மத்தேயு 11 : 1 (RCTA)
இயேசு தம் பன்னிரு சீடருக்கும் கட்டளை கொடுத்து முடிந்ததும், பக்கத்து ஊர்களில் போதிக்கவும் தூது உரைக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.
மத்தேயு 11 : 2 (RCTA)
அருளப்பரோ கிறிஸ்துவின் செயல்களைச் சிறையில் கேள்வியுற்று,
மத்தேயு 11 : 3 (RCTA)
"வரப்போகிறவர் நீர்தாமோ? வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ?" என்று தம் சீடர்வழியாகக் கேட்டு அனுப்பினார்.
மத்தேயு 11 : 4 (RCTA)
இயேசு மறுமொழியாக: "நீங்கள் கண்டதையும் கேட்டதையும் அருளப்பரிடம் போய் அறிவியுங்கள்.
மத்தேயு 11 : 5 (RCTA)
குருடர் பார்க்கின்றனர், முடவர் நடக்கின்றனர், தொழுநோயாளர் குணமடைகின்றனர், செவிடர் கேட்கின்றனர், இறந்தவர் உயிர்க்கின்றனர், எளியவர்க்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
மத்தேயு 11 : 6 (RCTA)
என்னைப்பற்றி இடறல்படாதவன் பேறுபெற்றவன்" என்றார்.
மத்தேயு 11 : 7 (RCTA)
அவர்கள் போகும்போது இயேசு அருளப்பரைப்பற்றி மக்கட்கூட்டத்திற்குச் சொன்னதாவது: "எதைப் பார்க்கப் பாலைவனத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையோ?
மத்தேயு 11 : 8 (RCTA)
பின் எதைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த மனிதனையோ? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசர் மாளிகையில் இருக்கின்றனர்.
மத்தேயு 11 : 9 (RCTA)
பின் எதைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினருக்கும் மேலானவரைத்தான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 11 : 10 (RCTA)
இவரைப்பற்றித்தான்: 'இதோ! என் தூதரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்' என்று எழுதியுள்ளது.
மத்தேயு 11 : 11 (RCTA)
நான் உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: "பெண்களிடம் பிறந்தவர்களுள் ஸ்நாபக அருளப்பருக்கு மேலான எவரும் தோன்றவில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்.
மத்தேயு 11 : 12 (RCTA)
ஸ்நாபக அருளப்பர் நாள்முதல் இதுவரை, விண்ணரசு பலவந்தத்திற்கு உள்ளாகிவருகிறது; பலவந்தம் செய்வோர் அதைக் கைப்பற்றுகின்றனர்.
மத்தேயு 11 : 13 (RCTA)
ஏனெனில், திருச்சட்டமும் இறைவாக்கினர் அனைவரும் அருளப்பர்வரை இறைவாக்கு உரைத்தனர்.
மத்தேயு 11 : 14 (RCTA)
நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பினால், வர இருக்கும் எலியாஸ் இவரே.
மத்தேயு 11 : 15 (RCTA)
கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.
மத்தேயு 11 : 16 (RCTA)
"இத்தலைமுறையை யாருக்கு ஒப்பிடுவேன்? பொது இடத்தில் உட்கார்ந்து தம் தோழரைக் கூவியழைத்து:
மத்தேயு 11 : 17 (RCTA)
'நாங்கள் குழல் ஊதினோம், நீங்கள் ஆடவில்லை; நாங்கள் புலம்பினோம் நீங்கள் மாரடிக்கவில்லை' என்று கூறும் சிறுவரைப்போன்றது.
மத்தேயு 11 : 18 (RCTA)
ஏனெனில், அருளப்பர் வந்தபோது உண்ணா நோன்பிருந்தார். குடிக்கவுமில்லை. அவரைப் பேய்பிடித்தவன் என்று சொல்லுகிறார்கள்.
மத்தேயு 11 : 19 (RCTA)
மனுமகன் வந்தபோதோ உண்டார், குடித்தார்; அவரை ' இதோ! போசனப்பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன்', என்கிறார்கள். ஆனால், தேவஞானம் சரியென்று அதன் செயலால் விளங்கிற்று."
மத்தேயு 11 : 20 (RCTA)
அவர் புதுமை பல செய்த நகரங்கள் மனந்திரும்பாமையால் அவற்றைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார்:
மத்தேயு 11 : 21 (RCTA)
"கொராசின் நகரே, உனக்கு ஐயோ கேடு! பெத்சாயிதா நகரே, உனக்கு ஐயோ கேடு! ஏனெனில், உங்களிடம் செய்த புதுமைகள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருப்பின், முன்பே கோணி உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பர்.
மத்தேயு 11 : 22 (RCTA)
எனினும், தீர்வைநாளில் தீர், சீதோனுக்கு நேரிடுவது உங்களுக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாய் இராது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 11 : 23 (RCTA)
கப்பர் நகூமே, வானளாவ உயர்வாயோ? பாதாளம்வரை தாழ்ந்திடுவாய். ஏனெனில், உன்னிடம் செய்த புதுமைகள் சோதோமில் செய்யப்பட்டிருப்பின், இந்நாள்வரை அது நிலைத்திருக்குமே.
மத்தேயு 11 : 24 (RCTA)
எனினும், தீர்வைநாளில் சோதோம் நாட்டுக்கு நேரிடுவது உனக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாய் இராது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
மத்தேயு 11 : 25 (RCTA)
அவ்வேளையில் இயேசு கூறியதாவது: "தந்தையே, விண்ணிற்கும் மண்ணிற்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் இவற்றை மறைத்துச் சிறுவருக்கு வெளிப்படுத்தியதால் உம்மைப் புகழ்கிறேன்.
மத்தேயு 11 : 26 (RCTA)
ஆம், தந்தாய், இதுவே உமது திருவுளம்.
மத்தேயு 11 : 27 (RCTA)
என் தந்தை எல்லாவற்றையும் எனக்குக் கையளித்துள்ளார். மகன் யாரென்று, தந்தையன்றி வேறெவனும் அறியான். தந்தை யாரென்று மகனும், மகன் எவனுக்கு வெளிப்படுத்துவாரோ அவனுமன்றி வேறெவனும் அறியான்.
மத்தேயு 11 : 28 (RCTA)
"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்.
மத்தேயு 11 : 29 (RCTA)
உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றி கிடைக்கும்.
மத்தேயு 11 : 30 (RCTA)
ஆம், என் நுகம் இனிது, என் சுமை எளிது."
❮
❯