மகன் சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில், இதை உனக்கு வெளிப்படுத்தியது மனித வல்லமையன்று, வானகத்திலுள்ள என் தந்தையே.
மத்தேயு 16 : 18 (RCTA)
மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். உன் பெயர் 'பாறை.' இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா.
மத்தேயு 16 : 19 (RCTA)
வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன். எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும். எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்" என்றார்.
மத்தேயு 16 : 20 (RCTA)
பின்னர், தாம் மெசியா என்பதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று தம் சீடருக்குக் கட்டளையிட்டார்.
மத்தேயு 16 : 21 (RCTA)
அதுமுதல் இயேசு தாம் யெருசலேமுக்குச் சென்று மூப்பர், மறைநூல் அறிஞர், தலைமைக்குருக்கள் இவர்கள் கையால் பாடுகள் பல படவும், கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும் எனத் தம் சீடருக்கு விளக்கத் தொடங்கினார்.
மத்தேயு 16 : 22 (RCTA)
இராயப்பர் அவரைத் தனியாக அழைத்து, "ஆண்டவரே, ஐயோ! இது வேண்டாம். இஃது உமக்கு நேராது" என்று அவரைக் கடிந்துகொண்டார்.
மத்தேயு 16 : 23 (RCTA)
அவர் திரும்பி இராயப்பரிடம், "போ பின்னாலே, சாத்தானே, நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய். ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே" என்றார்.
மத்தேயு 16 : 24 (RCTA)
பின் இயேசு தம் சீடரை நோக்கி, "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.
மத்தேயு 16 : 25 (RCTA)
ஏனெனில், தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்.
மத்தேயு 16 : 26 (RCTA)
ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்?
மத்தேயு 16 : 27 (RCTA)
"மனுமகன் தம் தந்தையின் மாட்சிமையில் தம் வானதூதரோடு வரப்போகிறார். அப்பொழுது ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார்.
மத்தேயு 16 : 28 (RCTA)
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுமகன் தம் அரசில் வருவதைக் காணும்வரை இங்கு இருப்பவர்களுள் சிலர் சாவுக்கு உள்ளாக மாட்டார்கள்" என்று சொன்னார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28