மாற்கு 5 : 1 (RCTA)
அவர்கள் அக்கரை சேர்ந்து கெரசேனர் நாட்டை அடைந்தனர்.
மாற்கு 5 : 2 (RCTA)
அவர் படகை விட்டு இறங்கியதும் அசுத்த ஆவியேறிய ஒருவன் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தான்.
மாற்கு 5 : 3 (RCTA)
கல்லறைகளே அவன் தங்குமிடம் அவனை யாரும் சங்கிலியால் கூடக் கட்ட முடியவில்லை.
மாற்கு 5 : 4 (RCTA)
ஏனெனில், பலமுறை அவனுக்கு விலங்கும் சங்கிலியும் மாட்டியிருந்தும், சங்கிலிகளை முறித்து விலங்குகளைத் தகர்த்தெறிவான். யாரும் அவனை அடக்க முடியவில்லை.
மாற்கு 5 : 5 (RCTA)
அவன் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிடுவான். கற்களிலும் தன்னைக் கீறிக்கொள்வான்.
மாற்கு 5 : 6 (RCTA)
அவன் தொலைவிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடி வந்து அவர்முன் பணிந்து,
மாற்கு 5 : 7 (RCTA)
"இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, என் காரியத்தில் உன்னத கடவுளின் மகனே, என் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்? கடவுள் பெயரால் உம்மைக் கேட்கிறேன், என்னை வதைக்க வேண்டாம்" என்று உரக்கக் கத்தினான்.
மாற்கு 5 : 8 (RCTA)
ஏனெனில் அவர், "அசுத்த அவியே, இவனை விட்டுப் போ" என்று சொல்லியிருந்தார்.
மாற்கு 5 : 9 (RCTA)
"உன் பெயர் என்ன?" என்று இயேசு அவனைக் கேட்டார். "என்பெயர் 'படை', ஏனெனில், நாங்கள் பலர்" என்றான்.
மாற்கு 5 : 10 (RCTA)
அவற்றை அந்நாட்டை விட்டு விரட்டாதபடி அவன் அவரை வருந்தி வேண்டினான்.
மாற்கு 5 : 11 (RCTA)
அங்கே மலைச்சாரலில் பன்றிகன் பெருங்கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
மாற்கு 5 : 12 (RCTA)
"நாங்கள் பன்றிகளுக்குள் போகும்படி எங்களை அனுப்பும்" என்று ஆவிகள் அவரை வேண்டவே,
மாற்கு 5 : 13 (RCTA)
அவற்றிற்கு அவர் விடை கொடுத்தார். அசுத்த ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து மூழ்கலாயிற்று.
மாற்கு 5 : 14 (RCTA)
அவை ஏறக்குறைய இரண்டாயிரம் இருக்கும். அவற்றை மேய்த்தவர்களோ ஓடிப் போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தனர். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர்.
மாற்கு 5 : 15 (RCTA)
அவர்கள் இயேசுவிடம் வந்து, பேய்பிடித்திருந்தவன் -- முழுப் பேய்ப்படையே பிடித்திருந்த அவன் -- ஆடையணிந்து, தன்னுணர்வுடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அஞ்சினர்.
மாற்கு 5 : 16 (RCTA)
பார்த்தவர்கள் பேய்பிடித்திருந்தவனுக்கு நேர்ந்ததையும் பன்றிகளைப்பற்றிய செய்தியையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
மாற்கு 5 : 17 (RCTA)
அப்பொழுது அவர்கள், தம் நாட்டை விட்டுச் செல்லுமாறு அவரை வேண்டத் தொடங்கினர்.
மாற்கு 5 : 18 (RCTA)
அவர் படகேறும்பொழுது, பேய்பிடித்திருந்தவன் தானும் அவருடன் இருக்கவேண்டும் என அவரை வேண்டலானான்.
மாற்கு 5 : 19 (RCTA)
ஆனால் அவர் அதற்கு இசையாமல் அவனைப் பார்த்து, "உன் வீட்டிற்கு உன் உற்றாரிடம் போ. ஆண்டவர் உன்மீது இரங்கி உனக்குச் செய்ததெல்லாம் அவர்களுக்குத் தெரிவி" என்றார்.
மாற்கு 5 : 20 (RCTA)
அவன் சென்று இயேசு தனக்குச் செய்ததெல்லாம் தெக்கப்போலி நாட்டில் அறிவிக்கத் தொடங்கினான். கேட்டவரெல்லாம் வியப்புற்றனர்.
மாற்கு 5 : 21 (RCTA)
இயேசு படகேறி, மீண்டும் கடலைக் கடந்து, இக்கரையை அடைந்ததும் பெருங்கூட்டமாக மக்கள் அவரிடம் வந்தனர். அவர் கடலோரத்தில் இருந்தார்.
மாற்கு 5 : 22 (RCTA)
செபக்கூடத் தலைவர்களுள் ஒருவனான யாயீர் என்பவன் வந்து, அவரைக் கண்டு, காலில் விழுந்து,
மாற்கு 5 : 23 (RCTA)
"என் மகள் சாகக்கிடக்கிறாள். நீர் வந்து அவள் மீது உம் கைகளை வையும், அவள் குணமாகிப் பிழைத்துக்கொள்வாள்" என்று அவரை வருந்தி வேண்டினான்.
மாற்கு 5 : 24 (RCTA)
அவர் அவனுடன் சென்றார். பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்து நெருக்கியது.
மாற்கு 5 : 25 (RCTA)
பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி அக்கூட்டத்தில் இருந்தாள்.
மாற்கு 5 : 26 (RCTA)
அவள் மருத்துவர் பலரிடம் மிகத் துன்பப்பட்டும், உடைமையெல்லாம் செலவிட்டும் ஒரு பயனும் அடையவில்லை. மாறாக, அவள் நிலைமை இன்னும் மோசமாயிற்று.
மாற்கு 5 : 27 (RCTA)
அவள் இயேசுவைப்பற்றிய செய்தி கேள்வியுற்றுக் கூட்டத்தில் அவருக்குப் பின்னே வந்து அவருடைய போர்வையைத் தொட்டாள்.
மாற்கு 5 : 28 (RCTA)
ஏனெனில், அவள், "நான் அவருடைய ஆடையையாகிலும் தொட்டால் குணம் பெறுவேன்" என்று சொல்லிக்கொண்டாள்.
மாற்கு 5 : 29 (RCTA)
உடனே அவளுடைய உதிரப்பெருக்கு வற்றிப் போயிற்று. அவள் நோயினின்று குணம் பெற்றதைத் தன் உடலில் உணர்ந்தாள்.
மாற்கு 5 : 30 (RCTA)
உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்து, கூட்டத்திடையே திரும்பி, "என் ஆடையைத் தொட்டது யார்?" என்று கேட்டார்.
மாற்கு 5 : 31 (RCTA)
அவருடைய சீடர் அவரை நோக்கி, "கூட்டம் உம்மை நெருக்குவதைக் கண்டும், ' என்னைத் தொட்டது யார்?' என்கிறீரே" என்றனர்.
மாற்கு 5 : 32 (RCTA)
அவரோ, இதைச் செய்தவளைக் காணுமாறு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தார்.
மாற்கு 5 : 33 (RCTA)
அப்போது அந்தப் பெண் தனக்கு நேர்ந்ததை அறிந்தவளாய், அஞ்சி நடுங்கிக்கொண்டு வந்து, அவர் காலில் விழுந்து உண்மையெல்லாம் உரைத்தாள்.
மாற்கு 5 : 34 (RCTA)
அவரோ அவளை நோக்கி, "மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று, சமாதானமாய்ப் போ. நோய் நீங்கி நலமாயிரு" என்றார்.
மாற்கு 5 : 35 (RCTA)
அவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே செபக்கூடத் தலைவனது வீட்டிலிருந்து ஆட்கள் வந்து, "உம் மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரை செய்கிறீர்?" என்றனர்.
மாற்கு 5 : 36 (RCTA)
அவர்கள் சொன்னது காதில் விழவே, இயேசு செபக்கூடத் தலைவனிடம், "அஞ்சாதே விசுவாசத்தோடு மட்டும் இரு" எனக் கூறினார்.
மாற்கு 5 : 37 (RCTA)
இராயப்பர், யாகப்பர், யாகப்பரின் சகோதரர் அருளப்பர் இவர்களைத் தவிர வேறெவரையும் தம்முடன் வரவிட வில்லை.
மாற்கு 5 : 38 (RCTA)
அவர்கள் செபக்கூடத் தலைவனின் வீட்டுக்கு வந்தபோது, அவர் சந்தடியையும், ஓலமிட்டு அழுது புலம்புவோரையும் கண்டார்.
மாற்கு 5 : 39 (RCTA)
உள்ளே போய், "ஏன் இந்தச் சந்தடி? ஏன் இந்த அழுகை ? சிறுமி சாகவில்லை, தூங்குகிறாள்" என்றார்.
மாற்கு 5 : 40 (RCTA)
அவர்களோ அவரை ஏளனம் செய்தனர். ஆனால், அவர் அனைவரையும் வெளியே அனுப்பிச் சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் வந்தவரையும் அழைத்துக்கொண்டு, சிறுமி இருந்த இடத்திற்கு வந்தார்.
மாற்கு 5 : 41 (RCTA)
சிறுமியின் கையைப் பிடித்து, "தலித்தாகூம்" -- அதாவது, "சிறுமியே, உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்திரு" என்றார்.
மாற்கு 5 : 42 (RCTA)
என்றதும், சிறுமி எழுந்து நடக்கலானாள். அவளுக்கு வயது பன்னிரண்டு. மக்கள் பெரிதும் திகைத்துப் போயினர்.
மாற்கு 5 : 43 (RCTA)
இது யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். அவளுக்கு உணவுகொடுக்கச் சொன்னார்.
❮
❯