மத்தேயு 14 : 1 (RCTA)
அப்பொழுது இயேசுவைப்பற்றிய பேச்சு சிற்றரசன் ஏரோதின் காதுக்கு எட்டியது.
மத்தேயு 14 : 2 (RCTA)
அவன் தன் ஊழியரிடம், "இவர் ஸ்நாபக அருளப்பர். இறந்தோரிடமிருந்து உயிர்த்திருக்கிறார். ஆதலால்தான் புதுமை செய்யும் வல்லமை இவரிடம் செயலாற்றுகிறது" என்று சொன்னான்.
மத்தேயு 14 : 3 (RCTA)
அந்த ஏரோது தன் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாள்பொருட்டு அருளப்பரைப் பிடித்து விலங்கிட்டுச் சிறையிலடைத்திருந்தான்.
மத்தேயு 14 : 4 (RCTA)
ஏனெனில், அருளப்பர் அவனை நோக்கி, "நீ அவளை வைத்திருக்கலாகாது" என்று சொல்லியிருந்தார்.
மத்தேயு 14 : 5 (RCTA)
அவனோ அவரைக் கொன்றுவிட நினைத்தான். ஆனால், மக்கள் அவரை இறைவாக்கினராகக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.
மத்தேயு 14 : 6 (RCTA)
ஏரோதின் பிறப்பு விழாவில் ஏரோதியாளின் மகள் எல்லார்முன்னும் நடனம் ஆடி ஏரோதை மகிழ்வித்தாள்.
மத்தேயு 14 : 7 (RCTA)
அதனால் அவள் தன்னிடம் எதைக் கேட்டாலும் கொடுப்பதாக அவன் ஆணையிட்டு உறுதிமொழி கூறினான்.
மத்தேயு 14 : 8 (RCTA)
அவளோ தன் தாய் தூண்டிவிட்டபடி, "ஸ்நாபக அருளப்பரின் தலையை ஒரு தட்டில் இப்போதே எனக்குக் கொடும்" என்றாள்.
மத்தேயு 14 : 9 (RCTA)
அரசன் வருந்தினான். ஆனால் தன் ஆணையின் பொருட்டும், விருந்தினர்பொருட்டும் அதைக் கொடுக்கக் கட்டளையிட்டான்.
மத்தேயு 14 : 10 (RCTA)
ஆள் அனுப்பிச் சிறையில் அருளப்பரது தலையை வெட்டுவித்தான்.
மத்தேயு 14 : 11 (RCTA)
அவருடைய தலையைத் தட்டில் கொண்டுவந்து சிறுமியிடம் கொடுக்க, அவளும் தன் தாயிடம் கொண்டுபோனாள்.
மத்தேயு 14 : 12 (RCTA)
அவருடைய சீடர் வந்து அவருடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்துவிட்டு இயேசுவிடம் வந்து அறிவித்தனர்.
மத்தேயு 14 : 13 (RCTA)
இதைக் கேட்டதும் இயேசு அங்கிருந்து படகேறித் தனிமையாகப் பாழ்வெளி சென்றார். இதைக் கேட்டு மக்கட்கூட்டம் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தது.
மத்தேயு 14 : 14 (RCTA)
அவர் கரையில் இறங்கியபோது பெரும் கூட்டத்தைக் கண்டு அவர்கள்மீது மனமிரங்கி அவர்களுள் பிணியாளிகளைக் குணமாக்கினார்.
மத்தேயு 14 : 15 (RCTA)
மாலையானதும் அவருடைய சீடர் அவரிடம் வந்து, "இது பாழ்வெளி ஆயிற்றே; நேரமும் ஆகிவிட்டது; ஊர்களுக்குச் சென்று உணவு வாங்கிக்கொள்ளும்படி கூட்டத்தை அனுப்பிவிடும்" என்றனர்.
மத்தேயு 14 : 16 (RCTA)
இயேசுவோ அவர்களிடம், "அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.
மத்தேயு 14 : 17 (RCTA)
அதற்கு அவர்கள், "இங்கே ஐந்து அப்பமும் இரண்டு மீனும் தவிர வேறொன்றும் எங்களிடமில்லை" என்றனர்.
மத்தேயு 14 : 18 (RCTA)
அவர், "அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்" என்றார்.
மத்தேயு 14 : 19 (RCTA)
கூட்டம் பசும்புல் தரையில் அமரும்படி கட்டளையிட்டு, ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைபுகழ் கூறி, அப்பத்தைப் பிட்டுச் சீடருக்கு அளித்தார்; சீடர் கூட்டத்திற்கு அளித்தனர்.
மத்தேயு 14 : 20 (RCTA)
அனைவரும் வயிறார உண்டனர். மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தனர்.
மத்தேயு 14 : 21 (RCTA)
பெண்களும் சிறுவர்களும் நீங்கலாக, உணவு அருந்திய ஆண்கள் தொகை ஐயாயிரம்.
மத்தேயு 14 : 22 (RCTA)
தாம் மக்களை அனுப்பிக்கொண்டிருக்கையில், சீடர்கள் உடனே படகிலேறிக் கடலைக் கடந்து தமக்குமுன் அக்கரைக்குப்போகும்படி இயேசு வற்புறுத்தினார்.
மத்தேயு 14 : 23 (RCTA)
கூட்டத்தை அனுப்பியதும் செபிக்க தனியாக மலைமீது ஏறினார். இரவாயிற்று; அங்குத் தனித்திருந்தார்.
மத்தேயு 14 : 24 (RCTA)
படகோ, எதிர்காற்றடித்தபடியால் அலைகளால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
மத்தேயு 14 : 25 (RCTA)
நான்காம் சாமத்தில் அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்.
மத்தேயு 14 : 26 (RCTA)
சீடரோ, அவர் கடல்மேல் நடப்பதைக் கண்டு கலங்கி, "ஐயா! பூதம்" என்று அச்சத்தால் அலறினர்.
மத்தேயு 14 : 27 (RCTA)
உடனே இயேசு, "தைரியமாயிருங்கள், நான்தான், அஞ்சாதீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார்.
மத்தேயு 14 : 28 (RCTA)
அதற்கு இராயப்பர், "ஆண்டவரே, நீர்தாம் என்றால், நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வரக் கட்டளையிடும்" என்றார்.
மத்தேயு 14 : 29 (RCTA)
அவர், "வா" என்றார். இராயப்பரும் படகினின்று இறங்கிக் கடல்மீது நடந்து இயேசுவை நோக்கி வந்தார்.
மத்தேயு 14 : 30 (RCTA)
காற்று பலமாயிருப்பதைக் கண்டு அஞ்சி மூழ்கப்போகையில், "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார்.
மத்தேயு 14 : 31 (RCTA)
உடனே இயேசு கையை நீட்டி, அவரைப் பிடித்து, "குறைவான விசுவாசம் உள்ளவனே, ஏன் தயங்கினாய் ?" என்றார்.
மத்தேயு 14 : 32 (RCTA)
அவர்கள் படகில் ஏறியதும் காற்று ஓய்ந்தது.
மத்தேயு 14 : 33 (RCTA)
படகில் இருந்தவர்கள் வந்து அவரைப் பணிந்து, "உண்மையாகவே நீர் கடவுள்மகன்" என்றனர்.
மத்தேயு 14 : 34 (RCTA)
அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தில் கரை சேர்ந்தனர்.
மத்தேயு 14 : 35 (RCTA)
அவ்விடத்து மக்கள் அவரை அறிந்துகொண்டதும், சுற்றுப்புறமெங்கும் ஆள் அனுப்பி நோயாளிகள் அனைவரையும் அவரிடம் கொண்டுவந்து,
மத்தேயு 14 : 36 (RCTA)
அவருடைய போர்வை விளிம்பையாகிலும் தொடவிடும்படி அவரை வேண்டினர். தொட்டவர் அனைவரும் குணமாயினர்.
❮
❯