லூக்கா 6 : 1 (RCTA)
ஓர் ஒய்வு நாளன்று விளைச்சல் வழியே அவர் செல்லும் பொழுது, சீடர் கதிர்களைக் கொய்து கையில் கசக்கித் தின்றனர்.
லூக்கா 6 : 2 (RCTA)
பரிசேயருள் சிலர், "ஓய்வுநாளில் செய்யத் தகாததை நீங்கள் செய்வதேன்?" என்றனர்.
லூக்கா 6 : 3 (RCTA)
அதற்கு இயேசு, "தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபொழுது, அவர் என்ன செய்தார் என்று நீங்கள் வாசித்ததில்லையோ?
லூக்கா 6 : 4 (RCTA)
அவர் கடவுளின் இல்லத்தில் நுழைந்து, குருக்கள் தவிர மற்றெவரும் உண்ணக் கூடாத காணிக்கை அப்பங்களை எடுத்து, தாம் உண்டதுமன்றி, கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தாரே" என்றார்,
லூக்கா 6 : 5 (RCTA)
மேலும், "மனுமகன் ஓய்வுநாளுக்கு ஆண்டவர்" என்றார்.
லூக்கா 6 : 6 (RCTA)
மற்றோர் ஓய்வு நாளில் செபக்கூடத்திற்குப் போய்ப் போதிக்கலானார். வலது கை சூம்பிப்போன ஒருவன் அங்கு இருந்தான்.
லூக்கா 6 : 7 (RCTA)
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் அவரிடம் குற்றம் காணும்படி, ஓய்வு நாளில் குணமாக்குவாரா என்று பார்த்துக் கொண்டே இருந்தனர்.
லூக்கா 6 : 8 (RCTA)
அவர்களுடைய எண்ணங்களை அவர் அறிந்து, சூம்பிய கையனை நோக்கி, "எழுந்து நடுவில் நில்" என்றார். அவன் எழுந்து நின்றான்.
லூக்கா 6 : 9 (RCTA)
இயேசு அவர்களிடம், "உங்களை ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் எது செய்வது முறை? பிறருக்கு நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?" என்று கேட்டார்.
லூக்கா 6 : 10 (RCTA)
எல்லாரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தபின், அவனை நோக்கி, "கையை நீட்டு" என்றார். அப்படியே செய்தான்: கை குணமாயிற்று.
லூக்கா 6 : 11 (RCTA)
அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாமென்று கலந்துபேசலாயினர்.
லூக்கா 6 : 12 (RCTA)
அந்நாட்களில் அவர் செபிக்கும்படி மலைக்குச் சென்று, கடவுளை வேண்டுவதில் இரவெல்லாம் கழித்தார்.
லூக்கா 6 : 13 (RCTA)
பொழுது புலர்ந்ததும், தம் சீடரை அழைத்து அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 'அப்போஸ்தலர்' என்று பெயரிட்டார்.
லூக்கா 6 : 14 (RCTA)
அவர்கள் யாரெனில்: இராயப்பர் என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் பெலவேந்திரர் யாகப்பர், அருளப்பர், பிலிப்பு, பார்த்தொலொமேயு,
லூக்கா 6 : 15 (RCTA)
மத்தேயு, தோமையார், அல்பேயின் மகன் யாகப்பர், 'தீவிரவாதி' எனப்படும் சீமோன்,
லூக்கா 6 : 16 (RCTA)
யாகப்பரின் சகோதரர் யூதா, காட்டிக்கொடுத்தவனான யூதாஸ் இஸ்காரியோத்தும் ஆவர்.
லூக்கா 6 : 17 (RCTA)
அவர் அவர்களோடு இறங்கி வந்து சமதளமான ஓரிடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் பெருங்கூட்டமாய் இருந்தனர். யூதேயா முழுவதிலிருந்தும் யெருசலேமிலிருந்தும், தீர், சீதோன் கடற்கரையிலிருந்தும் மாபெரும் திரளாக மக்களும் வந்திருந்தனர். அவர் சொல்லுவதைக் கேட்கவும், தங்கள் நோய்கள் நீங்கிக் குணமாகவும் அவர்கள் வந்திருந்தனர்.
லூக்கா 6 : 18 (RCTA)
அசுத்த ஆவிகளால் தொல்லைப் பட்டவர்கள் குணமானார்கள்.
லூக்கா 6 : 19 (RCTA)
அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு யாவரையும் குணமாக்கியதால், அங்குத் திரண்டிருந்த யாவரும் அவரைத் தொடுவதற்கு முயன்றனர்.
லூக்கா 6 : 20 (RCTA)
அவரோ தம் சீடரை ஏறெடுத்துப் பார்த்துக் கூறியதாவது: "ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்; ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே.
லூக்கா 6 : 21 (RCTA)
இப்பொழுது பசியாய் இருப்பவர்களே, நீங்கள் பேறுபெற்றவர்கள்; ஏனெனில், நிறைவு பெறுவீர்கள். "இப்பொழுது அழுபவர்களே, நீங்கள் பேறுபெற்றவர்கள்; ஏனெனில், சிரிப்பீர்கள்.
லூக்கா 6 : 22 (RCTA)
மனுமகன் பொருட்டு மனிதர் உங்களை வெறுத்துப் புறம்பாக்கி வசைகூறி, உங்கள் பெயரே ஆகாது என்று இகழ்ந்து ஒதுக்கும்பொழுது நீங்கள் பேறுபெற்றவர்கள்.
லூக்கா 6 : 23 (RCTA)
அந்நாளில் துள்ளி அகமகிழுங்கள். ஏனெனில், இதோ! வானகத்தில் உங்கள் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய முன்னோரும் இறைவாக்கினருக்கு அவ்வாறே செய்தனர்.
லூக்கா 6 : 24 (RCTA)
ஆனால் பணக்காரர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், உங்களுக்கு ஆறுதல் கிடைத்து விட்டது.
லூக்கா 6 : 25 (RCTA)
இப்பொழுது திருப்தியாயிருப்பவர்களே உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், பசியாயிருப்பீர்கள். "இப்பொழுது சிரிப்பவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், துயருற்று அழுவீர்கள்.
லூக்கா 6 : 26 (RCTA)
மனிதர் எல்லாரும் உங்களைப் புகழும்பொழுது உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், அவர்களுடைய முன்னோரும் போலித் தீர்க்கதரிசிகளுக்கு அவ்வாறே செய்தனர்.
லூக்கா 6 : 27 (RCTA)
"நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
லூக்கா 6 : 28 (RCTA)
உங்களைச் சபிக்கிறவர்களுக்கு ஆசிகூறுங்கள். உங்களைத் தூற்றுவோருக்காகச் செபியுங்கள்.
லூக்கா 6 : 29 (RCTA)
ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு, மறுகன்னத்தையும் காட்டு. உன் மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் மறுக்காதே.
லூக்கா 6 : 30 (RCTA)
உன்னிடம் கேட்பவன் எவனுக்கும் கொடு. உன் உடைமைகளைப் பறிப்பவனிடமிருந்து திருப்பிக் கேட்காதே.
லூக்கா 6 : 31 (RCTA)
பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
லூக்கா 6 : 32 (RCTA)
உங்களுக்கு அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்தால், அதனால் உங்களுக்கு என்ன பலன்? பாவிகளும் தமக்கு அன்பு செய்பவர்களுக்கு அன்பு செய்கின்றனரே.
லூக்கா 6 : 33 (RCTA)
உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால், அதனால் உங்களுக்கு என்ன பலன்? பாவிகளும் அவ்வாறு செய்கின்றனரே.
லூக்கா 6 : 34 (RCTA)
எவரிடமிருந்து திரும்பிப்பெற எதிர்ப்பார்க்கிறீர்களோ, அவர்களுக்கே கடன் கொடுத்தால் உங்களுக்கு என்ன பலன்? ஏனெனில், சரிக்குச் சரி பெறுமாறு பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கின்றனரே.
லூக்கா 6 : 35 (RCTA)
உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள். அவர்களுக்கு நன்மை புரியுங்கள். ஒன்றும் எதிர்பாராமல் கடன் கொடுங்கள். அப்போது உங்களுக்கு மிகுதியான கைம்மாறு கிடைக்கும். உன்னதரின் மக்களாயிருப்பீர்கள். ஏனெனில், அவர் நன்றிகெட்டவர்க்கும் தீயவர்க்கும் பரிவு காட்டுகிறார்.
லூக்கா 6 : 36 (RCTA)
உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.
லூக்கா 6 : 37 (RCTA)
தீர்ப்பிடாதீர்கள், நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். கண்டனம் செய்யாதீர்கள், கண்டனம் பெறமாட்டீர்கள்.
லூக்கா 6 : 38 (RCTA)
மன்னியுங்கள், மன்னிக்கப்படுவீர்கள். கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். ஏனெனில், எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்."
லூக்கா 6 : 39 (RCTA)
அவர்களுக்கு ஓர் உவமையும் கூறினார்: "குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? இருவரும் குழியில் விழமாட்டார்களா? சீடன் குருவுக்கு மேற்பட்டவனல்லன்.
லூக்கா 6 : 40 (RCTA)
தேர்ச்சிபெற்ற எவனும் தன் குருவைப் போன்றிருப்பான்.
லூக்கா 6 : 41 (RCTA)
உன் கண்ணிலே உள்ள விட்டத்தைக் கவனியாது, உன் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பைப் பார்ப்பதேன்?
லூக்கா 6 : 42 (RCTA)
உன் கண்ணிலுள்ள விட்டத்தைப் பார்க்காத நீ, உன் சகோதரனை நோக்கி, 'தம்பி, உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுக்கவிடு' என்று எப்படிச் சொல்லலாம்? வெளிவேடக்காரனே, முதலில் உன் கண்ணிலிருந்து விட்டத்தை எடுத்தெறி; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்க நன்றாய்க் கண்தெரியும்.
லூக்கா 6 : 43 (RCTA)
கெட்ட கனி தரும் நல்ல மரமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.
லூக்கா 6 : 44 (RCTA)
ஒவ்வொரு மரத்தையும் அறிவது அதனதன் கனியாலே. ஏனெனில், முட்செடியில் அத்திப்பழம் பறிப்பாருமில்லை; நெருஞ்சியில் திராட்சைக்குலை கொய்வாருமில்லை.
லூக்கா 6 : 45 (RCTA)
நல்லவன் தன் உள்ளமாகிய நற்கருவூலத்தினின்று நல்லவற்றை எடுத்துக்கொடுக்கிறான். தீயவனோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக்கொடுக்கிறான். ஏனெனில், உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்.
லூக்கா 6 : 46 (RCTA)
"நான் சொல்லுவதைச் செய்யாமல் 'ஆண்டவரே, ஆண்டவரே' என்று என்னை நீங்கள் அழைப்பானேன்?
லூக்கா 6 : 47 (RCTA)
"என்னிடம் வந்து என் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவன் எவனும் யாருக்கு ஒப்பாவான் என்று உங்களுக்குக் கூறுவேன்.
லூக்கா 6 : 48 (RCTA)
அவன், ஆழத்தோண்டி, பாறைமீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டுகிறவனுக்கு ஒப்பாவான். ஆறு பெருக்கெடுத்து வீட்டின்மீது மோதியும், அதை அசைக்க முடியாமல் போயிற்று. ஏனெனில், நன்றாகக் கட்டியிருந்தது.
லூக்கா 6 : 49 (RCTA)
ஆனால், கேட்டும் அதன்படி நடக்காதவன், அடித்தளமில்லாமல் மண்மீது வீடு கட்டியவனுக்கு ஒப்பாவான். ஆறு அதன் மீது மோதியதும் அது இடிந்து விழுந்தது. அவ்வீட்டிற்குப் பெரும் அழிவு ஏற்பட்டது."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49