மத்தேயு 12 : 1 (RCTA)
அக்காலத்தில் இயேசு ஓய்வுநாளில் விளைச்சல்வழியே சென்றார். அவருடைய சீடர்களுக்குப் பசியெடுக்க, அவர்கள் கதிர்களைக் கொய்து தின்னத்தொடங்கினர்.
மத்தேயு 12 : 2 (RCTA)
இதைக் கண்ட பரிசேயர் அவரை நோக்கி, "இதோ! உம் சீடர் ஓய்வுநாளில் செய்யத் தகாததைச் செய்கிறார்களே" என்றனர்.
மத்தேயு 12 : 3 (RCTA)
அவரோ அவர்களிடம், "தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபொழுது அவர் என்ன செய்தார் என்று நீங்கள் வாசித்ததில்லையோ ?
மத்தேயு 12 : 4 (RCTA)
அவர் கடவுளின் ஆலயத்தில் நுழைந்து காணிக்கை அப்பங்களை உண்டார். அவரோடு இருந்தவர்களும் உண்டனர். அவற்றை அவரோ அவரோடு இருந்தவர்களோ உண்ணலாகாதன்றோ ? குருக்கள்மட்டுமே உண்ணலாம்.
மத்தேயு 12 : 5 (RCTA)
ஓய்வுநாளில் குருக்கள் கோயிலில் ஓய்வை மீறினாலும் அது குற்றமாகாது என்று திருச்சட்டத்தில் நீங்கள் வாசித்ததில்லையோ ?
மத்தேயு 12 : 6 (RCTA)
ஆனால் கோயிலைவிடப் பெரியது இங்கே இருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 12 : 7 (RCTA)
'பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருப்பின், குற்றமற்றோரைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள்.
மத்தேயு 12 : 8 (RCTA)
ஏனெனில், மனுமகன் ஓய்வுநாளுக்கு ஆண்டவர்" என்றார்.
மத்தேயு 12 : 9 (RCTA)
அவர் அங்கிருந்து புறப்பட்டு அவர்களின் செபக்கூடத்திற்கு வந்தார்.
மத்தேயு 12 : 10 (RCTA)
அங்கே சூம்பின கையன் ஒருவன் இருந்தான். அவர்மேல் குற்றம் சாட்டும்படி, "ஓய்வுநாளில் குணமாக்குதல் முறையா?" என்று கேட்டனர்.
மத்தேயு 12 : 11 (RCTA)
அதற்கு அவர், "தனக்கு இருக்கும் ஒரே ஓர் ஆடும் ஓய்வுநாளில் குழியில் விழுந்துவிட்டால் உங்களில் எவனாவது அதைத் தூக்கிவிடாமல் இருப்பானா ?
மத்தேயு 12 : 12 (RCTA)
ஆட்டைக்காட்டிலும் மனிதன் எவ்வளவோ மேலானவன்! ஆதலால், ஓய்வுநாளில் நன்மை செய்வது முறையே" என்றார்.
மத்தேயு 12 : 13 (RCTA)
பின் அவனை நோக்கி, "உன் கையை நீட்டு" என்றார். நீட்டினான். அது மற்றக்கைபோலக் குணம் ஆயிற்று.
மத்தேயு 12 : 14 (RCTA)
பரிசேயரோ வெளியே போய், அவரை எப்படித் தொலைக்கலாம் என்று அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.
மத்தேயு 12 : 15 (RCTA)
இதை அறிந்து, இயேசு அங்கிருந்து விலகினார். அவரைப் பலர் பின்தொடர அவர்கள் அனைவரையும் குணமாக்கினார்.
மத்தேயு 12 : 16 (RCTA)
தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவர்களுக்குக் கண்டிப்பாகச் சொன்னார்.
மத்தேயு 12 : 17 (RCTA)
இசையாஸ் இறைவாக்கினர் கூறியுள்ளது இவ்வாறு நிறைவேற வேண்டியிருந்தது:
மத்தேயு 12 : 18 (RCTA)
'இதோ நான் தேர்ந்தெடுத்த ஊழியன், இவரே என் அன்பர். இவரிடம் என் ஆன்மா பூரிப்படைகிறது, இவர்மேல் எனது ஆவியைத் தங்கச்செய்வேன்; புறவினத்தாருக்கு இவர் அறத்தை அறிவிப்பார்.
மத்தேயு 12 : 19 (RCTA)
சச்சரவு செய்யமாட்டார், கூக்குரலிடவும் மாட்டார்; இவர் குரல் தெருவிலே கேட்காது.
மத்தேயு 12 : 20 (RCTA)
அறம் வெற்றிபெறச் செய்யும்வரை இவர் நெரிந்த நாணலை முறியார், புகையும் திரியை அணையார்.
மத்தேயு 12 : 21 (RCTA)
புறவினத்தார் இவர் பெயரில் நம்பிக்கை வைப்பர். '
மத்தேயு 12 : 22 (RCTA)
அப்பொழுது பேய்பிடித்த ஒருவனை அவரிடம் கொண்டுவந்தனர். அவன் குருடும் ஊமையுமாய் இருந்தான். அவர் அவனைக் குணப்படுத்தினார். அவன் பேச்சும் பார்வையும் பெற்றான்.
மத்தேயு 12 : 23 (RCTA)
கூட்டமெல்லாம் திகைத்துப்போய், "தாவீதின் மகன் இவரோ?" என்று பேசிக்கொண்டது.
மத்தேயு 12 : 24 (RCTA)
இதைக் கேட்ட பரிசேயரோ, "இவன் பேய் ஓட்டுவது, பேய்கள் தலைவனான பெயல்செபூலைக்கொண்டே" என்றனர்.
மத்தேயு 12 : 25 (RCTA)
இயேசு அவர்கள் சிந்தனையை அறிந்து அவர்களை நோக்கிக் கூறியது: "தனக்கு எதிராகப் பிரியும் எந்த அரசும் பாழாய்ப்போம். தனக்கு எதிராகப் பிரியும் எந்த நகரும் வீடும் நிலைக்காது.
மத்தேயு 12 : 26 (RCTA)
சாத்தான் சாத்தானையே ஓட்டினால் அவன் தனக்கு எதிராகத் தானே பிரிந்திருக்கிறான். பின் அவன் அரசு எப்படி நிலைக்கும் ?
மத்தேயு 12 : 27 (RCTA)
நான் பேய்களை ஓட்டுவது பெயல்செபூலைக்கொண்டு என்றால், உங்கள் மக்கள் யாரைக்கொண்டு ஓட்டுகிறார்கள்? எனவே, அவர்களே உங்களுக்குத் தீர்ப்பிடுவார்கள்.
மத்தேயு 12 : 28 (RCTA)
ஆனால் நான் பேய்களை ஓட்டுவது கடவுளின் ஆவியைக்கொண்டு என்றால், கடவுளின் அரசு உங்களிடம் வந்துள்ளது.
மத்தேயு 12 : 29 (RCTA)
"ஒருவன் முதலில் வலியவனைக் கட்டினால் அன்றி, எப்படி அவ்வலியவன் வீட்டில் நுழைந்து அவன் பொருட்களைக் கொள்ளையிட முடியும்? கட்டின பின்புதான் அவனுடைய வீட்டைக் கொள்ளையிடுவான்.
மத்தேயு 12 : 30 (RCTA)
"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.
மத்தேயு 12 : 31 (RCTA)
எனவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் தேவதூஷணமும் மனிதருக்கு மன்னிக்கப்படும்.
மத்தேயு 12 : 32 (RCTA)
ஆனால், ஆவியானவரைத் தூஷிப்பது மன்னிக்கப்பெறாது. மனுமகனுக்கு எதிராகப் பேசுகிறவன் எவனும் மன்னிப்புப்பெறுவான். ஆனால், பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசுகிறவன் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெறான்.
மத்தேயு 12 : 33 (RCTA)
"மரமும் நல்லது, கனியும் நல்லது என்று சொல்லுங்கள்; அல்லது மரமும் தீயது, கனியும் தீயது என்று சொல்லுங்கள்.
மத்தேயு 12 : 34 (RCTA)
விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவராயிருக்க எவ்வாறு நல்லவை பேசமுடியும்? ஏனெனில், உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்.
மத்தேயு 12 : 35 (RCTA)
நல்லவன் நல்ல கருவூலத்தினின்று நல்லவற்றை எடுக்கிறான். தீயவனோ தீய கருவூலத்தினின்று தீயவற்றை எடுக்கிறான்.
மத்தேயு 12 : 36 (RCTA)
மனிதர் பேசும் பயனற்ற சொல் ஒவ்வொன்றுக்கும் தீர்வை நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 12 : 37 (RCTA)
ஏனெனில், உன் வார்த்தைகளைக்கொண்டே குற்றமற்றவன் எனப்படுவாய்; உன் வார்த்தைகளைக்கொண்டே குற்றவாளி எனப்படுவாய்."
மத்தேயு 12 : 38 (RCTA)
அப்பொழுது மறைநூல் அறிஞர், பரிசேயருள் சிலர் அவருக்கு மறுமொழியாக: "போதகரே, நீர் அருங்குறி ஒன்று செய்வதைக் காண விரும்புகிறோம்" என்றனர்.
மத்தேயு 12 : 39 (RCTA)
அதற்கு அவர் கூறியது: "கெட்டுப்போன விபசாரத் தலைமுறை அருங்குறி ஒன்று கேட்கிறது. யோனாஸ் இறைவாக்கினரின் அருங்குறியேயன்றி வேறு எந்த அருங்குறியும் அதற்கு அளிக்கப்படாது.
மத்தேயு 12 : 40 (RCTA)
எவ்வாறு யோனாஸ் மூன்று பகலும் மூன்று இரவும் திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்தாரோ, அவ்வாறே மனுமகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
மத்தேயு 12 : 41 (RCTA)
தீர்வையின்போது நினிவே மக்கள் இத்தலைமுறைக்கு எதிராக எழுந்து இதனைக் கண்டனஞ்செய்வார்கள். ஏனெனில், அவர்கள் யோனாஸ் உரைத்த தூதைக் கேட்டு மனந்திரும்பினார்கள். யோனாசிலும் மேலானது இதோ! இங்குள்ளது.
மத்தேயு 12 : 42 (RCTA)
தீர்வையின்போது தென்னாட்டு அரசி இத்தலைமுறைக்கு எதிராக எழுந்து இதனைக் கண்டனஞ்செய்வாள். ஏனெனில், சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க உலகின் எல்லையிலிருந்து வந்தாள். சாலொமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது.
மத்தேயு 12 : 43 (RCTA)
"அசுத்த ஆவி ஒருவனை விட்டு வெளியேறியபின் வறண்ட இடங்களில் சுற்றி அலைந்து இளைப்பாற இடம் தேடிக் கண்டடையாமல், ஃ
மத்தேயு 12 : 44 (RCTA)
'நான் விட்டுவந்த என் வீட்டிற்கே திரும்புவேன்' என்று சொல்லுகிறது. திரும்பி வந்து அவ்வீடு வெறுமையாயும், கூட்டி அழகுபடுத்தியும் இருப்பதைக் காண்கிறது.
மத்தேயு 12 : 45 (RCTA)
மீண்டும் சென்று தன்னிலும் பொல்லாத வேறு ஏழு பேய்களைத் தன்னோடு அழைத்து வர, அவை அதனுள் நுழைந்து குடியிருக்கின்றன. அம் மனிதனின் பின்னைய நிலை முன்னைய நிலையினும் மோசமாயிற்று. இப்பொல்லாத தலைமுறைக்கும் இவ்வாறே நிகழும்."
மத்தேயு 12 : 46 (RCTA)
அவர் கூட்டத்தை நோக்கி இன்னும் பேசிக்கொண்டிருக்கும்போது, இதோ! அவருடைய தாயும் சகோதரரும் அவருடன் பேச வெளியே காத்துக்கொண்டிருந்தனர்.
மத்தேயு 12 : 47 (RCTA)
ஒருவன் அவரை நோக்கி, "இதோ! உம் தாயும் சகோதரரும் உம்மோடு பேச வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர்" என்றான்.
மத்தேயு 12 : 48 (RCTA)
இதைத் தம்மிடம் கூறியவனுக்கு அவர் மறுமொழியாக: "யார் என் தாய்? யார் என் சகோதரர்?" என்று சொல்லி,
மத்தேயு 12 : 49 (RCTA)
தம் சீடர்பக்கம் கையைக் காட்டி, "இதோ, என் தாயும் என் சகோதரரும்.
மத்தேயு 12 : 50 (RCTA)
வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

BG:

Opacity:

Color:


Size:


Font: