மாற்கு 16 : 1 (RCTA)
ஓய்வுநாள் கழிந்ததும் மதலேன்மரியாளும் யாகப்பரின் தாய் மரியாளும் சலோமேயும் இயேசுவின் உடலில் பூசுவதற்காகப் பரிமளப் பொருட்கள் வாங்கினர்.
மாற்கு 16 : 2 (RCTA)
வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் கதிரவன் எழுந்தபின் கல்லறைக்கு வந்தனர்.
மாற்கு 16 : 3 (RCTA)
"கல்லறை வாயிலிலிருந்து, யார் நமக்குக் கல்லைப் புரட்டிவிடுவார்?" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
மாற்கு 16 : 4 (RCTA)
நிமிர்ந்து பார்க்கும்பொழுது கல் புரண்டிருப்பதைக் கண்டனர். அதுவோ மிகப் பெரிய கல்.
மாற்கு 16 : 5 (RCTA)
அவர்கள் கல்லறைக்குள் நுழைந்தபொழுது, வெண்ணாடை அணிந்து வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த ஓர் இளைஞனைக் கண்டு திகிலுற்றனர். அவன் அவர்களை நோக்கி, "திகிலுறவேண்டாம்.
மாற்கு 16 : 6 (RCTA)
சிலுவையிலறையுண்ட நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிர்த்துவிட்டார். இங்கே இல்லை. இதோ! அவரை வைத்த இடம்.
மாற்கு 16 : 7 (RCTA)
நீங்கள் போய் அவருடைய சீடர்களிடமும் இராயப்பரிடமும், "உங்களுக்குமுன் அவர் கலிலேயாவிற்குப் போகிறார். அவர் உங்களுக்குக் கூறியவாறு நீங்கள் அவரை அங்கே காண்பீர்கள்' என்று சொல்லுங்கள்" என்றான்.
மாற்கு 16 : 8 (RCTA)
அவர்கள் வெளியே வந்து கல்லறையை விட்டு ஓடினார்கள். ஏனெனில், திகைப்பும் நடுக்கமும் அவர்களை ஆட்கொணடது. அச்சம் மேலிட அவர்கள் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லவில்லை.
மாற்கு 16 : 9 (RCTA)
வாரத்தின் முதல்நாள் காலையில், அவர் உயிர்த்தெழுந்து முதலில் மதலேன்மரியாளுக்குத் தேன்றினார். இவளிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களைத் துரத்தியிருந்தார்.
மாற்கு 16 : 10 (RCTA)
முன்பு இயேசுவோடு இருந்தவர்களிடம் அவள் போய் இதை அறிவித்தாள். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தனர்.
மாற்கு 16 : 11 (RCTA)
இயேசு உயிருடனிருக்கிறார், அவள் அவரைக் கண்டாள் என்பதை அவர்கள் கேட்டபோது நம்பவில்லை.
மாற்கு 16 : 12 (RCTA)
அதன்பின் அவர்களுள் இருவர் நாட்டுப்புறத்திற்கு நடந்துபோகையில், அவர்களுக்கு வேற்றுருவில் தோன்றினார்.
மாற்கு 16 : 13 (RCTA)
அவர்களும் வந்து மற்றவர்களுக்கு அறிவித்தார்கள். அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.
மாற்கு 16 : 14 (RCTA)
இறுதியாக, பதினொருவரும் உண்ணும்பொழுது அவர் தோன்றி, உயிர்த்தெழுந்த தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாத அவர்களுடைய விசுவாசமின்மையும் பிடிவாதத்தையும் கடிந்துகொண்டார்.
மாற்கு 16 : 15 (RCTA)
மேலும் அவர்களை நோக்கி, "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.
மாற்கு 16 : 16 (RCTA)
விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான், விசுவசியாதவனுக்குத் தண்டனை கிடைக்கும்.
மாற்கு 16 : 17 (RCTA)
விசுவசிப்பவர்களிடம் இவ்வருங்குறிகள் காணப்படும்; என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர்,
மாற்கு 16 : 18 (RCTA)
பாம்புகளைக் கையால் பிடிப்பர். 'கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது. பிணியாளிகள் மேல் கைகளை வைப்பர், அவர்களும் நலமடைவர்" என்றுரைத்தார்.
மாற்கு 16 : 19 (RCTA)
இவ்வாறு அவர்களோடு பேசி முடித்தபின், ஆண்டவர் இயேசு விண்ணேற்படைந்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்தார்.
மாற்கு 16 : 20 (RCTA)
அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் தூதுரைத்தனர். ஆண்டவரும் அவர்களோடு செயல்புரிந்து, உடனிகழ்ந்த அருங்குறிகளால் தேவ வார்த்தையை உறுதிப்படுத்தினார்.
❮
❯