மாற்கு 14 : 1 (RCTA)
பாஸ்காவும், புளியாத அப்பத் திருவிழாவும் வர இரண்டு நாள் இருந்தது. தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் சூழ்ச்சியாய் அவரைப் பிடித்துக் கொலைசெய்ய வகைதேடிக் கொண்டிருந்தார்கள்.
மாற்கு 14 : 2 (RCTA)
"திருவிழாவிலே வேண்டாம், ஒருவேளை மக்களிடையே கலகம் உண்டாகலாம்" என்றார்கள்.
மாற்கு 14 : 3 (RCTA)
பெத்தானியாவில் தொழுநோய்ச் சீமோன் வீட்டில் அவர் இருந்தார். அங்கே பந்தி அமர்ந்திருக்கும்போது, பெண் ஒருத்தி நரந்தம் என்னும் விலையுயர்ந்த நல்ல பரிமளத்தைலம் உள்ள படிகச் சிமிழைக் கொண்டுவந்து உடைத்து அவருடைய தலையில் ஊற்றினாள்.
மாற்கு 14 : 4 (RCTA)
அப்போது சிலர் சினந்து, "தைலத்தை இப்படி வீணாக்குவானேன்?
மாற்கு 14 : 5 (RCTA)
இத்தைலத்தை முந்நூறு வெள்ளிக்காசுக்கும் அதிகமாய் விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு, அவள்மேல் சீறி எழுந்தனர்.
மாற்கு 14 : 6 (RCTA)
இயேசுவோ, "இவளை விடுங்கள்; ஏன் தொந்தரைசெய்கிறீர்கள்? இவள் எனக்குச் செய்தது நேர்த்தியான செயல்தான்.
மாற்கு 14 : 7 (RCTA)
ஏனெனில், ஏழைகள் உங்களோடு எப்போதும் இருக்கிறார்கள். வேண்டும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மைசெய்ய முடியும். நானோ உங்களோடு எப்போதும் இருக்கப்போவதில்லை.
மாற்கு 14 : 8 (RCTA)
இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். என் அடக்கத்தைக்குறித்து முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசினாள்.
மாற்கு 14 : 9 (RCTA)
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உலக முழுவதும் எங்கெங்கு நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவள் செய்ததும் இவள் நினைவாகக் கூறப்படும்" என்றார்.
மாற்கு 14 : 10 (RCTA)
பன்னிருவருள் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து அவரைக் காட்டிக் கொடுக்கும்படி தலைமைக்குருக்களிடம் சென்றான்.
மாற்கு 14 : 11 (RCTA)
அவர்கள் அதைக்கேட்டு மகிழ்ந்து அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தார்கள். அவனும் அவரை எவ்வாறு காட்டிக் கொடுக்கலாம் என வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
மாற்கு 14 : 12 (RCTA)
புளியாத அப்பத் திருவிழாவின் முதல் நாளில் பாஸ்காச் செம்மறியைப் பலியிடுவார்கள். அன்று சீடர் அவரிடம், "நீர் பாஸ்காப் பலியுணவை உண்ண நாங்கள் எங்கே போய் ஏற்பாடு செய்யவேண்டும் என்கிறீர்?" என்று கேட்டனர்.
மாற்கு 14 : 13 (RCTA)
அவர் சீடர்களுள் இருவரிடம், "நகருக்குச் செல்லுங்கள். ஒருவன் தண்ணீர்க்குடம் சுமந்துகொண்டு உங்களுக்கு எதிரே வருவான். அவன்பின்னே செல்லுங்கள்.
மாற்கு 14 : 14 (RCTA)
அவன் எங்கே செல்லுகிறானோ அந்த வீட்டுத்தலைவனிடம், 'நான் என் சீடருடன் பாஸ்கா உணவை உண்பதற்கான அறை எங்கே?' என்று போதகர் கேட்கிறார் எனச் சொல்லுங்கள்.
மாற்கு 14 : 15 (RCTA)
இருக்கை முதலியன அமைந்து ஆயத்தமாயுள்ள ஒரு பெரிய மாடி அறையை அவன் உங்களுக்குக் காட்டுவான்.
மாற்கு 14 : 16 (RCTA)
அங்கே நமக்கு ஏற்பாடுசெய்யுங்கள்" என்று சொல்லியனுப்பினார். சீடர்களும் போய் நகரை அடைந்து தங்களுக்கு அவர் சொல்லியவாறே நிகழ்ந்ததைக் கண்டு பாஸ்கா உணவுக்கு ஏற்பாடுசெய்தார்கள்.
மாற்கு 14 : 17 (RCTA)
மாலையானதும் அவர் பன்னிருவருடன் வந்தார்.
மாற்கு 14 : 18 (RCTA)
அவர்கள் பந்தியமர்ந்து உண்ணும்பொழுது இயேசு, "என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
மாற்கு 14 : 19 (RCTA)
அவர்கள் வருத்தப்பட்டு ஒவ்வொருவராக, "நானோ, நானோ" என்று அவரைக் கேட்கத் தொடங்கினார்கள்.
மாற்கு 14 : 20 (RCTA)
அதற்கு அவர், "பன்னிருவருள் ஒருவனே; என்னோடு பாத்திரத்தில் கையிடுபவனே.
மாற்கு 14 : 21 (RCTA)
மனுமகன் தம்மைப்பற்றி எழுதியிருக்கிறபடியே போகிறார். மனுமகனைக் காட்டிக் கொடுக்கிறவனுக்கோ ஐயோ, கேடு! அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" என்றார்.
மாற்கு 14 : 22 (RCTA)
அவர்கள் உண்ணும்பொழுது, அவர் அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி, பிட்டு அவர்களுக்கு அளித்தது, "இதை வாங்கிக்கொள்ளுங்கள்.
மாற்கு 14 : 23 (RCTA)
இது என் உடல்" என்றார். பின்னர், கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி அவர்களுக்கு அளிக்க, அதில் அனைவரும் பருகினர்.
மாற்கு 14 : 24 (RCTA)
அப்போது அவர், "உடன்படிக்கைக்கெனப் பலருக்காகச் சிந்தப்படும் என் இரத்தம் இது.
மாற்கு 14 : 25 (RCTA)
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இனிமேல், கடவுளின் அரசில் புதிய இரசம் குடிக்கும் நாள்வரை திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன்" என்றார்.
மாற்கு 14 : 26 (RCTA)
புகழ்ப்பாடல் பாடிவிட்டு, ஒலிவ மலைக்குச் சென்றனர்.
மாற்கு 14 : 27 (RCTA)
இயேசு அவர்களை நோக்கி, "நீங்கள் அனைவரும் இடறல்படுவீர்கள். ஏனெனில், 'மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறிப்போம்' என எழுதியிருக்கிறது.
மாற்கு 14 : 28 (RCTA)
ஆனால், நான் உயிர்த்தபின் கலிலேயாவிற்கு உங்களுக்குமுன் போவேன்" என்றார்.
மாற்கு 14 : 29 (RCTA)
அதற்கு இராயப்பர், "எல்லாரும் இடறல்பட்டாலும் நான் இடறல்படேன்" என்றார்.
மாற்கு 14 : 30 (RCTA)
இயேசு அவரிடம் "உறுதியாக உனக்குச் சொல்லுகிறேன்: இன்றிரவே கோழி இரு முறை கூவுமுன், என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்றார்.
மாற்கு 14 : 31 (RCTA)
அவரோ, "உம்மோடு இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை மறுதலியேன்" என்று வற்புறுத்திச் சொன்னார். அப்படியே அனைவரும் சொன்னார்கள்.
மாற்கு 14 : 32 (RCTA)
பின்பு, கெத்சேமனி என்னும் தோட்டத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் சீடர்களிடம், "நான் செபிக்குமளவும் இங்கே இருங்கள்" என்று சொல்லி,
மாற்கு 14 : 33 (RCTA)
இராயப்பரையும் யாகப்பரையும் அருளப்பரையும் தம்மோடு அழைத்துச்சென்றார். அப்போது திகிலும் மனக்கலக்கமும் அவரை ஆட்கொள்ளவே,
மாற்கு 14 : 34 (RCTA)
அவர் அவர்களை நோக்கி, "என் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கிறது; இங்கே தங்கி விழித்திருங்கள்" என்றார்.
மாற்கு 14 : 35 (RCTA)
சற்று அப்பால் போய்த் தரையில் குப்புற விழுந்து, கூடுமானால் அந்நேரம் தம்மைவிட்டு நீங்கும்படி செபித்தார்.
மாற்கு 14 : 36 (RCTA)
மேலும், "அப்பா, தந்தையே, அனைத்தும் உம்மால் கூடும். இத்துன்பக் கலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆகிலும் நான் விரும்பவுது அன்று, நீர் விரும்புவதே ஆகட்டும்" என்றார்.
மாற்கு 14 : 37 (RCTA)
பின்பு வந்து, அவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, இராயப்பரை நோக்கி, "சீமோனே, தூங்குகிறாயா? ஒரு மணி நேரம் விழித்திருக்க உன்னால் முடியவில்லையா?
மாற்கு 14 : 38 (RCTA)
சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள். ஆவி ஊக்கமுள்ளதுதான்; ஊன் உடலோ வலுவற்றது" என்றார்.
மாற்கு 14 : 39 (RCTA)
மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி, செபித்தார்.
மாற்கு 14 : 40 (RCTA)
திரும்பவும் வந்து, அவர்கள் தூங்கிக்கொண்டிருக்க கண்டார். ஏனெனில், அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கமுற்றிருந்தன. என்ன மறுமொழி சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை.
மாற்கு 14 : 41 (RCTA)
மூன்றாம் முறையாக அவர்களிடம் வந்து, "இன்னும் தூங்கி இளைப்பாறுகிறீர்களா! போதும், நேரம் வந்துவிட்டது. இதோ, மனுமகன் பாவிகளிடம் கையளிக்கப்படப் போகிறார்.
மாற்கு 14 : 42 (RCTA)
எழுந்திருங்கள், போவோம், இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கிவிட்டான்" என்றார்.
மாற்கு 14 : 43 (RCTA)
அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே, பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ் வந்தான். அவனோடு தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் மூப்பரும் அனுப்பிய கூட்டமொன்று வாள்களோடும் தடிகளோடும் வந்தது.
மாற்கு 14 : 44 (RCTA)
அவரைக் காட்டிக்கொடுக்கிறவன், "எவரை நான் முத்தமிடுவேனோ அவர்தாம்; அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள்" என்று கூறி அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
மாற்கு 14 : 45 (RCTA)
அவன் வந்தவுடனே, அவரை அணுகி, "ராபி" என்று சொல்லி முத்தமிட்டான்.
மாற்கு 14 : 46 (RCTA)
அவர்களோ அவர்மேல் கைபோட்டுப் பிடித்தார்கள்.
மாற்கு 14 : 47 (RCTA)
அருகில் நின்றவர்களுள் ஒருவன் வாளை உருவித் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி, அவனுடைய காதைத் துண்டித்தான்.
மாற்கு 14 : 48 (RCTA)
இயேசு அவர்களிடம், "கள்வனைப் பிடிக்க வருவதுபோல வாளோடும் தடியோடும் என்னைப் பிடிக்க வந்தீர்களோ?
மாற்கு 14 : 49 (RCTA)
நாள்தோறும் கோயிலில் போதித்துக்கொண்டு உங்களிடையே இருந்தும், நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை. ஆனால் மறைநூல் கூறுவது இவ்வாறு நிறைவேற வேண்டும்" என்றார்.
மாற்கு 14 : 50 (RCTA)
அப்பொழுது அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.
மாற்கு 14 : 51 (RCTA)
இளைஞன் ஒருவன் வெறும் உடம்பின்மேல் துப்பட்டியைப் போர்த்திக்கொண்டு அவர் பின்னே சென்றான்.
மாற்கு 14 : 52 (RCTA)
அவனைப் பிடித்தார்கள். அவனோ துப்பட்டியை விட்டுவிட்டு ஆடையின்றி ஓடிப்போனான்.
மாற்கு 14 : 53 (RCTA)
இயேசுவைத் தலைமைக்குருவிடம் கூட்டிச் சென்றனர். தலைமைக்குருக்கள், மூப்பர், மறைநூல் அறிஞர் எல்லாரும் வந்து கூடினர்.
மாற்கு 14 : 54 (RCTA)
இராயப்பரோ தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக்குருவின் வீட்டு உள்முற்றம்வரை வந்து, காவலருடன் உட்கார்ந்து அனலில் குளிர்காய்ந்துகொண்டிருந்தார்.
மாற்கு 14 : 55 (RCTA)
தலைமைக்குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவைச் சாவுக்குக் கையளிக்கும்படி அவருக்கு எதிராகச் சான்று தேடியும், ஒன்றுமே கிடைக்கவில்லை.
மாற்கு 14 : 56 (RCTA)
ஏனெனில், பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சாட்சி கூறியும், அச்சாட்சிகள் ஒன்றுக்கொன்று ஒவ்வாதிருந்தன.
மாற்கு 14 : 57 (RCTA)
சிலர் எழுந்து,
மாற்கு 14 : 58 (RCTA)
"கையால் கட்டிய இவ்வாலயத்தை இடித்துக் கையால் கட்டாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டுவேன்' என்று இவன் சொல்ல நாங்கள் கேட்டோம்" என அவருக்கு எதிராகப் பொய்ச்சாட்சி கூறினர்.
மாற்கு 14 : 59 (RCTA)
இதிலுங்கூட அவர்களுடைய சாட்சி ஒவ்வாதிருந்தது.
மாற்கு 14 : 60 (RCTA)
தலைமைக்குரு அவர்கள் நடுவில் எழுந்து, "உனக்கு எதிராக இவர்கள் சாட்சி சொல்லுகின்றனரே, மறுமொழியாக ஒன்றும் சொல்வதற்கில்லையா?" என்று கேட்டார்.
மாற்கு 14 : 61 (RCTA)
அவரோ மறுமொழியாக ஒன்றும் சொல்லாமல் பேசாதிருந்தார். மீண்டும் தலைமைக்குரு, "போற்றுதற்குரிய இறைவனின் மகனான மெசியா நீதானோ?" என்று அவரைக் கேட்டார்.
மாற்கு 14 : 62 (RCTA)
அதற்கு இயேசு, "நான்தான். மனுமகன் வல்லமையுள்ள இறைவனின் வலப்பக்கத்தில் அமர்ந்து, வானமேகங்கள் சூழ வருவதைக் காண்பீர்கள்" என்றார்.
மாற்கு 14 : 63 (RCTA)
தலைமைக்குருவோ தம்முடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "நமக்கு இன்னும் சாட்சிகள் எதற்கு? தேவதூஷணம் கேட்டீர்களே. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்றார்.
மாற்கு 14 : 64 (RCTA)
அவர்கள் அனைவரும், "இவன் சாவுக்குரியவன்" என்று தீர்ப்பிட்டார்கள்.
மாற்கு 14 : 65 (RCTA)
அப்போது சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி, அறைந்து, "தீர்க்கதரிசனமாகச் சொல்" என்று கூறவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.
மாற்கு 14 : 66 (RCTA)
இராயப்பர் கீழே முற்றத்தில் இருக்கையில் தலைமைக்குருவின் ஊழியக்காரிகளுள் ஒருத்தி வந்து,
மாற்கு 14 : 67 (RCTA)
இராயப்பர் குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு, அவரை உற்று நோக்கி, "நீயும் நாசரேத்தூர் இயேசுவுடன் இருந்தாய்" என்றாள்.
மாற்கு 14 : 68 (RCTA)
அவரோ அதை மறுத்து, "நீ என்ன சொல்லுகிறாய் என்றே விளங்கவில்லை; எனக்கு ஒன்றும் தெரியாது" என்று சொல்லிவிட்டு, வெளியே வாசல்மண்டபத்திற்குச் சென்றார்.
மாற்கு 14 : 69 (RCTA)
கோழியும் கூவிற்று. மீண்டும், ஊழியக்காரி அவரைக் கண்டு, அருகே இருந்தவர்களிடம் "இவன் அவர்களுள் ஒருவன்" என்று சொல்லத் தொடங்கினாள்.
மாற்கு 14 : 70 (RCTA)
அவரோ மீண்டும் மறுத்தார். மீளவும் சிறிது நேரத்திற்குப்பின் அங்கு இருந்தவர்கள் இராயப்பரை நோக்கி, "உண்மையாக நீ அவர்களுள் ஒருவன். ஏனெனில், நீ கலிலேயன்" என்றார்கள்.
மாற்கு 14 : 71 (RCTA)
அவரோ, "நீங்கள் சொல்லுகிற அந்த ஆளை எனக்குத் தெரியவே தெரியாது" என்று சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.
மாற்கு 14 : 72 (RCTA)
உடனே இரண்டாம் முறையும் கோழி கூவிற்று. "இரு முறை கோழி கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று தமக்கு இயேசு சொன்னதை இராயப்பர் நினைவுகூர்ந்து கண்ணீர் சிந்தி அழலானார்.
❮
❯