மாற்கு 15 : 1 (RCTA)
காலையானதும் மூப்பர், மறைநூல் அறிஞர், மற்றத் தலைமைச் சங்கத்தார் இவர்களோடு தலைமைக்குருக்கள் கூடி ஆலோசனைசெய்து இயேசுவைக் கட்டி நடத்திச் சென்று பிலாத்திடம் கையளித்தனர்.
மாற்கு 15 : 2 (RCTA)
பிலாத்து, "நீ யூதரின் அரசனோ?" என்று அவரை வினவ, அவர் மறுமொழியாக, "நீர்தாம் சொல்லுகிறீர்" என்றார்.
மாற்கு 15 : 3 (RCTA)
தலைமைக்குருக்கள் பலவற்றைக் குறித்து, அவர்மீது குற்றம் சாட்டினார்கள்.
மாற்கு 15 : 4 (RCTA)
பிலாத்து மீண்டும் அவரிடம், "நீ மறுமொழி ஒன்றும் சொல்வதற்கில்லையா?" என்று கேட்டு, "இதோ! உன்மேல் இத்தனை குற்றம் சாட்டுகிறார்களே" என்றார்.
மாற்கு 15 : 5 (RCTA)
இயேசுவோ அதன்பின் மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. பிலாத்து அதைக் கண்டு வியப்புற்றார்.
மாற்கு 15 : 6 (RCTA)
திருவிழாதோறும் அவர்கள் கோரும் ஒரு கைதியை விடுதலைசெய்வதுண்டு.
மாற்கு 15 : 7 (RCTA)
அப்போது பரபாஸ் என்று கைதி ஒருவன் இருந்தான். ஒரு குழப்பத்தில் கொலை செய்த கலகக்காரருடன் பிடிபட்டவன் அவன்.
மாற்கு 15 : 8 (RCTA)
கூட்டம் வந்து, வழக்கம்போலத் தாங்கள் கோருவதைச் செய்யும்படி பிலாத்தைக் கேட்கத்தொடங்கியது.
மாற்கு 15 : 9 (RCTA)
அதற்கு அவர், "யூதர்களின் அரசனை நான் விடுதலைசெய்வது உங்களுக்கு விருப்பமா?" என்று கேட்டார்.
மாற்கு 15 : 10 (RCTA)
ஏனெனில், தலைமைக்குருக்கள் அவரைக் கையளித்தது பொறாமையால்தான் என்பது அவருக்குத் தெரியும்.
மாற்கு 15 : 11 (RCTA)
பரபாசையே விடுதலைசெய்ய வேண்டும் என்று சொல்லும்படி தலைமைக்குருக்கள் கூட்டத்தைத் தூண்டிவிட்டனர்.
மாற்கு 15 : 12 (RCTA)
பிலாத்து மீண்டும் அவர்களிடம், "அப்படியானால் நீங்கள் யூதர்களின் அரசன் என்று சொல்லுகிறவனை நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்டார்.
மாற்கு 15 : 13 (RCTA)
அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும்" என்று மீண்டும் கூச்சலிட்டார்கள்.
மாற்கு 15 : 14 (RCTA)
அதற்குப் பிலாத்து, "இவன் செய்த தீங்கு என்ன?" என்று கேட்டார். அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும்" என்று இன்னும் உரக்கக் கூச்சலிட்டார்கள்.
மாற்கு 15 : 15 (RCTA)
பிலாத்து அவர்களைத் திருப்திசெய்ய விரும்பிப் பரபாசை விடுதலைசெய்து, இயேசுவைச் சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி கையளித்தார்.
மாற்கு 15 : 16 (RCTA)
படைவீரர் அவரை அரண்மனைக்குள், அதாவது ஆளுநரின் மனைக்குள் நடத்திச் சென்று, அங்கேயிருந்த பட்டாளத்தினரை எல்லாம் கூட்டினர்.
மாற்கு 15 : 17 (RCTA)
பின்பு அவருக்குச் சிவப்பு ஆடை உடுத்தி முள்முடி ஒன்றைப் பின்னித் தலையில் சூட்டி,
மாற்கு 15 : 18 (RCTA)
"யூதரின் அரசே வாழி" என்று வணக்கம் செலுத்தத் தொடங்கினர்.
மாற்கு 15 : 19 (RCTA)
மேலும், அவரைத் தலையில் பிரம்பால் அடித்து, அவர்மேல் துப்பி, முழந்தாளிட்டு வணங்கினர்.
மாற்கு 15 : 20 (RCTA)
இப்படி அவரை எள்ளி நகையாடியபின். சிவப்பு ஆடையைக் கழற்றிவிட்டு, அவருடைய ஆடைகளை உடுத்தி அவரைச் சிலுவையில் அறைய வெளியே கூட்டிச் சென்றார்கள்.
மாற்கு 15 : 21 (RCTA)
சீரேனே ஊரானாகிய சீமோன் என்னும் ஒருவன் நாட்டுப்புறத்திலிருந்து அவ்வழியே வந்துகொண்டிருந்தான். அவன், அலெக்சாந்தர், ரூப்பு என்பவர்களுக்குத் தந்தை. அவனை அவருடைய சிலுவையைச் சுமக்கும் படி கட்டாயப்படுத்தினர்.
மாற்கு 15 : 22 (RCTA)
' மண்டை ஓடு' எனப் பொருள்படும் கொல்கொத்தா என்னும் இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.
மாற்கு 15 : 23 (RCTA)
அங்கே அவர்கள் அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த இரசத்தைக் கொடுத்தனர். அவர் அதை ஏற்கவில்லை.
மாற்கு 15 : 24 (RCTA)
அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். 'பின்னர், அவர் ஆடைகளில் எதெது யார் யாருக்கு என்று பார்க்கச் சீட்டுப் போட்டுப் பகிர்ந்துகொண்டார்கள்.
மாற்கு 15 : 25 (RCTA)
அவரைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி.
மாற்கு 15 : 26 (RCTA)
அவர்மேல் சாட்டிய குற்றத்தைக் குறிக்கும் பலகையில், 'யூதரின் அரசன்' என்று எழுதியிருந்தது.
மாற்கு 15 : 27 (RCTA)
அவருக்கு வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் ஒருவனுமாகக் கள்வர் இருவரை அவருடன் சிலுவையில் அறைந்தனர்.
மாற்கு 15 : 29 (RCTA)
(28) அவ்வழியே சென்றவர்கள் தலையை ஆட்டி, "ஆலயத்தை இடித்து மூன்று நாளில் கட்டுபவனே,
மாற்கு 15 : 30 (RCTA)
(29) சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே காப்பாற்றிக்கொள்" என்று சொல்லி அவரைப் பழித்தனர்.
மாற்கு 15 : 31 (RCTA)
(30) அவ்வாறே தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞருடன் சேர்ந்து அவரை எள்ளி நகையாடி, "பிறரைக் காப்பாற்றிய இவன் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
மாற்கு 15 : 32 (RCTA)
(31) இஸ்ராயேலின் அரசனாகிய மெசியா இப்பொழுது சிலுவையினின்று இறங்கட்டும்; கண்டு நம்புவோம்" என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர். அவருடன் அறையுண்டவர்களும் அவர்மேல் வசைகூறினர்.
மாற்கு 15 : 33 (RCTA)
(32) நண்பகல் தொடங்கி, மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
மாற்கு 15 : 34 (RCTA)
(33) மூன்று மணிக்கு இயேசு, "எலோயி, எலோயி, லாமாசபக்தானி" என்று உரக்கக் கூவினார். இதற்கு, "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பது பொருள்.
மாற்கு 15 : 35 (RCTA)
(34) அருகிலிருந்தவர்களுள் சிலர் இதைக் கேட்டு, "இதோ! இவன் எலியாசைக் கூப்பிடுகிறான்" என்றனர்.
மாற்கு 15 : 36 (RCTA)
(35) ஒருவன் ஓடிப்போய்க் கடற்காளானைக் காடியில் தேய்த்து, ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்து, "பொறுங்கள், எலியாஸ் இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்" என்றான்.
மாற்கு 15 : 37 (RCTA)
(36) இயேசு உரக்கக்கூவி உயிர் நீத்தார்.
மாற்கு 15 : 38 (RCTA)
(37) அப்போது ஆலயத்தின் திரை, மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.
மாற்கு 15 : 39 (RCTA)
(38) எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர்தலைவன் இவ்வாறு இவர் உயிர்நீத்ததைக் கண்டு, "உண்மையில் இம்மனிதன் கடவுளின் மகனாக இருந்தார்" என்றான்.
மாற்கு 15 : 40 (RCTA)
(39) பெண்கள் சிலரும் அங்கு இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களுள் மதலேன் மரியாளும், சின்ன யாகப்பருக்கும் யோசெத்துக்கும் தாயான மரியாளும், சலோமேயும் இருந்தனர்.
மாற்கு 15 : 41 (RCTA)
(40) இயேசு கலிலேயாவிலிருந்தபொழுது இவர்கள் அவரைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்தவர்கள். அவருடன் யெருசலேமுக்கு வந்திருந்த பெண்கள் வேறு பலரும் இருந்தனர்.
மாற்கு 15 : 42 (RCTA)
(41) இதற்குள் மாலைநேரம் ஆகிவிடவே, ஓய்வுநாளுக்கு முந்தின அந்நாள் ஆயத்தநாள்.
மாற்கு 15 : 43 (RCTA)
(42) ஆதலால், அரிமத்தியாவூர் சூசை துணிவுடன் பிலாத்திடம் சென்று, இயேசுவின் உடலைக் கேட்டார். இவர் தலைமைச்சங்கத்தின் செல்வாக்குடைய ஓர் உறுப்பினர். இருவரும் கடவுளின் அரசை எதிர்ப்பார்த்திருந்தவர்.
மாற்கு 15 : 44 (RCTA)
(43) இயேசு அதற்குள் இறந்துவிட்டதைப்பற்றிப் பிலாத்து வியப்புற்றார். நூற்றுவர்தலைவனை அழைத்து, "அவன் இதற்குள் இறந்துவிட்டானா?" என்று கேட்டார்.
மாற்கு 15 : 45 (RCTA)
(44) நூற்றுவர் தலைவனிடமிருந்து செய்தியை அறிந்ததும், சடலத்தைச் சூசையிடம் அளித்தார்.
மாற்கு 15 : 46 (RCTA)
(45) சூசை கோடித்துணி வாங்கிவந்து, இயேசுவை இறக்கி, துணியில் சுற்றி, பாறையில் குடைந்த கல்லறையில் வைத்து, அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.
மாற்கு 15 : 47 (RCTA)
(46) மதலேன்மரியாளும் யோசெத்தின் தாயாகிய மரியாளும் அவரை வைத்த இடத்தை பார்த்துக்கொண்டனர்.
❮
❯