லூக்கா 8 : 1 (RCTA)
பின்னர் கடவுளின் அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே இயேசு ஊர் ஊராய்ச் செல்லலானார். பன்னிருவரும் அவருடன் சென்றனர்.
லூக்கா 8 : 2 (RCTA)
பொல்லாத ஆவிகளினின்றும் பிணிகளினின்றும் குணமான பெண்கள் சிலரும் அவர்களோடு இருந்தனர். இப்பெண்கள் யாரெனில், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மதலேன் என்னும் மரியாள்,
லூக்கா 8 : 3 (RCTA)
ஏரோதின் காரியத்தலைவன் கூசாவின் மனைவி அருளம்மாள், சூசன்னா, மற்றும் பெண்கள் பலர் இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
லூக்கா 8 : 4 (RCTA)
பெருந் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் அவரிடம் வந்தபோது அவர் உவமையாகக் கூறியது:
லூக்கா 8 : 5 (RCTA)
"விதைப்பவன் விதையை விதைக்கச் சென்றான். விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரமாய் விழுந்தன; அவை மிதிபட்டு வானத்துப் பறவைகளால் தின்னப்பட்டன.
லூக்கா 8 : 6 (RCTA)
சில பாறைமீது விழுந்தன; முளைத்தும் ஈரமின்மையால் காய்ந்துபோயின
லூக்கா 8 : 7 (RCTA)
சில முட்செடிகளின் நடுவே விழுந்தன; 'கூடவளர்ந்த முட்செடிகளோ அவற்றை நெரித்துவிட்டன.
லூக்கா 8 : 8 (RCTA)
சில நன்னிலத்தில விழுந்தன; அவை முளைத்து நூறு மடங்கு பலன் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்."
லூக்கா 8 : 9 (RCTA)
பின்னர், அவருடைய சீடர், "இவ்வுவமையின் பொருள் யாது?" என்று வினவினர்.
லூக்கா 8 : 10 (RCTA)
அவர் அவர்களுக்குச் கூறியது: "கடவுளுடைய அரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவாறும், கேட்டும் உணராதவாறும் அவை உவமைகளாகக் கூறப்பட்டன.
லூக்கா 8 : 11 (RCTA)
"இந்த உவமையின் பொருளாவது: விதை கடவுளின் வார்த்தை.
லூக்கா 8 : 12 (RCTA)
வழியோரமாய் விழுந்த விதை, அவ்வார்த்தையைக் கேட்பவர்களைக் குறிக்கிறது. அவர்கள் அதைக் கேட்கிறார்கள். ஆனால், அலகை வந்து அவர்கள் விசுவாசித்து மீட்புப்பெறாதபடி அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.
லூக்கா 8 : 13 (RCTA)
பாறைமீது விழுந்த விதை, அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கிறது. மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலம் விசுவசித்து, சோதனை வேளையில் பின்வாங்குகிறார்கள்.
லூக்கா 8 : 14 (RCTA)
முட்செடிகள் நடுவில் விழுந்த விதை, வார்த்தையைக் கேட்கும் வேறு சிலரைக் குறிக்கிறது. அவர்களும் கேட்கிறார்கள். ஆனால், நாளாவட்டத்தில் கவலைகள், செல்வம், வாழ்வின் இன்பங்களால் அது நெரிக்கப்பட்டு முதிர்ச்சியடைவதில்லை.
லூக்கா 8 : 15 (RCTA)
நல்ல நிலத்தில் விழுந்த விதையோ வார்த்தையைக் கேட்டுச் சீரிய செம்மனத்தில் பதித்து நிலையாயிருந்து பலன் அளிப்பவர் ஆவர்.
லூக்கா 8 : 16 (RCTA)
எவனும் விளக்கை ஏற்றிப் பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. உள்ளே வருபவர் ஒளியைக் காணும்படி அதை விளக்குத் தண்டின் மீது வைப்பான்.
லூக்கா 8 : 17 (RCTA)
வெளிப்படாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. அறியப்படாமலும் வெளியாகாமலும் மறைந்திருப்பது ஒன்றுமில்லை.
லூக்கா 8 : 18 (RCTA)
ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் தேவவார்த்தையைக் கேட்கிறீர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். உள்ளவனுக்குக் கொடுக்கப்படும். இல்லாதவனிடமிருந்து, உள்ளதாகக் கருதுவதும் எடுக்கப்படும்."
லூக்கா 8 : 19 (RCTA)
அவருடைய தாயும் சகோதரரும் அவரிடம் வந்தனர். ஆனால் கூட்ட மிகுதியினால் அவரை அணுகமுடியவில்லை.
லூக்கா 8 : 20 (RCTA)
உம் தாயும் சகோதரரும் உம்மைக் காண விரும்பி வெளியே நிற்கின்றனர்" என்று அவருக்கு அறிவித்தனர்.
லூக்கா 8 : 21 (RCTA)
அதற்கு அவர், "கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்" எனக் கூறினார்.
லூக்கா 8 : 22 (RCTA)
ஒருநாள் தம்முடைய சீடரோடு படகேறி, "ஏரியின் அக்கரைக்குச் செல்வோம்" என அவர்களுக்குச் சொன்னார். அவர்களும் படகைச் செலுத்தினார்கள்.
லூக்கா 8 : 23 (RCTA)
அவர்கள் படகு ஓட்டுகையில் அவர் உறங்கினார். அப்போது புயற்காற்று கடலில் வீசியது. படகு நீரால் நிறைந்துபோகவே, அவர்கள் ஆபத்திற்குள்ளானார்கள்.
லூக்கா 8 : 24 (RCTA)
அவரிடம் வந்து, "குருவே, குருவே, மடிந்துபோகிறோம்" என்று அவரை எழுப்பினர். அவர் எழுந்து காற்றையும் கொந்தளிப்பையும் கடியவே, அவை அடங்கின. அமைதி உண்டாயிற்று.
லூக்கா 8 : 25 (RCTA)
பின்னர், அவர் அவர்களிடம், "உங்கள் விசுவாசம் எங்கே?" என்றார். அவர்களோ அச்சமுற்று, "காற்றுக்கும் கடலுக்கும் இவர் ஆணையிட அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யாராயிருக்கலாம்!" என்று ஒருவருக்கொருவர் வியப்புடன் பேசிக்கொண்டனர்.
லூக்கா 8 : 26 (RCTA)
பின்பு கலிலேயாவிற்கு எதிரே இருக்கும் கெரசேனர் நாட்டை நோக்கிப் படகை ஓட்டினர்.
லூக்கா 8 : 27 (RCTA)
கரையேறியதும் அந்த ஊரைச் சார்ந்த ஒருவன் அவருக்கு எதிரே வந்தான். அவன் பேய்பிடித்தவன். நெடுநாளாய் ஆடையணியாது, வீட்டிலும் தங்காது, கல்லறைகளில் தங்கியிருந்தான்.
லூக்கா 8 : 28 (RCTA)
இயேசுவைக் கண்டதும், கூக்குரலிட்டு அவர்முன் விழுந்து, " இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, என் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர் ? உம்மை மன்றாடுகிறேன்: என்னை வதைக்கவேண்டாம்" என உரக்கக் கத்தினான்.
லூக்கா 8 : 29 (RCTA)
ஏனெனில், அம்மனிதனை விட்டகலும்படி இயேசு அசுத்த ஆவிக்குக் கட்டளையிட்டிருந்தார். எத்தனையோ முறை அது அவனைப் பிடித்து ஆட்டியிருக்கிறது. அவன் சங்கலியும் விலங்கும் மாட்டிக் காவல்காக்கப்பட்டிருந்தும் அவ்வேளைகளில் கட்டுகளை உடைப்பான்; பேயும் அவனைப் பாலைவனத்திற்கு இழுத்துச் செல்லும்.
லூக்கா 8 : 30 (RCTA)
" உன் பெயர் என்ன?" என்று இயேசு அவனைக் கேட்டார். "படை" என்றான்.- ஏனெனில், பல பேய்கள் அவனுக்குள் புகுந்திருந்தன.-
லூக்கா 8 : 31 (RCTA)
பாதாளத்திற்குச் செல்லத் தங்களுக்குக் கட்டளை இடாதபடி அவரை வேண்டின.
லூக்கா 8 : 32 (RCTA)
அங்கே பல பன்றிகள் கூட்டமாக மலையில் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றிற்குள் போக விடையளிக்குமாறு பேய்கள் அவரை வேண்டவே, அவர் விடைகொடுத்தார்.
லூக்கா 8 : 33 (RCTA)
பேய்கள் அம்மனிதனை விட்டுப் பன்றிகளுக்குள் புகுந்தன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து மூழ்கிப்போயிற்று.
லூக்கா 8 : 34 (RCTA)
மேய்ந்தவர்களோ நடந்ததைக் கண்டு ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் அறிவித்தார்கள்.
லூக்கா 8 : 35 (RCTA)
அதைக் காண மக்கள் புறப்பட்டு இயேசுவிடம் வந்தனர். பேய்கள் நீங்கியவன் தன்னுணர்வுடன் ஆடை அணிந்து இயேசுவின் காலடியில் இருக்கக் கண்டு, அஞ்சினர்.
லூக்கா 8 : 36 (RCTA)
நடந்ததைக் கண்டவர்கள், பேய்பிடித்தவன் எப்படி விடுவிக்கப் பெற்றான் என்று அவர்களுக்கு அறிவித்தனர்.
லூக்கா 8 : 37 (RCTA)
கெரசேனர் நாட்டு மக்கள் எல்லாரும் திரண்டு வந்து, தங்களை விட்டகலும்படி அவரைக் கேட்டனர். ஏனெனில், அச்சம் அவர்களை ஆட்கொண்டது. அவர் படகிலேறித் திரும்பிப்போனார்.
லூக்கா 8 : 38 (RCTA)
பேய்கள் நீங்கியவன் "நானும் உம்மோடு வரவிடும்" என்று மன்றாடினான்.
லூக்கா 8 : 39 (RCTA)
இயேசுவோ, "நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" என்று கூறி அவனை அனுப்பிவிட்டார். அவன் நகரெங்கும் சென்று இயேசு தனக்குச் செய்ததெல்லாம் அறிவிக்கலானான்.
லூக்கா 8 : 40 (RCTA)
இயேசு திரும்பி வரும்போது, மக்கள் திரள் அவரை வரவேற்றது. ஏனெனில், எல்லாரும் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
லூக்கா 8 : 41 (RCTA)
இதோ! செபக்கூடத்தலைவனான யாயீர் என்னும் ஒருவன் வந்து இயேசுவின் காலில் விழுந்து தன் வீட்டுக்கு வரும்படி வேண்டினான்.
லூக்கா 8 : 42 (RCTA)
ஏறக்குறைய பன்னிரண்டு வயதுள்ள அவனுடைய ஒரே மகள் சாகக்கிடந்தாள். அவர் போகையில் மக்கள் திரள் அவரை நெருக்கியது.
லூக்கா 8 : 43 (RCTA)
பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி அக்கூட்டத்தில் இருந்தாள். ஒருவராலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை.
லூக்கா 8 : 44 (RCTA)
அவள் அவருக்குப் பின்னே சென்று அவருடைய போர்வையின் விளிம்பைத் தொட்டவுடனே பெரும்பாடு நின்றது.
லூக்கா 8 : 45 (RCTA)
என்னைத் தொட்டது யார்?" என்று இயேசு கேட்டார். "யாரும் தொடவில்லை" என்று அனைவரும் சொல்ல, இராயப்பரும் அவருடன் இருந்தோரும், "குருவே, மக்கள் திரள் உம்மைச் சூழ்ந்து நெருக்குகிறதே" என்றனர்.
லூக்கா 8 : 46 (RCTA)
"யாரோ என்னைத் தொட்டார்கள், வல்லமை என்னிடமிருந்து வெளியேறியதை நான் உணர்ந்தேன்" என்று இயேசு கூறினார்.
லூக்கா 8 : 47 (RCTA)
தான் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து, அவள் நடுங்கிக்கொண்டு அவரிடம் வந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும், உடனே குணமானதையும் எல்லாருக்கும் முன்பாகத் தெரிவித்தாள்.
லூக்கா 8 : 48 (RCTA)
அவரோ அவளை நோக்கி, "மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று. சமாதானமாய்ப் போ" என்றார்.
லூக்கா 8 : 49 (RCTA)
அவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, செபக்கூடத் தலைவன் வீட்டிலிருந்து ஒருவன் வந்து, "உம் மகள் இறந்துவிட்டாள். போதகரை இனித் தொந்தரை செய்யாதீர்" என்றான்.
லூக்கா 8 : 50 (RCTA)
இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தகப்பனிடம், "அஞ்சாதே, விசுவசி, அதுபோதும்; அவள் பிழைப்பாள்" என்றார்.
லூக்கா 8 : 51 (RCTA)
அவர் வீட்டிற்கு வந்ததும் இராயப்பர், யாகப்பர், அருளப்பர், சிறுமியின் தாய் தந்தையர் இவர்களைத் தவிர வேறெவரையும் தம்மோடு உள்ளே வரவிடவில்லை.
லூக்கா 8 : 52 (RCTA)
அனைவரும் அவளுக்காக மாரடித்து அழுதுகொண்டிருந்தனர். அவரோ, "அழ வேண்டாம். அவள் சாகவில்லை, தூங்குகிறாள்" என்றார்.
லூக்கா 8 : 53 (RCTA)
ஆனால் அவர்கள், அவள் இறந்துவிட்டாள் என அறிந்திருந்ததால் அவரை ஏளனம் செய்தார்கள்.
லூக்கா 8 : 54 (RCTA)
அவரோ, அவள் கையைப் பிடித்து, "குழந்தாய், எழுந்திரு " என்று கூப்பிட்டார்.
லூக்கா 8 : 55 (RCTA)
உயிர் திரும்பி வரவே, அவள் உடனே எழுந்தாள். அவளுக்கு உணவு கொடுக்கச் சொன்னார்.
லூக்கா 8 : 56 (RCTA)
அவளுடைய பெற்றோர் திகைத்துப் போயினர். நிகழ்ந்ததை எவருக்கும் சொல்ல வேண்டாம் என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
❮
❯