மத்தேயு 13 : 1 (RCTA)
அந்நாளில் இயேசு வீட்டை விட்டு வெளியே போய்க் கடலோரத்தில் உட்கார்ந்திருந்தார்.
மத்தேயு 13 : 2 (RCTA)
பெருங்கூட்டம் அவரை நெருக்கவே, அவர் படகிலேறி அமர வேண்டியிருந்தது.
மத்தேயு 13 : 3 (RCTA)
கூட்டம் அனைத்தும் கரையில் இருந்தது. அவர், அவர்களுக்கு உவமைகளால் பற்பல எடுத்துரைத்தார். "இதோ, விதைப்பவன் விதைக்கச் சென்றான்.
மத்தேயு 13 : 4 (RCTA)
விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரமாய் விழுந்தன. வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டன.
மத்தேயு 13 : 5 (RCTA)
சில அதிக மண்ணில்லாத பாறைநிலத்தில் விழுந்தன. அடிமண் இல்லாததால் விரைவில் முளைத்தன.
மத்தேயு 13 : 6 (RCTA)
வெயில் ஏறியதும் தீய்ந்து, வேரில்லாமையால் காய்ந்துபோயின.
மத்தேயு 13 : 7 (RCTA)
சில முட்செடிகள் நடுவில் விழுந்தன. முட்செடிகள் அவற்றை நெரித்துவிட்டன.
மத்தேயு 13 : 8 (RCTA)
சில நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் ஒரு சில நூறு மடங்கு, வேறு சில அறுபது மடங்கு, இன்னும் சில முப்பது மடங்கு பலன் கொடுத்தன.
மத்தேயு 13 : 9 (RCTA)
கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.
மத்தேயு 13 : 10 (RCTA)
சீடர் அவரை அணுகி, "அவர்களிடம் நீர் உவமைகளில் பேசுவதேன்?" என்றனர்.
மத்தேயு 13 : 11 (RCTA)
அவர் அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: "விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது. அவர்களுக்கோ கொடுத்துவைக்கவில்லை.
மத்தேயு 13 : 12 (RCTA)
ஏனெனில், உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்; அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.
மத்தேயு 13 : 13 (RCTA)
ஏன் அவர்களிடம் உவமைகளில் பேசுகிறேனெனில், அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; உணர்வதுமில்லை.
மத்தேயு 13 : 14 (RCTA)
இசையாஸ் கூறியுள்ள இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: 'கேட்டுக் கேட்டும் நீங்கள் உணர்வதில்லை, பார்த்துப் பார்த்தும் நீங்கள் காண்பதில்லை.
மத்தேயு 13 : 15 (RCTA)
அவர்கள் கண்ணால் காணாமலும் காதால் கேட்காமலும் உளத்தால் உணராமலும் அவர்கள் மனந்திரும்பாமலும் நான் அவர்களைக் குணமாக்காமலும் இருக்கும்படி இம்மக்களின் உள்ளம் மழுங்கிவிட்டது; இவர்கள் காது மந்தமாகிவிட்டது; கண்ணை மூடிக்கொண்டனர். '
மத்தேயு 13 : 16 (RCTA)
உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.
மத்தேயு 13 : 17 (RCTA)
நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்: இறைவாக்கினர், நீதிமான்கள் பலர் நீங்கள் காண்பதைக் காணவிரும்பியும் காணவில்லை. நீங்கள் கேட்பதைக் கேட்கவிரும்பியும் கேட்கவில்லை.
மத்தேயு 13 : 18 (RCTA)
"எனவே, விதைப்பவன் உவமையின் பொருள் என்னவென்று கேளுங்கள்:
மத்தேயு 13 : 19 (RCTA)
விண்ணரசைப்பற்றிய வார்த்தையை ஒருவன் கேட்டும் உணராவிட்டால், அவன் உள்ளத்தில் விதைத்ததைத் தீயவன் வந்து பறித்துக்கொள்வான். வழியோரம் விதைக்கப்பட்டவன் இவனே.
மத்தேயு 13 : 20 (RCTA)
பாறைநிலத்தில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு உடனே மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறவனே.
மத்தேயு 13 : 21 (RCTA)
ஆனால், அவன் தன்னில் வேரற்றவன்; நிலையற்றவன். வார்த்தையின் பொருட்டு வேதனையுற்றதும் அல்லது துன்புறுத்தப்பட்டதும் இடறல்படுவான்.
மத்தேயு 13 : 22 (RCTA)
முட்செடிகள் நடுவில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு, இவ்வுலகக் கவலையும் செல்வமாயையும் வார்த்தையை நெரிக்க, பயனற்றுப் போகிறவனே.
மத்தேயு 13 : 23 (RCTA)
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு உணர்ந்துகொள்ளுகிறவனே. இவன் நூறு மடங்கோ அறுபது மடங்கோ முப்பது மடங்கோ பலன் கொடுப்பான்."
மத்தேயு 13 : 24 (RCTA)
இன்னுமோர் உவமையை அவர்களுக்கு எடுத்துச்சொன்னார்: "விண்ணரசு, தன் வயலில் நல்ல விதை விதைத்தவனுக்கு ஒப்பாகும்.
மத்தேயு 13 : 25 (RCTA)
ஆட்கள் தூங்கும்போது அவனுடைய பகைவன் வந்து கோதுமையிடையே களைகளை விதைத்துவிட்டுப் போனான்.
மத்தேயு 13 : 26 (RCTA)
பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் தோன்றின.
மத்தேயு 13 : 27 (RCTA)
வீட்டுத்தலைவனிடம் ஊழியர் வந்து, 'ஐயா, உம் வயலில் நல்ல விதையல்லவா விதைத்தீர்? பின் அதில் களைகள் வந்தது எப்படி?' என்று கேட்டனர்.
மத்தேயு 13 : 28 (RCTA)
அதற்கு அவன், ' இது பகைவன் செய்த வேலை ' என்றான். ஊழியரோ, 'நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிச் சேர்க்க வேண்டுமா ? ' என்றனர்.
மத்தேயு 13 : 29 (RCTA)
அவன், 'வேண்டாம்; களைகளைச் சேர்க்கும்போது ஒருவேளை கோதுமைப் பயிரையும் அவற்றுடன் பிடுங்கிவிடக்கூடும்.
மத்தேயு 13 : 30 (RCTA)
அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடைக்காலத்தில் அறுப்போரிடம், முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, எரிப்பதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்று சொல்வேன் ' என்றான்."
மத்தேயு 13 : 31 (RCTA)
இன்னுமோர் உவமையை அவர்களுக்கு எடுத்துச்சொன்னார்: "விண்ணரசு, கடுகு மணிக்கு ஒப்பாகும். அதை ஒருவன் எடுத்துத் தன் வயலில் விதைக்கிறான்.
மத்தேயு 13 : 32 (RCTA)
அது விதைகளிலெல்லாம் மிகச் சிறியதாயினும், வளர்ந்ததும் செடிகளிலெல்லாம் மிகப் பெரியதாகி வானத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் தங்கக்கூடிய மரமாகும்."
மத்தேயு 13 : 33 (RCTA)
இன்னுமோர் உவமையும் அவர்களுக்கு எடுத்துச்சொன்னார்: "விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். அதைப் பெண் ஒருத்தி எடுத்து மூன்றுபடி மாவில் பொதிந்து வைக்கிறாள். மாவு முழுதும் புளிப்பேறுகிறது."
மத்தேயு 13 : 34 (RCTA)
இவையெல்லாம் இயேசு மக்கட்கூட்டத்திற்கு உவமைகளால் சொன்னார். உவமைகளால் அன்றி அவர் அவர்களிடம் ஒன்றும் பேசியதில்லை.
மத்தேயு 13 : 35 (RCTA)
'உவமைகளில் பேசுவேன்; உலகம் தோன்றியதுமுதல் மறைந்துள்ளதை வெளியாக்குவேன்' என்று இறைவாக்கினர் கூறியது இவ்வாறு நிறைவேற வேண்டியிருந்தது.
மத்தேயு 13 : 36 (RCTA)
பின்பு அவர் கூட்டத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்பொழுது அவருடைய சீடர் அவரை அணுகி, "வயலில் விதைத்த களைகளின் உவமையை எங்களுக்கு விளக்கிக்கூறும்" என்றனர்.
மத்தேயு 13 : 37 (RCTA)
அதற்கு அவர், "நல்ல விதை விதைக்கிறவன் மனுமகன்.
மத்தேயு 13 : 38 (RCTA)
வயல், இவ்வுலகம்; நல்ல விதை, அரசின் மக்கள்; களைகளோ தீயோனுடைய மக்கள்.
மத்தேயு 13 : 39 (RCTA)
அவற்றை விதைத்த பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுப்போர், வானதூதர்.
மத்தேயு 13 : 40 (RCTA)
எவ்வாறு களைகள் ஒன்றுசேர்த்துத் தீயில் எரிக்கப்படுமோ, அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.
மத்தேயு 13 : 41 (RCTA)
மனுமகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய அரசில் இடறலாய் உள்ள யாவற்றையும் நெறிகெட்டவர்களையும் ஒன்று சேர்த்து, ஃ தீச்சூளையில் தள்ளுவார்கள்.
மத்தேயு 13 : 42 (RCTA)
அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்.
மத்தேயு 13 : 43 (RCTA)
அப்பொழுது நீதிமான்கள் தம் தந்தையின் அரசில் கதிரோனைப்போல் ஒளிர்வர். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.
மத்தேயு 13 : 44 (RCTA)
"விண்ணரசு, நிலத்தில் மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பாகும். அதைக் கண்டுபிடித்தவன் அதை மறைத்துவிட்டு, அதைக் கண்ட மகிழ்ச்சியில் போய்த் தனக்குள்ளதெல்லாம் விற்று அந்நிலத்தை வாங்கிக்கொள்கிறான்.
மத்தேயு 13 : 45 (RCTA)
பின்னும் விண்ணரசு நல்ல முத்துகளைத் தேடும் வணிகனுக்கு ஒப்பாகும்.
மத்தேயு 13 : 46 (RCTA)
விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டதும், போய்த் தனக்குள்ளதெல்லாம் விற்று அதை வாங்கிக்கொள்கிறான்.
மத்தேயு 13 : 47 (RCTA)
"மேலும் விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லாவகை மீன்களையும் வாரிவரும் வலைக்கு ஒப்பாகும்.
மத்தேயு 13 : 48 (RCTA)
வலை நிறைந்ததும் அதை வெளியில் இழுத்து, கரையில் அமர்ந்து, நல்லவற்றைப் பொறுக்கிக் கூடைகளில் வைத்துக்கொண்டு தீயவற்றை வெளியே எறிந்துவிடுகின்றனர்.
மத்தேயு 13 : 49 (RCTA)
இவ்வாறே உலகமுடிவிலும் நடக்கும். வானதூதர் சென்று தீயோரை நீதிமான்களிடையே இருந்து பிரித்து,
மத்தேயு 13 : 50 (RCTA)
தீச்சூளையில் தள்ளுவர். அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்" என்றார்.
மத்தேயு 13 : 51 (RCTA)
"இவையெல்லாம் கண்டுணர்ந்தீர்களா ?" என்று இயேசு கேட்க, அவர்கள், "ஆம்" என்றனர்.
மத்தேயு 13 : 52 (RCTA)
அவர், "ஆகையால், விண்ணரசில் சீடனான மறைநூல் அறிஞன் எவனும், தன் கருவூலத்தினின்று புதியனவும் பழையனவும் எடுக்கிற வீட்டுத்தலைவனுக்கு ஒப்பாவான்" என்றார்.
மத்தேயு 13 : 53 (RCTA)
இந்த உவமைகளை முடித்ததும் இயேசு அவ்விடம் விட்டுச் சென்றார்.
மத்தேயு 13 : 54 (RCTA)
தம் சொந்த ஊருக்கு வந்து அவர்களது செபக்கூடத்தில் போதிக்கலானார். அவர்கள் மலைத்துப்போய், "இந்த ஞானமும் புதுமைகளும் இவருக்கு எங்கிருந்து வந்தன ?
மத்தேயு 13 : 55 (RCTA)
இவர் தச்சன்மகன் அல்லரோ ? இவருடைய தாய், மரியாள் என்பவள் அல்லளோ ? இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?
மத்தேயு 13 : 56 (RCTA)
இவருடைய சகோதரிகள் யாவரும் நம்மிடையே இல்லையா ? பின் இதெல்லாம் இவருக்கு எங்கிருந்து வந்தது ?" என்று சொல்லி, அவரைப்பற்றி இடறல்பட்டனர்.
மத்தேயு 13 : 57 (RCTA)
இயேசு அவர்களை நோக்கி, "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர, மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு" என்றார்.
மத்தேயு 13 : 58 (RCTA)
அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை.
❮
❯