லூக்கா 24 : 1 (RCTA)
வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் பெண்கள் தாங்கள் ஆயத்தப்படுத்தியிருந்த வாசனைப்பொருள்களை எடுத்துக்கொண்டு கல்லறைக்கு சென்றனர்.
லூக்கா 24 : 2 (RCTA)
கல்லறைவாயிலில் இருந்த கல் புரட்டியிருக்கக் கண்டனர்.
லூக்கா 24 : 3 (RCTA)
உள்ளே நுழைந்தபோது, அவர்கள் ஆண்டவராகிய இயேசுவின் உடலைக் காணவில்லை.
லூக்கா 24 : 4 (RCTA)
ஆதலால் மனம் கலங்கினர். அப்பொழுது, இதோ! மின்னொளி வீசும் ஆடையணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர்.
லூக்கா 24 : 5 (RCTA)
பெண்களோ அச்சங்கொண்டு, முகம் கவிழ்ந்து நின்றனர். தூதர்கள் அவர்களைப் பார்த்து, "உயிருள்ளவரை இறந்தோரிடையே தேடுவானேன்?
லூக்கா 24 : 6 (RCTA)
அவர் இங்கே இல்லை; உயிர்த்துவிட்டார்.
லூக்கா 24 : 7 (RCTA)
மனுமகன் பாவிகளிடம் கையளிக்கப்பட்டுச் சிலுவையில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவேண்டுமென்று, அவர் கலிலேயாவில் இருக்கும்போதே உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள்" என்றனர்.
லூக்கா 24 : 8 (RCTA)
அவர்களும் அவர் சொன்னதை நினைவுகூர்ந்தனர்.
லூக்கா 24 : 9 (RCTA)
கல்லறையை விட்டுத் திரும்பிவந்த பெண்கள் பதினொருவருக்கும், மற்றெல்லாருக்கும் இதெல்லாம் அறிவித்தனர்.
லூக்கா 24 : 10 (RCTA)
அப்பெண்கள்: மதலேன்மரியாளும் அருளம்மாளும் இயாகப்பரின் தாய் மரியாளும் ஆவர். அவர்களோடு சேர்த்து மற்றப் பெண்களும் இதை அப்போஸ்தலர்களுக்குக் கூறினர்.
லூக்கா 24 : 11 (RCTA)
பெண்கள் கூறியது வெறும் பிதற்றலாகத் தோன்றியதால் அவர்கள் நம்பவில்லை.
லூக்கா 24 : 12 (RCTA)
இராயப்பரோ எழுந்து கல்லறைக்கு ஓடினார். குனிந்து பார்க்கையில் துணிகள் மட்டும் கிடக்கக் கண்டார். நிகழ்ந்ததைக் குறித்து வியந்து கொண்டே வீடு திரும்பினார்.
லூக்கா 24 : 13 (RCTA)
அன்றே இதோ! அவர்களுள் இருவர் யெருசலேமிலிருந்து ஏழு கல் தொலைவிலிருந்த எம்மாவுஸ் என்ற ஊருக்குப் போய்க் கொண்டிருந்தனர்.
லூக்கா 24 : 14 (RCTA)
நடந்ததெல்லாம் பற்றித் தங்களுக்குள் பேசிக்கொண்டே சென்றனர்.
லூக்கா 24 : 15 (RCTA)
இப்படிப் பேசி உசாவுகையில், இயேசுவே அவர்களோடு சேர்ந்துகொண்டு வழிநடக்கலானார்.
லூக்கா 24 : 16 (RCTA)
ஆனால், அவரைக் கண்டுகொள்ளாதபடி அவர்களின் பார்வை தடைபட்டிருந்தது.
லூக்கா 24 : 17 (RCTA)
எதைப்பற்றி நீங்கள் உரையாடிக்கொண்டு செல்லுகிறீர்கள்?" என்று அவர் அவர்களைக் கேட்டார். அவர்களோ வாடிய முகத்தோடு நின்றனர்.
லூக்கா 24 : 18 (RCTA)
அவர்களுள் ஒருவரான கிலேயோப்பா என்பவர் அவருக்கு மறுமொழியாக, "யெருசலேமில் உள்ளவர்களுள் நீர் ஒருவர்தாம் இந்நாட்களிலே நடந்ததை அறியாதவர் போலும்!" என்றார்.
லூக்கா 24 : 19 (RCTA)
அதற்கு அவர், "என்ன நடந்தது?" என்று கேட்டார். அவர்களோ, "நாசரேத்தூர் இயேசுவைப்பற்றிய செய்திதான். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராயிருந்தார்.
லூக்கா 24 : 20 (RCTA)
தலைமைக்குருக்களும் தலைவர்களும் அவரை மரணதண்டனைக்கு உள்ளாகும்படி கையளித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.
லூக்கா 24 : 21 (RCTA)
இஸ்ராயேலுக்கு விடுதலை அளிப்பவர் அவரே என நாங்கள் நம்பியிருந்தோம். அதுமட்டுமன்று. இதெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள் ஆகின்றது.
லூக்கா 24 : 22 (RCTA)
மேலும், எங்களைச் சார்ந்த பெண்கள் சிலர் எங்களைத் திகைக்கச்செய்தனர். அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்று,
லூக்கா 24 : 23 (RCTA)
அவரது உடலைக் காணாது திரும்பிவந்து, வானதூதர்களைக் காட்சியில் கண்டதாகவும், இயேசு உயிரோடு இருக்கிறார் என்று அவர்கள் கூறினதாகவும் சொல்லுகிறார்கள்.
லூக்கா 24 : 24 (RCTA)
எங்கள் தோழருள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னபடியே இருக்கக் கண்டனர். அவரையோ காணவில்லை" என்றனர்.
லூக்கா 24 : 25 (RCTA)
அவர் அவர்களை நோக்கி, "அறிவில்லாதவர்களே, இறைவாக்கினர்கள் கூறியதெல்லாம் விசுவசிப்பதற்கு மந்த புத்தியுள்ளவர்களே, '
லூக்கா 24 : 26 (RCTA)
மெசியா இப்பாடுகளைப் பட்டன்றோ மகிமையடையவேண்டும் ?" என்று சொல்லி, '
லூக்கா 24 : 27 (RCTA)
மோயீசன்முதல் இறைவாக்கினர்கள் அனைவரும் எழுதிவைத்த வாக்குகளிலிருந்து தொடங்கி தம்மைக்குறித்த மறைநூல் பகுதிகளுக்கெல்லாம் விளக்கம் தந்தார்.
லூக்கா 24 : 28 (RCTA)
அவர்கள் தாங்கள் போகும் ஊரை நெருங்கினர். அவர் இன்னும் வழி நடக்க வேண்டியவர்போலக் காட்டிக்கொண்டார்.
லூக்கா 24 : 29 (RCTA)
அவர்களோ, "எங்களோடே தங்கும். மாலை நேரமாகிறது, பொழுதும் சாய்கிறது" என்று சொல்லி, அவரைக் கட்டாயப்படுத்தினர். அவரும் அவர்களோடு தங்குவதற்குச் சென்றார்.
லூக்கா 24 : 30 (RCTA)
அங்கு அவர்களுடன் பந்தியமர்ந்திருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, இறைபுகழ் கூறி, பிட்டு, அவர்களோடு அளித்தார்.
லூக்கா 24 : 31 (RCTA)
அப்போது, அவர்கள் கண்கள் திறக்கப்பட, அவரைக் கண்டுகொண்டனர். அவரோ அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.
லூக்கா 24 : 32 (RCTA)
அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, " வழியில் அவர் நம்மோடு உரையாடி மறைநூலைத் தெளிவாக்குகையில், நம் உள்ளம் உருகவில்லையா! " என்றனர்.
லூக்கா 24 : 33 (RCTA)
அந்நேரமே, எழுந்து யெருசலேமுக்குத் திரும்பிச்சென்று, பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் கூடியிருக்கக் கண்டனர்.
லூக்கா 24 : 34 (RCTA)
கூடியிருந்தவர்கள், "உண்மையாகவே ஆண்டவர் உயிர்த்தார், சீமோனுக்குக் காட்சி அளித்தார்" எனப் பேசிக்கொண்டிருந்தனர்.
லூக்கா 24 : 35 (RCTA)
அவ்விரு சீடர் வழியில் நடந்ததையும், அப்பத்தைப் பிட்கையில் அவரைக் கண்டுகொண்டதையும் அவர்களுக்கு விவரித்தனர்.
லூக்கா 24 : 36 (RCTA)
இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு, அவர்கள் நடுவே தோன்றி, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்.
லூக்கா 24 : 37 (RCTA)
அவர்கள் திடுக்கிட்டு, அச்சம்கொண்டு, ஏதோ ஆவியைக் காண்பதாக எண்ணினர்.
லூக்கா 24 : 38 (RCTA)
அப்போது அவர் அவர்களை நோக்கி, "ஏன் இந்தக் கலக்கம்? உங்கள் உள்ளத்தில் இத்தகைய எண்ணங்கள் எழுவானேன்?
லூக்கா 24 : 39 (RCTA)
என் கைகளையும் கால்களையும் பாருங்கள். நானேதான்; தொட்டுப்பாருங்கள். நீங்கள் என்னிடம் காணும் எலும்பும் தசையும் ஆவிக்குக் கிடையாது" என்றார்.
லூக்கா 24 : 40 (RCTA)
இப்படிச் சொன்ன பின்பு தம் கைகளையும் கால்கைளையும் அவர்களுக்குக் காட்டினார்.
லூக்கா 24 : 41 (RCTA)
அவர்களோ மகிழ்ச்சி மிகுதியால் இன்னும் நம்பாமல் வியந்துகொண்டிருக்கும்பொழுது, "உண்பதற்கு இங்கு ஏதாவது உங்களிடம் உண்டா?" என்றார்.
லூக்கா 24 : 42 (RCTA)
பொரித்த மீன் துண்டொன்று அவருக்குக் கொடுத்தனர்.
லூக்கா 24 : 43 (RCTA)
அதை எடுத்து அவர்கள் முன் சாப்பிட்டார்.
லூக்கா 24 : 44 (RCTA)
அவர் அவர்களைப் பார்த்து, "மோயீசனின் சட்டத்திலும் இறைவாக்குளிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியுள்ளதெல்லாம் நிறைவேண்டும் என்று, நான் உங்களோடு இருந்தபோதே சொன்னேனே; இப்போது நடப்பது அதுதான்" என்றார்.
லூக்கா 24 : 45 (RCTA)
மறைநூல் அவர்களுக்கு விளங்கும்படி அவர்களுடைய மனக்கண்ணைத் திறந்தார்.
லூக்கா 24 : 46 (RCTA)
பின்னர், அவர்களை நோக்கி, "மறைநூலில் எழுதியுள்ளது இதுதான்: மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்;
லூக்கா 24 : 47 (RCTA)
பாவமன்னிப்படைய மனந்திரும்ப வேண்டுமென்று யெருசலேமில் தொடங்கி, புறவினத்தார் அனைவருக்கும் அவர்பெயரால் அறிவிக்கப்படும்.
லூக்கா 24 : 48 (RCTA)
இவற்றிற்கெல்லாம் நீங்கள் சாட்சி.
லூக்கா 24 : 49 (RCTA)
இதோ! என் தந்தை வாக்களித்ததை நான் உங்களுக்கு அனுப்பப்போகிறேன். உன்னைதத்திலிருந்து வரும் வல்லமையை நீங்கள் அணிந்துகொள்ளும்வரை நகரிலேயே தங்கி இருங்கள்" என்றார்.
லூக்கா 24 : 50 (RCTA)
பெத்தானியாவை நோக்கி அவர்களைக் கூட்டிச்சென்று, கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசிகூறினார்.
லூக்கா 24 : 51 (RCTA)
அப்படி ஆசி கூறுகையில் அவர்களை விட்டுப் பிரிந்து, வானகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பெற்றார்.
லூக்கா 24 : 52 (RCTA)
அவர்கள் தெண்டனிட்டு வணங்கிப் பொருமகிழ்ச்சியுடன் யெருசலேம் திரும்பினர்.
லூக்கா 24 : 53 (RCTA)
கோயிலில் கடவுளை இடைவிடாமல் போற்றிப் புகழ்ந்துகொண்டிருந்தனர்.
❮
❯