மாற்கு 6 : 1 (RCTA)
அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தம் சொந்த ஊருக்கு வந்தார். அவர் சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர்.
மாற்கு 6 : 2 (RCTA)
ஓய்வுநாளன்று செபக்கூடத்தில் போதிக்கத் தொடங்கினார். கேட்டவர் பலர் மலைத்துப்போய், "இதெல்லாம் இவருக்கு எங்கிருந்து வந்தது? என்னே இவர் பெற்ற ஞானம்! என்னே இவர் கையால் ஆகும் புதுமைகள்!
மாற்கு 6 : 3 (RCTA)
இவர் தச்சன் அல்லரோ? மரியாளின் மகன் தானே! யாகப்பன், சூசை, யூதா, சீமோன் இவர்களுடைய சகோதரர்தானே! இவர் சகோதரிகளும் இங்கு நம்மோடு இல்லையா ?' என்று சொல்லி அவர்மட்டில் இடறல்பட்டனர்.
மாற்கு 6 : 4 (RCTA)
இயேசு அவர்களை நோக்கி, "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு" என்றார்.
மாற்கு 6 : 5 (RCTA)
அங்கே பிணியாளர் ஒருசிலர்மீது கைகளை வைத்துக் குணமாக்கியது தவிர வேறு ஒரு புதுமையும் செய்ய முடியவில்லை.
மாற்கு 6 : 6 (RCTA)
அவர்களுக்கு விசுவாசமில்லாததைக் கண்டு அவர் வியப்புற்றார். சுற்றிலுமுள்ள ஊர்களில் போதித்துக் கொண்டு வந்தார்.
மாற்கு 6 : 7 (RCTA)
பன்னிருவரையும் அழைத்து இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்கு அசுத்த அவிகளின்மேல் அதிகாரம் அளித்தார்.
மாற்கு 6 : 8 (RCTA)
மேலும் பயணத்துக்கு ஒரு கோல் தவிர, பையோ உணவோ, மடியில் காசோ கொண்டுபோக வேண்டாம் என்று கட்டளையிட்டார்.
மாற்கு 6 : 9 (RCTA)
ஆனால், மிதியடி போட்டுக்கொள்ளலாம். "உள்ளாடை இரண்டு அணிய வேண்டாம்" என்றார்.
மாற்கு 6 : 10 (RCTA)
பின்னும் அவர்களுக்குக் கூறியது: " நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால் அவ்விடத்திலிருந்து போகும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.
மாற்கு 6 : 11 (RCTA)
எந்த ஊராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுக்குச் செவி சாய்க்காமலும் இருந்தால், நீங்கள் அங்கிருந்து வெளியேறி அவர்களுக்கு எதிர்சாட்சியாக உங்கள் காலிலிருக்கும் தூசியைத் தட்டிவிடுங்கள்."
மாற்கு 6 : 12 (RCTA)
அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனந்திரும்ப வேண்டுமென்று அறிவித்தனர்.
மாற்கு 6 : 13 (RCTA)
பேய்கள் பல ஓட்டினர். பிணியாளர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினர்.
மாற்கு 6 : 14 (RCTA)
ஏரோது அரசன் அவரைப்பற்றிக் கேள்வியுற்றான். ஏனெனில், அவர் பெயர் எங்கும் விளங்கிற்று. மக்களும், "ஸ்நாபக அருளப்பர் இறந்தோரிடமிருந்து உயிர்த்திருக்கிறார். ஆதலால் புதுமை செய்யும் வல்லமை இவரிடம் செயலாற்றுகிறது". என்றனர்.
மாற்கு 6 : 15 (RCTA)
"இவர் எலியாஸ்" என்றனர் சிலர். "இறைவாக்கினர்களைப்போல் இருவரும் ஓர் இறைவாக்கினர்" என்றனர் வேறு சிலர்.
மாற்கு 6 : 16 (RCTA)
இதைக் கேட்ட ஏரோது, "இவர் அருளப்பர்தாம். அவர்தலையை நான் வெட்டினேன். ஆனால் அவர் உயிர்த்திருக்கிறார்" என்றான்.
மாற்கு 6 : 17 (RCTA)
இந்த ஏரோது தன் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் பொருட்டு, ஆள்விட்டு, அருளப்பரைப் பிடித்துச் சிறையில் விலங்கிட்டிருந்தான். ஏனெனில், அவளைத் தன் மனைவியாக்கிருந்தான்.
மாற்கு 6 : 18 (RCTA)
அருளப்பரோ ஏரோதிடம், "உன் சகோதரன் மனைவியை நீ வைத்திருக்கலாகாது" என்று சொல்லி வந்தார்.
மாற்கு 6 : 19 (RCTA)
ஏரோதியாள் அவர்மேல் வர்மம் கொண்டு, அவரைக் கொல்ல விரும்பியும் முடியாமல் போயிற்று.
மாற்கு 6 : 20 (RCTA)
ஏனெனில், அருளப்பர் நீதிமானும் புனிதரும் என்றறிந்த ஏரோது அவருக்கு அஞ்சி, அவரைப் பாதுகாத்து வந்தான். அவர் சொல்லைக் கேட்கும்போது மிகக் கலக்கமுறுவான். ஆயினும் அவருக்கு மனமுவந்து செவிசாய்ப்பான்.
மாற்கு 6 : 21 (RCTA)
ஒருநாள் ஏரோதியாளுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. ஏரோது, தன் பிறப்பு விழாவில் பெருங்குடி மக்களுக்கும் படைத்தலைவர்க்கும் கலிலேயாவின் பெரியோர்க்கும் விருந்து செய்தான்.
மாற்கு 6 : 22 (RCTA)
அந்த எரோதியாளின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் மகிழ்வித்தாள். அரசன் சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான்.
மாற்கு 6 : 23 (RCTA)
"நீ என்ன கேட்டாலும் அது என் அரசில் பாதியேயானாலும், உனக்குக் கொடுக்கிறேன்" என்று ஆணையுமிட்டான்.
மாற்கு 6 : 24 (RCTA)
அவள் வெளியே சென்று, "என்ன கேட்கலாம்?" என்று தன் தாயை வினவினாள். அவளோ, ஸ்நாபக அருளப்பரின் தலையைக் கேள்" என்றாள். உடனே அவள் அரசனிடம் விரைந்து வந்து,
மாற்கு 6 : 25 (RCTA)
"ஸ்நாபக அருளப்பரின் தலையை இப்போதே ஒரு தட்டில் எனக்குக் கொடுக்கவேண்டும்" என்று கேட்டாள்.
மாற்கு 6 : 26 (RCTA)
அரசன் மிக வருத்தமுற்றான். ஆனால், தன் ஆணையின் பொருட்டும் விருந்தினர் பொருட்டும் அவளுக்கு மறுத்துச் சொல்ல விரும்பவில்லை.
மாற்கு 6 : 27 (RCTA)
உடனே அரசன் ஒரு கொலைஞனை அனுப்பி அவருடைய தலையை ஒரு தட்டில் கொண்டுவரக் கட்டளையிட்டான்.
மாற்கு 6 : 28 (RCTA)
அவன் போய்ச் சிறையில் அவருடைய தலையை வெட்டினான். அதைத் தட்டில் கொண்டுவந்து சிறுமியிடம் கொடுக்க, அவளும் தன் தாயிடம் கொடுத்தாள்.
மாற்கு 6 : 29 (RCTA)
இதைக் கேள்விப்பட்டு அவருடைய சீடர்கள் வந்து அவருடலை எடுத்துச் சென்று கல்லறையில் வைத்தனர்.
மாற்கு 6 : 30 (RCTA)
அப்போஸ்தலர் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தது போதித்ததெல்லாம் அவருக்குத் தெரிவித்தனர்.
மாற்கு 6 : 31 (RCTA)
அவர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் தனிமையான இடத்துக்கு ஒதுக்கமாக வந்து சற்றே இளைப்பாறுங்கள்" என்றார். ஏனெனில், பலர் வருவதும் போவதுமாயிருந்தனர். உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
மாற்கு 6 : 32 (RCTA)
அவர்கள் படகேறி, தனிமையான இடத்துக்கு ஒதுக்கமாகச் சென்றனர்.
மாற்கு 6 : 33 (RCTA)
அவர்கள் போவதை மக்கள் கண்டார்கள். இதைப் பலர் தெரிந்து கொண்டு எல்லா ஊர்களிலிருந்தும் கால்நடையாகக் கூட்டமாய் ஓடி அவர்களுக்குமுன் அங்குவந்து சேர்ந்தார்கள்.
மாற்கு 6 : 34 (RCTA)
இயேசு கரையில் இறங்கியபோது பெருங்கூட்டத்தைக் கண்டார். ஆயனில்லா ஆடுகள்போல் இருந்ததால் அவர்கள்மீது மனமிரங்கி நெடுநேரம் போதிக்கலானார்.
மாற்கு 6 : 35 (RCTA)
இதற்குள் நேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, "பாழ்வெளியாயிற்றே, ஏற்கனவே நேரமுமாகிவிட்டது.
மாற்கு 6 : 36 (RCTA)
சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது வாங்கிக் கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடும்" என்றனர்.
மாற்கு 6 : 37 (RCTA)
அதற்கு அவர், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என, "அவர்களுக்கு உணவு கொடுக்க, நாங்கள் இருநூறு வெள்ளிக் காசுக்கு அப்பம் வாங்கிவர வேண்டுமா?' என்றனர்.
மாற்கு 6 : 38 (RCTA)
அவர் அவர்களை நோக்கி, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்" என்று கூறினார். அவர்களும் பார்த்துவந்து, "ஐந்து அப்பங்கள் இருக்கின்றன. இரண்டு மீனும் உண்டு" என்றனர்.
மாற்கு 6 : 39 (RCTA)
எல்லாரையும் பசும்புல் தரையில் பந்திபந்தியாக அமர்த்தும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
மாற்கு 6 : 40 (RCTA)
மக்கள் நூறு நூறாகவும், ஐம்பது ஐம்பதாகவும் கும்பல் கும்பலாய் அமர்ந்தனர்.
மாற்கு 6 : 41 (RCTA)
ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைபுகழ் கூறி, அப்பங்களைப் பிட்டு, சீடருக்கு அளித்துப் பரிமாறச் சொன்னார். இரண்டு மீனையும் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்.
மாற்கு 6 : 42 (RCTA)
அனைவரும் வயிறார உண்டனர்.
மாற்கு 6 : 43 (RCTA)
அப்பத்துண்டுகளையும் மீன்களில் மீதியானதையும் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
மாற்கு 6 : 44 (RCTA)
அப்பம் உண்டவர்கள் ஐயாயிரம் ஆண்கள்.
மாற்கு 6 : 45 (RCTA)
தாம் மக்களை அனுப்பிக்கொண்டிருக்கையில், சீடர்கள் உடனே படகேறிக் கடலைக் கடந்து முன்னதாகப் பெத்சாயிதாவை நோக்கிப் போகும்படி இயேசு வற்புறுத்தினார்.
மாற்கு 6 : 46 (RCTA)
மக்களை அனுப்பிவிட்டு மலைக்குச் செபிக்கச் சென்றார்.
மாற்கு 6 : 47 (RCTA)
இரவாயிற்று, படகு நடுக்கடலில் இருந்தது. அவர் தனியே தரையில் இருந்தார்.
மாற்கு 6 : 48 (RCTA)
எதிர்காற்று அடித்தால் அவர்கள் தண்டுவலிக்க வருந்துவதைக் கண்டு, ஏறக்குறைய நான்காம் சாமத்தில் அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்துவந்து அவர்களைக் கடந்து செல்ல இருந்தார்.
மாற்கு 6 : 49 (RCTA)
அவர்களோ அவர் கடல் மீது நடப்பதைக் கண்டு பூதமென்று எண்ணி அலறினர்.
மாற்கு 6 : 50 (RCTA)
அனைவரும் அவரைக் கண்டு கலங்கினர். உடனே அவர் அவர்களிடம் பேசி, "தைரியமாயிருங்கள், நான் தான், அஞ்சாதீர்கள்" என்று சொன்னார்.
மாற்கு 6 : 51 (RCTA)
அவர்களை அணுகிப் படகில் ஏறினார். காற்று ஓய்ந்தது. அவர்கள் தங்களுக்குள் மிகமிகத் திகைத்துப்போயினர்.
மாற்கு 6 : 52 (RCTA)
ஏனெனில், அப்பங்களின் புதுமையைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது.
மாற்கு 6 : 53 (RCTA)
அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்துக்கு வந்து கரைசேர்ந்தனர்.
மாற்கு 6 : 54 (RCTA)
அவர்கள் படகை விட்டு இறங்கியதும், மக்கள் அவரைத் தெரிந்துகொண்டு,
மாற்கு 6 : 55 (RCTA)
அந்நாடெங்கும் விரைந்துபோய், அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நேயாளிகளைப் படுக்கைகளில் கொண்டுவரத் தொடங்கினர்.
மாற்கு 6 : 56 (RCTA)
அவர் ஊரோ நகரோ பட்டியோ, எங்குச் சென்றாலும், பொதுவிடங்களில் நோயாளிகளைக் கிடத்தி அவருடைய போர்வையின் விளிம்பையாகிலும் தொடவிடும்படி அவரை வேண்டுவர். அவரைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர்.
❮
❯