லூக்கா 18 : 1 (RCTA)
மனந்தளராமல் எப்பொழுதும் செபிக்க வேண்டுமென்பதற்கு அவர் ஓர் உவமை சொன்னார்:
லூக்கா 18 : 2 (RCTA)
" ஒரு நகரில் நடுவன் ஒருவன் இருந்தான். அவன் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை, மனிதனையும் மதிப்பதில்லை.
லூக்கா 18 : 3 (RCTA)
அந்நகரில் இருந்த கைம்பெண் ஒருத்தி, ' என் எதிராளியைக் கண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று அவனிடம் கேட்டுக்கொண்டே வந்தாள்.
லூக்கா 18 : 4 (RCTA)
அவனுக்கோ வெகுகாலம்வரை மனம் வரவில்லை. பின்னர் அவன், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மனிதனை மதிப்பதுமில்லை;
லூக்கா 18 : 5 (RCTA)
என்றாலும், இக்கைம்பெண் என்னைத் தொந்தரைசெய்வதால் நான் அவளுக்கு நீதி வழங்குவேன். இல்லாவிட்டால், எப்போதும் என் உயிரை வாங்கிக் கொண்டே யிருப்பாள்' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்."
லூக்கா 18 : 6 (RCTA)
அதன்பின் ஆண்டவர், "அந்த நீதியற்ற நடுவன் சொன்னதைப் பாருங்கள்.
லூக்கா 18 : 7 (RCTA)
தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் நீதிவழங்காமல் இருப்பாரோ ? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரோ?
லூக்கா 18 : 8 (RCTA)
விரைவிலேயே அவர்களுக்கு நீதி வழங்குவார் என உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ ?" என்றார்.
லூக்கா 18 : 9 (RCTA)
தம்மை நீதிமான்களென நம்பிப் பிறரை புறக்கணிக்கும் சிலரை நோக்கி, அவர் இந்த உவமையைச் சொன்னார்:
லூக்கா 18 : 10 (RCTA)
" இருவர் செபம் செய்யக் கோயிலுக்குச் சென்றனர். ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
லூக்கா 18 : 11 (RCTA)
பரிசேயன் நின்றுகொண்டு, 'கடவுளே, கள்வர், அநீதர், விபசாரர் முதலான மற்ற மனிதரைப் போலவோ, இந்த ஆயக்காரனைப்போலவோ நான் இராததுபற்றி உமக்கு நன்றிசெலுத்துகிறேன்.
லூக்கா 18 : 12 (RCTA)
வாரத்திற்கு இருமுறை நோன்பிருக்கிறேன். என் வருவாயிலெல்லாம் பத்திலொரு பகுதி கொடுக்கிறேன்' என்று தனக்குள்ளே செபித்தான்.
லூக்கா 18 : 13 (RCTA)
ஆயக்காரனோ தொலைவில் நின்று, வானத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாமல், 'கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்" என்று சொல்லி மார்பில் அறைந்து கொண்டான்.
லூக்கா 18 : 14 (RCTA)
இறைவனுக்கு ஏற்புடையவனாகி வீடுதிரும்பியவன் இவனே, அவனல்லன் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்."
லூக்கா 18 : 15 (RCTA)
கைக்குழந்தைகளை அவர் தொட வேண்டுமென்று அவர்களையும் அவரிடம் கொண்டுவந்தனர். இதைக்கண்ட அவருடைய சீடர், அவர்களை அதட்டினர்.
லூக்கா 18 : 16 (RCTA)
இயேசுவோ அவர்களை அழைத்து, "குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்; தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே.
லூக்கா 18 : 17 (RCTA)
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசைக் குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது" என்றார்.
லூக்கா 18 : 18 (RCTA)
தலைவன் ஒருவன், "நல்ல போதகரே, என்ன செய்தால் எனக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்?" எனக் கேட்டான்.
லூக்கா 18 : 19 (RCTA)
அதற்கு இயேசு, "என்னை நல்லவர் என்பானேன்? கடவுள் ஒருவரன்றி நல்லவர் எவருமில்லை.
லூக்கா 18 : 20 (RCTA)
கட்டளைகள் உனக்குத் தெரியுமே: விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச்சான்று சொல்லாதே, தாய் தந்தையரைப் போற்று" என்றார்.
லூக்கா 18 : 21 (RCTA)
அதற்கு அவன், "என் சிறுவமுதல் இவையெல்லாம் கடைப்பிடித்து வருகிறேன்" என்றான்.
லூக்கா 18 : 22 (RCTA)
இதைக் கேட்டு இயேசு, "இன்னும் ஒன்று உனக்குக் குறைவாயிருக்கிறது. உனக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குப் பகிர்ந்துகொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்பு வந்து என்னைப் பின்செல்" என்றார்.
லூக்கா 18 : 23 (RCTA)
அவன் அதைக் கேட்டு வருத்தப்பட்டான். ஏனெனில், அவன் பெரிய பணக்காரன்.
லூக்கா 18 : 24 (RCTA)
இயேசு அவனைப் பார்த்து, "கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது!
லூக்கா 18 : 25 (RCTA)
ஏனெனில், பணக்காரன் கடவுளின் அரசில் நுழைவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.
லூக்கா 18 : 26 (RCTA)
அதைக் கேட்டவர்கள், "பின் யார்தாம் மீட்புப் பெறமுடியும் ?" என,
லூக்கா 18 : 27 (RCTA)
அவர் "மனிதரால் கூடாதது கடவுளால் கூடும் " என்றார்.
லூக்கா 18 : 28 (RCTA)
அப்போது இராயப்பர், "இதோ! எங்கள் உடைமைகளை விட்டுவிட்டு நாங்கள் உம்மைப் பின்சென்றோமே" என்று சொல்ல,
லூக்கா 18 : 29 (RCTA)
அவர் அவர்களை நோக்கி, "தன் வீட்டையோ மனைவியையோ சகோதரரையோ பெற்றோரையோ மக்களையோ கடவுளின் அரசின் பொருட்டுத் துறந்துவிடும் எவனும்
லூக்கா 18 : 30 (RCTA)
இம்மையில் அதைவிட மிகுதியும், மறுமையில் முடிவில்லா வாழ்வும் பெறாமல் போகான் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்றார்.
லூக்கா 18 : 31 (RCTA)
இயேசு பன்னிருவரையும் அழைத்து அவர்களிடம், "இதோ! யெருசலேமுக்குப் போகிறோம். மனுமகனைக்குறித்து இறைவாக்கினர்கள் எழுதியதெல்லாம் நிறைவேறும்.
லூக்கா 18 : 32 (RCTA)
புற இனத்தாரிடம் கையளிக்கப்பட்டு, ஏளனத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாகித் துப்பப்படுவார்.
லூக்கா 18 : 33 (RCTA)
அவர்கள் அவரைச் சாட்டையால் அடித்த பின் கொல்லுவார்கள். அவரோ மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" என்றார்.
லூக்கா 18 : 34 (RCTA)
இவற்றில் எதுவும் அவர்களுக்கு விளங்கவில்லை. 'அவர் சொன்னதின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது. அவர் கூறியதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
லூக்கா 18 : 35 (RCTA)
அவர் யெரிக்கோவை நெருங்கியபொழுது குருடன் ஒருவன் வழியோரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
லூக்கா 18 : 36 (RCTA)
திரளான மக்கள் நடந்து செல்வதைக்கேட்டு, அது என்ன வென்று வினவினான்.
லூக்கா 18 : 37 (RCTA)
நாசரேத்தூர் இயேசு அவ்வழியே செல்வதாக அவனுக்கு அறிவித்தனர்.
லூக்கா 18 : 38 (RCTA)
அவன், "இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்" என்று கத்தினான்.
லூக்கா 18 : 39 (RCTA)
முன்னே சென்றவர்கள், பேசாதிருக்கும்படி அவனை அதட்டினர். அவனோ, "தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்" என்று இன்னும் அதிகமாய்க் கூவினான்.
லூக்கா 18 : 40 (RCTA)
இயேசு நின்று, அவனைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
லூக்கா 18 : 41 (RCTA)
அவன் நெருங்கி வந்ததும், "உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று அவனைக் கேட்க, அவன், "ஆண்டவரே, நான் பார்வை பெறவேண்டும்" என்றான்.
லூக்கா 18 : 42 (RCTA)
இயேசு அவனை நோக்கி, "பார்வை பெறுக; உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது" என்றார்.
லூக்கா 18 : 43 (RCTA)
அவன் உடனே பார்வை பெற்று, கடவுளை மகிமைப் படுத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தான். மக்கள் அனைவரும் இதைக்கண்டு கடவுளைப் புகழ்ந்தேத்தினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43

BG:

Opacity:

Color:


Size:


Font: