லூக்கா 16 : 1 (RCTA)
மேலும் அவர் தம் சீடர்களுக்குச் சொன்னதாவது: "பணக்காரன் ஒருவனிடம் கண்காணிப்பாளன் ஒருவன் இருந்தான். தன் தலைவனின் உடைமைகளை விரயம் செய்ததாக அவன்மீது குற்றம் சாட்டப்பட்டது
லூக்கா 16 : 2 (RCTA)
தலைவன் அவனை அழைத்து, 'என்ன இது? நான் உன்னைப்பற்றி இப்படியெல்லாம் கேள்விப்படுகிறேன். உன் கண்காணிப்புக் கணக்கை ஒப்புவி. நீ இனி என் கண்காணிப்பாளனாய் இருக்க முடியாது' என்றான்.
லூக்கா 16 : 3 (RCTA)
அப்போது கண்காணிப்பாளன், 'இனி என்ன செய்வது? கண்காணிப்பினின்று என்னைத் தலைவன் நீக்கிவிடப்போகிறானே. மண்வெட்டவோ எனக்கு வலிமையில்லை; பிச்சையெடுக்கவோ வெட்கமாய் இருக்கிறது.
லூக்கா 16 : 4 (RCTA)
கண்காணிப்பினின்று நான் தள்ளப்படும்போது, பிறர் என்னைத் தங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளும்படி என்னசெய்யவேண்டுமென்பது எனக்குத் தெரியும்' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
லூக்கா 16 : 5 (RCTA)
" பின்பு, அவன் தன் தலைவனிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக அழைத்தான். ஒருவனைப் பார்த்து, 'என் தலைவனிடம் நீ எவ்வளவு கடன்பட்டிருக்கிறாய்?' என்று கேட்க,
லூக்கா 16 : 6 (RCTA)
அவன், 'நூறு குடம் எண்ணெய்' என்றான். அதற்கு அவன், 'இதோ! உன் கடன்பத்திரம், உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுது' என்றான்.
லூக்கா 16 : 7 (RCTA)
பின்னர், மற்றொருவனிடம், 'நீ எவ்வளவு கடன்பட்டிருக்கிறாய்?' என, அவன், 'நூறு கலம் கோதுமை' என்றான். அதற்கு அவன், 'இதோ! உன் கடன்பத்திரம், எண்பது என எழுது' என்றான்.
லூக்கா 16 : 8 (RCTA)
"அந்த அநீத கண்காணிப்பாளன் விவேகத்தோடு நடந்துகொண்டதற்காகத் தலைவன் அவனை மெச்சிக்கொண்டான். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தம்போன்றவர்களிடத்தில் மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்.
லூக்கா 16 : 9 (RCTA)
"ஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது உங்களைக் கைவிடும்பொழுது, இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.
லூக்கா 16 : 10 (RCTA)
மிகச் சிறிய காரியத்தில் நம்பத்தக்கவன், பெரியதிலும் நம்பத்தக்கவனே. மிகச் சிறியதில் நீதியற்றவன், பெரியதிலும் நீதியற்றவனே.
லூக்கா 16 : 11 (RCTA)
அநீத செல்வத்தின்மட்டில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய் இருந்தால், உங்களை நம்பி உண்மைப்பொருளை ஒப்படைப்பவர் யார் ?
லூக்கா 16 : 12 (RCTA)
உங்களுக்குப் புறம்பான பொருட்கள் மட்டில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய் இருந்தால், உங்களுடையதை உங்களுக்கு அளிப்பவர் யார்?
லூக்கா 16 : 13 (RCTA)
எந்த வேலைக்காரனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனிடம் அன்பாயிருப்பான். அல்லது, ஒருவனை சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது.
லூக்கா 16 : 14 (RCTA)
பொருளாசை மிக்க பரிசேயர் இதெல்லாம் கேட்டு அவரை ஏளனம் செய்தனர்.
லூக்கா 16 : 15 (RCTA)
அவர்களுக்கு அவர் கூறியதாவது: "மனிதர்முன் நீதிமான்களாகக் காட்டிக்கொள்ளுகிறவர்கள் நீங்கள்தாம். கடவுளோ உங்கள் உள்ளங்களை அறிவார். மனிதர்களுக்கு மேன்மையானது கடவுளுக்கு அருவருப்பானது.
லூக்கா 16 : 16 (RCTA)
"திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் அருளப்பர் காலம்வரைதான். அதுமுதல் கடவுளின் அரசைப்பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. அதில் ஒவ்வொருவனும் பலவந்தமாய் நுழைகிறான்.
லூக்கா 16 : 17 (RCTA)
"திருச்சட்டத்தின் ஒரே ஒரு புள்ளி விட்டுப்போவதினும் விண்ணும் மண்ணும் மறைவது எளிதாகும்.
லூக்கா 16 : 18 (RCTA)
"தன் மனைவியை விலக்கிவிட்டு, வேறு ஒருத்தியை மணப்பவன் விபசாரம் செய்கிறான் தன் கணவனால் விலக்கப்பட்டவனை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.
லூக்கா 16 : 19 (RCTA)
"பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் விலையுயர்ந்த ஆடையும், மெல்லிய உடையும் அணிந்து நாள்தோறும் ஆடம்பரமாய் விருந்தாடுவான்.
லூக்கா 16 : 20 (RCTA)
அவனுடைய வாசலருகே இலாசர் என்னும் ஏழை ஒருவன் கிடந்தான்; அவன் உடலெல்லாம் ஒரே புண்ணாயிருந்தது
லூக்கா 16 : 21 (RCTA)
அவன் அப்பணக்காரனின் பந்தியில் சிந்தினவற்றைக்கொண்டு பசியாற்ற விரும்பினான். நாய்கள் கூட வந்து அவனுடைய புண்களை நக்கும்.
லூக்கா 16 : 22 (RCTA)
இந்த ஏழை இறந்தான்; வானதூதர் அவனைத் தூக்கிச்சென்று ஆபிரகாமின் அருகிலேயே அமர்த்தினர். பணக்காரனும் இறந்தான்; புதைக்கப்பட்டான்.
லூக்கா 16 : 23 (RCTA)
" அவன் பாதாளத்திலே வேதனைப்படுகையில் ஏறெடுத்துப் பார்த்தான். தொலைவில் ஆபிரகாமையும், அவர் அருகிலேயே அமர்ந்திருந்த இலாசரையும் கண்டான்.
லூக்கா 16 : 24 (RCTA)
' தந்தை ஆபிரகாமே, என்மீது இரங்கி, இலாசர் தன்விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து, என் நாவைக் குளிரச்செய்யும்படி அவனை அனுப்பும். நான் இந்நெருப்பில் வேதனைப்படுகிறேன்' என்று கத்தினான்.
லூக்கா 16 : 25 (RCTA)
ஆபிரகாம் அவனை நோக்கி, 'மகனே, வாழ்நாளில் உனக்கு இன்பசுகமே கிடைத்தது, இலசாருக்குத் துன்ப துயரமே கிடைத்தது. இதை நினைத்துப்பார். ஆனால், இப்பொழுது அவன் இங்கே ஆறுதலடைகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
லூக்கா 16 : 26 (RCTA)
அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பாதாளம் ஒன்று அமைந்துள்ளது. எனவே, இங்கிருந்து உங்களிடம் கடந்துவர ஒருவன் விரும்பினாலும் முடியாது; அங்கிருந்து எங்களிடம் தாண்டிவருவதும் கிடையாது ' என்றார்.
லூக்கா 16 : 27 (RCTA)
அதற்கு அவன், 'தந்தையே, அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டுகிறேன்.
லூக்கா 16 : 28 (RCTA)
எனக்குச் சகோதரர் ஐவர் இருக்கின்றனர். அவர்களும் இந்த வேதனைக் களத்திற்கு வராதபடி அவன் எச்சரிக்கட்டும்' என்றான்.
லூக்கா 16 : 29 (RCTA)
ஆபிரகாமோ, 'அவர்களுக்கு மோயீசனும் இறைவாக்கினர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார்.
லூக்கா 16 : 30 (RCTA)
அவனோ, 'அப்படியன்று, தந்தை ஆபிரகாமே, இறந்தோரிடமிருந்து யாராவது அவர்களிடம் சென்றால், மனந்திரும்புவர்' என்றான்.
லூக்கா 16 : 31 (RCTA)
அதற்கு அவர், 'மோயீசனுக்கும் இறைவாக்கினர்களுக்கும் செவிசாய்க்காவிடில் இறந்தோரிடமிருந்து ஒருவன் உயிர்த்தெழுந்தாலும் நம்பமாட்டார்கள் ' என்றார்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

BG:

Opacity:

Color:


Size:


Font: