லூக்கா 5 : 1 (RCTA)
ஒருநாள் அவர் கெனேசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தபோது, திரளான மக்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர்.
லூக்கா 5 : 2 (RCTA)
அப்போது, ஏரிக்கரையில் இரண்டு படகுகள் இருக்கக் கண்டார். மீனவர்களோ படகை விட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தனர்.
லூக்கா 5 : 3 (RCTA)
அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் ஏறி, கரையிலிருந்து சற்றே தள்ளச் சொல்லி, அமர்ந்துகொண்டு படகிலிருந்தே கூட்டத்திற்குப்போதிக்கலனார்.
லூக்கா 5 : 4 (RCTA)
பேசி முடிந்ததும் சீமோனிடம், "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்று கூறினார்.
லூக்கா 5 : 5 (RCTA)
அதற்குச் சீமோன், "குருவே, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்" என்றார்.
லூக்கா 5 : 6 (RCTA)
அவ்வாறே செய்ததும் ஏராளமான மீன்களை வளைத்துப் பிடித்தனர். வலைகள் கிழியத் தொடங்கவே,
லூக்கா 5 : 7 (RCTA)
மற்றப் படகிலிருந்த தங்கள் தோழர்களுக்குச் சைகை காட்டி உதவிக்கு வருமாறு அழைத்தனர். அவர்களும் வந்து படகுகள் இரண்டையும் நிரப்ப, அவை மூழ்குவனபோல் இருந்தன.
லூக்கா 5 : 8 (RCTA)
இதைக்கண்ட சீமோன் இராயப்பர் இயேசுவின் காலில் விழுந்து, "ஆண்டவரே, பாவியேனை விட்டு அகலும்" என்றார்.
லூக்கா 5 : 9 (RCTA)
அவரும் அவரோடிருந்த அனைவரும் அகப்பட்ட மீன் பாட்டைக் கண்டுத் திகிலுற்றனர்.
லூக்கா 5 : 10 (RCTA)
சீமோனுடைய கூட்டாளிகளான செபெதேயுவின் மக்கள், யாகப்பரும் அருளப்பரும் அவ்வாறே திகிலுற்றனர். இயேசுவோ சீமோனை நோக்கி, "அஞ்சாதே, இன்று முதல் நீ மனிதர்களைப் பிடிப்பவன் ஆவாய்" என்றார்.
லூக்கா 5 : 11 (RCTA)
அவர்கள் படகுகளைக் கரைச் சேர்த்ததும், யாவற்றையும் துறந்து அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
லூக்கா 5 : 12 (RCTA)
அவர் ஓர் ஊரில் இருந்தபோது, இதோ! உடலெல்லாம் தொழுநோயாயிருந்த ஒருவன் இயேசுவைக் கண்டு முகங்குப்புற விழுந்து, "ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று மன்றாடினான்.
லூக்கா 5 : 13 (RCTA)
அவர் தம் கையை நீட்டி, "விரும்புகிறேன், குணமாகு" என்று சொல்லி அவனைத் தொட்டார். உடனே தொழுநோய் அவனை விட்டு நீங்கியது.
லூக்கா 5 : 14 (RCTA)
ஒருவருக்கும் இதைச் சொல்லவேண்டாம்" என்று அவனுக்குக் கட்டளையிட்டு, "போய், உன்னைக் குருவிடம் காட்டி, நீ குணமானதற்காக மோயீசன் கற்பித்தபடி காணிக்கை செலுத்து. அது அவர்களுக்கு அத்தாட்சியாகும்" என்றார்.
லூக்கா 5 : 15 (RCTA)
அவரைப்பற்றிய பேச்சு இன்னும் மிகுதியாய்ப் பரவிற்று. அவர் சொல்வதைக் கேட்கவும், தங்கள் பிணிகள் நீங்கவும் மக்கள் திரள் திரளாக அவரிடம் வருவார்கள்.
லூக்கா 5 : 16 (RCTA)
அவரோ தனிமையான இடங்களுக்குச் சென்று செபஞ்செய்வது வழக்கம்.
லூக்கா 5 : 17 (RCTA)
ஒருநாள் அவர் போதித்துக்கொண்டிருக்கும்பொழுது கலிலேயா, யூதேயா நாடுகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் யெருசலேமிலிருந்தும் வந்த பரிசேயரும் சட்டவல்லுநரும் அமர்ந்திருந்தனர். நோய் நீக்குவதற்கென ஆண்டவருடைய வல்லமை இயேசுவோடு இருந்தது.
லூக்கா 5 : 18 (RCTA)
அப்போது இதோ! திமிர்வாதம் கொண்ட ஒருவனைச் சிலர் கட்டிலோடு தூக்கி வந்து, உள்ளே கொண்டுபோய் அவர் முன்னே கிடத்த முயன்றனர்.
லூக்கா 5 : 19 (RCTA)
கூட்ட மிகுதியால் உள்ளே கொண்டுபோக வழியறியாது கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவனைக் கட்டிலோடு நடுவில் இயேசுவின் முன்பாக இறக்கினார்.
லூக்கா 5 : 20 (RCTA)
அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, "அன்பனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
லூக்கா 5 : 21 (RCTA)
மறைநூல் அறிஞரும் பரிசேயரும், "கடவுளைத் தூஷித்துப்பேசும் இவர் யார்? கடவுள் ஒருவரேயன்றிப் பாவத்தை மன்னிக்க வல்லவர் யார்?" என்று எண்ணினர்.
லூக்கா 5 : 22 (RCTA)
அவர்களுடைய எண்ணங்களை அறிந்த இயேசு அவர்களிடம், " நீங்கள் உள்ளத்தில் எண்ணுவதென்ன ?
லூக்கா 5 : 23 (RCTA)
எது எளிது ? ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்பதா ? ' எழுந்து நட என்பதா ?" என்று கேட்டார்.
லூக்கா 5 : 24 (RCTA)
"மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"-- திமிர்வாதக்காரனை நோக்கி- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து, உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு, வீட்டிற்குப்போ" என்றார்.
லூக்கா 5 : 25 (RCTA)
உடனே அவன் அவர்கள்எதிரில் எழுந்து, தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு, கடவுளை மகிமைப் படுத்திக்கொண்டே வீடு சென்றான்.
லூக்கா 5 : 26 (RCTA)
அனைவரும் திகைப்புற்றுக் கடவுளை மகிமைப் படுத்தினர். அன்றியும் அச்சம் மேலிட்டவராய், "இன்று புதுமையானவற்றைக் கண்டோம்" என்றனர்.
லூக்கா 5 : 27 (RCTA)
அதன் பின் வெளியே சென்று, சுங்கத் துறையில் அமர்ந்திருந்த லேவி என்ற ஆயக்காரனைக் கண்டு, "என்னைப் பின் செல்" என்றார்.
லூக்கா 5 : 28 (RCTA)
அவர் எழுந்து, அனைத்தையும் விட்டு அவரைப் பின்சென்றார்.
லூக்கா 5 : 29 (RCTA)
லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரிய விருந்து செய்தார். ஆயக்காரரும் பிறரும் பெருங்கூட்டமாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தனர்.
லூக்கா 5 : 30 (RCTA)
பரிசேயரும் அவர்களைச் சார்ந்த மறைநூல் அறிஞரும் முணுமுணுத்து, அவருடைய சீடர்களிடம், "ஆயக்காரரோடும் பாவிகளோடும் நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்றனர்.
லூக்கா 5 : 31 (RCTA)
இயேசு அதற்கு, "மருத்துவன் நோயற்றவர்க்கன்று, நோயுற்றவர்க்கே தேவை.
லூக்கா 5 : 32 (RCTA)
நீதிமான்களை அன்று, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்" என்று மறுமொழி கூறினார்.
லூக்கா 5 : 33 (RCTA)
அவர்களோ, "அருளப்பரின் சீடர் அடிக்கடி நோன்பு இருந்து செபம் செய்கின்றனர். பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே" என்று அவரிடம் சொன்னார்கள்.
லூக்கா 5 : 34 (RCTA)
அதற்கு இயேசு, "மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?
லூக்கா 5 : 35 (RCTA)
மணமகன் அவர்களை விட்டுப்பிரியும் நாள் வரும், அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்" என்றார்.
லூக்கா 5 : 36 (RCTA)
மேலும் அவர்களுக்கு ஓர் உவமை கூறினார். அதாவது, "புதிய போர்வையிலே ஒரு துண்டைக் கிழித்துப் பழைய போர்வைக்கு ஒட்டுப்போடுவார் யாருமில்லை. அவ்வாறு போட்டால் புதியதும் கிழிபடும், அதிலிருந்து கிழித்த துண்டும் பழையதோடு பொருந்தாது.
லூக்கா 5 : 37 (RCTA)
புதுத் திராட்சை இரசத்தைப் பழஞ் சித்தைகளில் ஊற்றி வைப்பர் எவருமில்லை. வைத்தால், புது இரசம் சித்தைகளைக் கிழித்துச் சிந்திப்போவதுமல்லாமல், சித்தைகளும் பாழாகும்.
லூக்கா 5 : 38 (RCTA)
ஆனால், புதுத் திராட்சை இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைக்க வேண்டும்.
லூக்கா 5 : 39 (RCTA)
பழைய திராட்சை இரசத்தைக் குடித்தவன் புதியதை விரும்புவதில்லை. பழையதே சிறந்தது என்பான்" என்றார்.
❮
❯