மாற்கு 7 : 1 (RCTA)
பரிசேயரும், யெருசலேமிலிருந்து வந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.
மாற்கு 7 : 2 (RCTA)
அவர்கள் அவருடைய சீடரில் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதைக் கண்டனர்.
மாற்கு 7 : 3 (RCTA)
பரிசேயரும் எல்லா யூதரும் முன்னோரின் பரம்பரையைக் கடைப்பிடித்துக் கைகளைத் தேய்த்துக் கழுவாமல் உண்பதில்லை.
மாற்கு 7 : 4 (RCTA)
பொது இடங்களிலிருந்து வரும்பொழுது, குளிக்காமல் உண்பதில்லை. பரம்பரையின்படி கடைப்பிடிக்க வேண்டியவை இன்னும் பல இருந்தன. அதாவது, கிண்ணங்கள், பாத்திரங்கள், செம்புகளைக் கழுவுவது முதலியன.
மாற்கு 7 : 5 (RCTA)
எனவே, "முன்னோர் பரம்பரையின்படி உம் சீடர் நடவாமல் தீட்டான கைகளால் உண்பதேன்?" என்று பரிசேயரும் மறைநூல் அறிரும் அவரைக் கேட்டனர்.
மாற்கு 7 : 6 (RCTA)
அதற்கு அவர், "வெளிவேடக்காரராகிய உங்களைப் பற்றி இசையாஸ் பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார்: 'இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது.
மாற்கு 7 : 7 (RCTA)
அவர்கள் என்னை வழிபடுவது வீண், ஏனெனில், அவர்கள் போதிப்பது மனிதர்கற்பனை.' என்று அவர் எழுதியுள்ளார்.
மாற்கு 7 : 8 (RCTA)
கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதர்களுடைய பரம்பரையைக் கைப்பிடிக்கிறீர்கள்" என்றார்.
மாற்கு 7 : 9 (RCTA)
மேலும் சொன்னதாவது: "உங்கள் பரம்பரையைக் கடைப்பிடிக்கக் கடவுளுடைய கட்டளையை எவ்வளவு நன்றாக வெறுமையாக்குகிறீர்கள்!
மாற்கு 7 : 10 (RCTA)
ஏனெனில், 'உன் தாய் தந்தையரைப் போற்று' என்றும், 'தாய் தந்தையரைத் தூற்றுகிறவன் செத்தொழியட்டும்' என்றும் மோயீசன் கூறியுள்ளார்.
மாற்கு 7 : 11 (RCTA)
ஆனால், ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி, 'நான் உமக்கு உதவியாகக் கொடுக்கக்கூடிய தெல்லாம் கோர்பான் - அதாவது நேர்த்திக்கடன் - ஆயிற்று' என்பானாகில்,
மாற்கு 7 : 12 (RCTA)
அதன்பின் அவன் தன் தாய் தந்தையர்க்கு எவ்வுதவியும் செய்ய நீங்கள் விடுவதில்லை.
மாற்கு 7 : 13 (RCTA)
இவ்வாறு நீங்கள் சொல்லிக் கொடுத்த பரம்பரையின் பொருட்டு, கடவுளின் வார்த்தையை வீணாக்கிவிடுகிறீர்கள். இவை போன்ற பலவும் செய்கிறீர்கள்."
மாற்கு 7 : 14 (RCTA)
மீண்டும் அவர் கூட்டத்தைத் தம்மிடம் அழைத்து, "அனைவரும் நான் சொல்வதைக் கேட்டு உணர்ந்துகொள்ளுங்கள்.
மாற்கு 7 : 15 (RCTA)
புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே சென்று அவனை மாசுபடுத்தக்கூடியது ஒன்றுமில்லை. மனிதனுள்ளிருந்து வெளிவருவதே அவனை மாசுபடுத்தும்.
மாற்கு 7 : 16 (RCTA)
கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.
மாற்கு 7 : 17 (RCTA)
அவர் கூட்டத்தை விட்டு வீட்டிற்கு வந்தபோது, அவருடைய சீடர் இவ்வுவமையின் பொருளைக் கேட்டனர்.
மாற்கு 7 : 18 (RCTA)
அதற்கு அவர், "உங்களுக்குமா அறிவில்லை? புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே செல்வது எதுவும் அவனை மாசுபடுத்த முடியாதென்று உணர வில்லையா?
மாற்கு 7 : 19 (RCTA)
ஏனெனில், அது அவனுடைய உள்ளத்துள் நுழையாமல், அவனுடைய வயிற்றிலே சென்று ஒதுக்கிடத்திற்குப் போய்விடுகிறது" என்றார். இவ்வாறு உணவுகள் எல்லாம் தூயனவென்று குறிப்பிட்டார்.
மாற்கு 7 : 20 (RCTA)
மேலும், "மனிதனுள்ளிருந்து, வருவதே அவனை மாசுபடுத்தும்.
மாற்கு 7 : 21 (RCTA)
ஏனெனில், மனிதர் உள்ளத்தினின்றே தீய எண்ணம், மோகம்,
மாற்கு 7 : 22 (RCTA)
களவு, கொலை, விபசாரம், ஃ பேராசை, தீச்செயல், கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல், செருக்கு, மதிகேடு ஆகியவை வெளிவரும்.
மாற்கு 7 : 23 (RCTA)
இத்தீயவை யாவும் உள்ளத்திலிருந்து வந்து மனிதனை மாசுபடுத்தும்" என்றார்.
மாற்கு 7 : 24 (RCTA)
அங்கிருந்து புறப்பட்டுத் தீர் நாட்டுக்குச் சென்றார். ஒரு வீட்டிற்குள் போனார். அது ஒருவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அது மறைவாயிருக்க முடியவில்லை.
மாற்கு 7 : 25 (RCTA)
உடனே ஒரு பெண் அவரைப்பற்றிக் கேள்வியுற்று, உள்ளே வந்து அவர் காலில் விழுந்தாள். அவளுடைய மகளை அசுத்த ஆவி பிடித்திருந்தது.
மாற்கு 7 : 26 (RCTA)
அவள் புற இனத்தவள். சீரோபெனீசிய குலத்தைச் சார்ந்தவள். தன் மகளிடமிருந்து பேயை ஓட்டுமாறு அவரைக் கேட்டுக்கொண்டாள்.
மாற்கு 7 : 27 (RCTA)
அவரோ, அவளைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று" என்றார்.
மாற்கு 7 : 28 (RCTA)
அவளோ மறுமொழியாக: "ஆமாம் ஆண்டவரே, ஆனால் மேசைக்கடியில் நாய்க்குட்டிகளும் குழந்தைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே" என்றாள்.
மாற்கு 7 : 29 (RCTA)
அதற்கு அவர், "இவ்வார்த்தையின் நிமித்தம் நீ போகலாம்; பேய் உன் மகளை விட்டுவிட்டது" என்றார்.
மாற்கு 7 : 30 (RCTA)
அவள் வீடு திரும்பியபோது சிறுமி கட்டிலில் கிடப்பதையும், பேய் அகன்று விட்டதையும் கண்டாள்.
மாற்கு 7 : 31 (RCTA)
மீண்டும், தீர் நாட்டை விட்டு, சீதோன் வழியாகத் தெக்கப்போலி நாட்டின் நடுவே கலிலேயாக் கடலை அடைந்தார்.
மாற்கு 7 : 32 (RCTA)
செவிடனும் திக்குவாயனுமாகிய ஒருவனை அவரிடம் கொண்டுவந்து, அவன்மீது கையை வைக்குமாறு அவரை வேண்டினர்.
மாற்கு 7 : 33 (RCTA)
அவர் அவனைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று தம் விரல்களை அவன் காதுகளில் விட்டு, உமிழ் நீரால் அவன் நாவைத் தொட்டார்.
மாற்கு 7 : 34 (RCTA)
பின், வானத்தை அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சுவிட்டு அவனை நோக்கி, "எப்பெத்தா" -- அதாவது, "திறக்கப்படு" -- என்றார்.
மாற்கு 7 : 35 (RCTA)
உடனே அவன் காதுகள் திறக்கப்பட்டன. நாவின் கட்டு அவிழ்ந்தது. நன்றாகப் பேசினான்.
மாற்கு 7 : 36 (RCTA)
இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். எவ்வளவுக்கு அவர் கட்டளையிட்டாரோ, அவ்வளவுக்கு அதிகமாய் அவர்கள் அதை விளம்பரப்படுத்தினர்.
மாற்கு 7 : 37 (RCTA)
அவர்கள் மிகவும் மலைத்துப்போய், "எல்லாம் நன்றாகச் செய்திருக்கிறார். செவிடர் கேட்கவும், ஊமைகள் பேசவும் செய்கிறார்" என்று கூறினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37

BG:

Opacity:

Color:


Size:


Font: