மாற்கு 10 : 1 (RCTA)
அவர் அங்கிருந்து புறப்பட்டு யூதேயா நாட்டுக்கும், யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள்கூட்டம் அவரிடம் வந்து கூட, வழக்கம்போல் அவர் அவர்களுக்கு மறுபடியும் போதித்தார்.
மாற்கு 10 : 2 (RCTA)
பரிசேயர் அவரை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று அவரைச் சோதிக்கக் கேட்டனர்.
மாற்கு 10 : 3 (RCTA)
அதற்கு அவர், "மோயிசன் உங்களுக்கு என்ன கட்டளையிட்டார்?" என்று கேட்க,
மாற்கு 10 : 4 (RCTA)
அவர்கள், "முறிவுச் சீட்டு எழுதி அவளை விலக்கிவிடலாம் என்று மோயிசன் அனுமதி அளித்தார்" என்றனர்.
மாற்கு 10 : 5 (RCTA)
அதற்கு இயேசு, "உங்களுடைய முரட்டுத் தனத்தின் பொருட்டே இக்கட்டளையை எழுதி வைத்தார்.
மாற்கு 10 : 6 (RCTA)
படைப்பின் தொடக்கத்திலிருந்தே, கடவுள் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.
மாற்கு 10 : 7 (RCTA)
ஆதலால் கணவன் தன் தாய் தந்தையரைவிட்டுத் தன் மனைவியோடு கூடியிருப்பான்.
மாற்கு 10 : 8 (RCTA)
இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள். இனி அவர்கள் இருவரல்லர், ஒரே உடல்.
மாற்கு 10 : 9 (RCTA)
ஆகவே, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.
மாற்கு 10 : 10 (RCTA)
வீட்டிற்கு வந்து அவருடைய சீடர் மீண்டும் அதைப்பற்றி அவரைக் கேட்டனர்.
மாற்கு 10 : 11 (RCTA)
அதற்கு அவர் அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொருத்தியை மணப்பவன் எவனும் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறான்.
மாற்கு 10 : 12 (RCTA)
மனைவி தன் கணவனை விலக்கி வேறொருவனை மணந்துகொண்டால் அவளும் விபசராம் செய்கிறாள்" என்றார்.
மாற்கு 10 : 13 (RCTA)
குழந்தைகளை அவர் தொட வேண்டும் என்று அவரிடம் கொண்டுவந்தனர். சீடர் அதட்டினர்.
மாற்கு 10 : 14 (RCTA)
இயேசு அதைக் கண்டு சினந்து, அவர்களை நோக்கி "குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள், தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே.
மாற்கு 10 : 15 (RCTA)
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசைக் குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது" என்றார்.
மாற்கு 10 : 16 (RCTA)
பின்பு அவர் அவர்களை அரவணைத்து, கைகளை அவர்கள்மேல் வைத்து ஆசீர்வதித்தார்.
மாற்கு 10 : 17 (RCTA)
அவர் புறப்பட்டுப் போகும்போது, ஒருவன் ஓடிவந்து அவர்முன் முழந்தாளிட்டு, "நல்ல போதகரே, நான் முடிவில்லா வாழ்வு பெற என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான்.
மாற்கு 10 : 18 (RCTA)
இயேசுவோ அவனை நோக்கி, "என்னை நல்லவர் என்பானேன்? கடவுள் ஒருவர் அன்றி நல்லவர் எவருமில்லை.
மாற்கு 10 : 19 (RCTA)
கட்டளைகள் உனக்குத் தெரியுமே. கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய் சான்று சொல்லாதே, அநியாயம் செய்யாதே, தாய் தந்தையரைப் போற்று" என்றார்.
மாற்கு 10 : 20 (RCTA)
அதற்கு அவன், "போதகரே, சிறுவமுதல் இவை எல்லாம் கடைப்பிடித்து வருகிறேன்" என்றான்.
மாற்கு 10 : 21 (RCTA)
இயேசு, அவனை உற்றுநோக்கி, அவன்மீது அன்புகூர்ந்தார். "உனக்கு ஒன்று குறைவாயிருக்கிறது. போய் உனக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்பு வந்து என்னைப் பின்செல்" என்றார்.
மாற்கு 10 : 22 (RCTA)
அவன் இவ்வார்த்தையைக் கேட்டு, முகம் வாடி, வருத்தத்துடன் சென்றான். ஏனெனில், அவனுக்கு ஏராளமான சொத்து இருந்தது.
மாற்கு 10 : 23 (RCTA)
இயேசு சுற்றிலும் பார்த்துத் தம் சீடரிடம் "கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது! " என்றார்.
மாற்கு 10 : 24 (RCTA)
சீடர் அவருடைய வார்த்தைகளைக் கேட்டுத் திடுக்கிட்டனர். இயேசுவோ மீண்டும் அவர்களை நோக்கி, "பிள்ளைகளே, பணத்தை நம்பி இருப்பவர்கள் கடவுளின் அரசில் நுழைவது எவ்வளவோ அரிது!
மாற்கு 10 : 25 (RCTA)
பணக்காரன் கடவுளின் அரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.
மாற்கு 10 : 26 (RCTA)
அவர்கள் இன்னும் அதிகமாக மலைத்துப்போய், 'பின்யார்தாம் மீட்புப் பெறமுடியும்?" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர்.
மாற்கு 10 : 27 (RCTA)
இயேசு அவர்களை உற்றுநோக்கி, "மனிதரால் இது முடியாது. ஆனால் கடவுளுக்கு அப்படியன்று. கடவுளால் எல்லாம் முடியும்" என்று சொன்னார்.
மாற்கு 10 : 28 (RCTA)
அப்பொழுது இராயப்பர் அவரிடம், "இதோ! நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்சென்றோமே" என்று சொன்னார்.
மாற்கு 10 : 29 (RCTA)
அதற்கு இயேசு, "தன் வீட்டையோ, சகோதரர் சகோதரிகளையோ, தாய் தந்தையரையோ, மக்களையோ, நிலபுலங்களையோ என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் துறந்துவிடும் எவனும்,
மாற்கு 10 : 30 (RCTA)
இம்மையில் இன்னல்களோடு கூட, வீடு, சகோதரர், சகோதரி, தாய், பிள்ளை, நிலபுலங்களை நூறு மடங்காகவும், மறுமையில் முடிவில்லா வாழ்வையும் பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாற்கு 10 : 31 (RCTA)
முதலானோர் பலர் கடைசியாவர், கடைசியானோர் பலர் முதலாவர்" என்றார்.
மாற்கு 10 : 32 (RCTA)
அவர்கள் பயணமாகி யெருசலேமை நோக்கிப் போகையில், இயேசு அவர்களுக்குமுன் நடந்துகொண்டிருந்தார். அவர்களோ திகைப்புற்றிருந்தனர். பின்னே வந்தவர்களும் அச்சம் கொண்டிருந்தனர். மீண்டும் பன்னிருவரையும் அழைத்துத் தமக்கு நேரப்போவதை அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்:
மாற்கு 10 : 33 (RCTA)
இதோ! யெருசலேமுக்குப் போகிறோம். மனுமகன் தலைமைக்குருக்களிடமும் மறைநூல் அறிஞரிடமும் கையளிக்கப் படுவார். அவர்கள் அவருக்குக் கொலைத் தீர்ப்பிட்டு, அவரைப் புறவினத்தாரிடம் கையளிப்பர்.
மாற்கு 10 : 34 (RCTA)
அவர்கள் அவரை எள்ளிநகையாடி, துப்பி, சாட்டையால் அடித்துக் கொல்லுவார்கள். அவரோ மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவார்" என்றார்.
மாற்கு 10 : 35 (RCTA)
செபெதேயுவின் மக்கள் யாகப்பரும் அருளப்பரும் அவரிடம் வந்து, "போதகரே, நாங்கள் கேட்கப்போவதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும்" என்றனர்.
மாற்கு 10 : 36 (RCTA)
இயேசுவோ அவர்களை நோக்கி, "நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்?" என்றார்.
மாற்கு 10 : 37 (RCTA)
"நீர் உம் மாட்சிமையில் வீற்றிருக்கும்போது, எங்களுள் ஒருவர் உமது வலப்பக்கமும், மற்றவர் உமது இடப் பக்கமுமாக அமர அருளும்" என்றார்கள்.
மாற்கு 10 : 38 (RCTA)
அதற்கு இயேசு, "நீங்கள் கேட்பது என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்க முடியுமா? நான் பெறும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெற முடியுமா?" என்றார்.
மாற்கு 10 : 39 (RCTA)
"முடியும்" என்றனர். அதற்கு இயேசு, "நான் குடிக்கும் கிண்ணத்தில் குடிப்பீர்கள்; நான் பெறும் ஞானஸ்நானத்தையும் பெறுவீர்கள்.
மாற்கு 10 : 40 (RCTA)
ஆனால் எனது வலப்பக்கமோ இடப்பக்கமோ அமர அருள்வது என்னுடையதன்று; யாருக்கு ஏற்பாடு ஆகியிருக்கிறதோ அவர்களுக்கே அது கிடைக்கும்" என்றார்.
மாற்கு 10 : 41 (RCTA)
அதைக் கேட்ட பதின்மரும், யாகப்பர் மேலும் அருளப்பர் மேலும் சினம்கொள்ளத் தொடங்கினர்.
மாற்கு 10 : 42 (RCTA)
இயேசு, அவர்களைத் தம்மிடம் அழைத்து, அவர்களுக்குக் கூறியது: 'புறவினத்தாரிடையே தலைவர்கள் எனப்படுவோர் அவர்களை அடக்கி ஆளுகின்றனர். அவர்களுள் பெரியோர் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகின்றனர்.
மாற்கு 10 : 43 (RCTA)
இது உங்களுக்குத் தெரியும். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுக்குள் எவன் பெரியவனாய் இருக்க விரும்புகிறானோ, அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.
மாற்கு 10 : 44 (RCTA)
எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் எல்லாருக்கும் ஊழியனாய் இருக்கட்டும்.
மாற்கு 10 : 45 (RCTA)
ஏனெனில், மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்."
மாற்கு 10 : 46 (RCTA)
அவர்கள் எரிக்கோவுக்கு வந்தார்கள். எரிக்கோவிலிருந்து அவரும் அவர் சீடரும் ஒரு பெருங்கூட்டமும் புறப்படும்பொழுது திமேயுவின் மகன் பர்த்திமேயு என்ற கண்தெரியாத பிச்சைக்காரன் வழியோரத்தில் உட்கார்ந்திருந்தான்.
மாற்கு 10 : 47 (RCTA)
நாசரேத்தூர் இயேசுதாம் அவர் என்று கேள்வியுற்று, "தாவீதின் மகனே, இயேசுவே, என் மீது இரக்கம் வையும்" என்று கூவத் தொடங்கினான்.
மாற்கு 10 : 48 (RCTA)
பேசாதிருக்கும்படி பலர் அவனை அதட்டினார்கள். அவனோ, "தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்" என்று இன்னும் அதிகமாய்க் கூவினான்.
மாற்கு 10 : 49 (RCTA)
இயேசு நின்று, "அவனை அழைத்து வாருங்கள்" என்றார். அவர்கள் குருடனை அழைத்து, "தைரியமாயிரு, எழுந்திரு, உன்னை அழைக்கிறார்" என்றார்கள்.
மாற்கு 10 : 50 (RCTA)
அவன் தன் போர்வையை எறிந்துவிட்டு, துள்ளிக்குதித்து அவரிடம் வந்தான்.
மாற்கு 10 : 51 (RCTA)
இயேசு, "உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று அவனைக் கேட்க, குருடன், "ராபூனி, நான் பார்வை பெற வேண்டும்" என்றான்.
மாற்கு 10 : 52 (RCTA)
இயேசு அவனை நோக்கி, "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, நீ போகலாம்" என்றார். அவன் உடனே பார்வை பெற்று, இயேசுவுக்குப் பின்னே வழி நடந்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52

BG:

Opacity:

Color:


Size:


Font: