லூக்கா 1 : 1 (RCTA)
மாண்புமிக்க தெயோப்பிலுவே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளைத் தொடக்கமுதல் கண்கூடாய்க் கண்டவர்கள் தேவவார்த்தையின் பணியாளராகி நம்மிடம் ஒப்படைத்துள்ளனர்.
லூக்கா 1 : 2 (RCTA)
ஒப்படைத்தவாறே அவற்றைப் பலர் நிரல்பட எழுத முயன்றுள்ளனர்.
லூக்கா 1 : 3 (RCTA)
அப்படியே நானும் யாவற்றையும் நுணுகி ஆய்ந்தறிந்து,
லூக்கா 1 : 4 (RCTA)
நீர் கேட்டு அறிந்தது உறுதி எனத் தெளியும்பொருட்டு முறையாக வரைவது நலமெனக் கண்டேன்.
லூக்கா 1 : 5 (RCTA)
ஏரோது, யூதேயா நாட்டு அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சார்ந்த சக்கரியாஸ் என்னும் குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி, ஆரோன் குலத்தவள்; பெயர் எலிசபெத்து.
லூக்கா 1 : 6 (RCTA)
இவ்விருவரும் ஆண்டவருடைய கற்பனைகள் முறைமைகளின்படி குறைகூற இடமில்லாமல் கடவுள் முன்னிலையில் நீதிமான்களாய் நடந்துவந்தனர்.
லூக்கா 1 : 7 (RCTA)
எலிசபெத்து மலடியாய் இருந்தமையால், அவர்களுக்கு மகப்பேறு இல்லை. மேலும், இருவரும் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தனர்.
லூக்கா 1 : 8 (RCTA)
இவ்வாறு இருக்க, தம் பிரிவின் முறை வந்தபோது சக்கரியாஸ் கடவுள் முன்னிலையில் குருத்துவப் பணிசெய்து வருகையில்,
லூக்கா 1 : 9 (RCTA)
இறைவழிபாட்டு முறைமைப்படி ஆலயத்துள் சென்று தூபங்காட்ட அவருக்குச் சீட்டுவிழுந்தது.
லூக்கா 1 : 10 (RCTA)
தூபங்காட்டுகிற வேளையிலே, மக்களெல்லாரும் கூட்டமாய் வெளியே செபித்துக்கொண்டிருந்தனர்.
லூக்கா 1 : 11 (RCTA)
அப்பொழுது ஆண்டவருடைய தூதர் தூபப்பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவண்ணம் அவருக்குத் தோன்றினார்.
லூக்கா 1 : 12 (RCTA)
அவரைக் கண்டு சக்கரியாஸ் கலங்கினார்; அவரை அச்சம் ஆட்கொண்டது.
லூக்கா 1 : 13 (RCTA)
வானதூதர் அவரிடம், " சக்கரியாசே, அஞ்சாதே, உன் வேண்டுகோள் ஏற்கப்பெற்றது. உன் மனைவி எலிசபெத்து உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவருக்கு ' அருளப்பர் ' எனப் பெயரிடுவாய்.
லூக்கா 1 : 14 (RCTA)
உனக்கு அகமகிழ்வும் அக்களிப்பும் உண்டாகும். அக்குழந்தையின் பிறப்பால் பலரும் மனமகிழ்வர்.
லூக்கா 1 : 15 (RCTA)
அவர் ஆண்டவர்முன்னிலையில் மேலானவராய் இருப்பார்; திராட்சை இரசமோ மதுவோ குடிக்க மாட்டார். தாய் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெறுவார்.
லூக்கா 1 : 16 (RCTA)
அவர் இஸ்ராயேலர் பலரை அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்பக்கம் திருப்புவார்.
லூக்கா 1 : 17 (RCTA)
தந்தையரையும் மக்களையும் ஒப்புரவாக்குவார். இறைவனுக்கு அடங்காதவர்களை நீதிமான்களின் மனநிலைக்குத் திருப்புவார். இவ்வாறு, ஆண்டவருக்கு ஏற்ற மக்களை ஆயத்தப்படுத்துவார். எலியாசை ஆட்கொண்டிருந்த தேவ ஆவியும் வல்லமையும் உடையவராய் அவர் ஆண்டவருக்குமுன்னே செல்வார் " என்றார்.
லூக்கா 1 : 18 (RCTA)
சக்கரியாஸ் தூதரிடம், " இவையாவும் நிகழும் என எனக்கு எப்படித் தெரியும் ? நானோ வயதானவன், என் மனைவியும் வயதுமுதிர்ந்தவள் " என்றார்.
லூக்கா 1 : 19 (RCTA)
அதற்குத் தூதர், " நான் கடவுளின் திருமுன் நிற்கும் கபிரியேல். உன்னிடம் பேசவும், இந்நற்செய்தியை உனக்கு அறிவிக்கவும் அனுப்பப்பெற்றேன்.
லூக்கா 1 : 20 (RCTA)
இதோ! இவை நடைபெறும் நாள்வரை நீ பேசாமலும் பேச முடியாமலும் இருப்பாய். ஏனெனில், உரிய காலத்தில் நிறைவேறும் என் சொல்லை நீ நம்பவில்லை " என்றார்.
லூக்கா 1 : 21 (RCTA)
மக்கள் சக்கரியாசுக்காகக் காத்திருந்தனர். ஆலயத்தில் அவர் காலாந்தாழ்த்தியது பற்றி வியப்படைந்தனர்.
லூக்கா 1 : 22 (RCTA)
அவர் வெளியே வந்தபொழுது, அவர்களிடம் பேச முடியவில்லை. ஆலயத்தில் ஏதோ காட்சி கண்டிருக்கவேண்டும் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவர் அவர்களுக்குச் சைகைகள் காட்டி நின்றார். அது முதல் ஊமையாகவே இருந்தார்.
லூக்கா 1 : 23 (RCTA)
தம்முடைய திருப்பணி நாட்கள் கடந்ததும் அவர் வீடு திரும்பினார்.
லூக்கா 1 : 24 (RCTA)
அடுத்து அவர் மனைவி எலிசபெத்து கருத்தரித்து ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்து,
லூக்கா 1 : 25 (RCTA)
" மக்களுக்குள் எனக்கிருந்த இழிவைப்போக்க ஆண்டவர் என்னைக் கடைக்கண் நோக்கி இந்நாளில் இவ்வாறு செய்தருளினார் " என்றாள்.
லூக்கா 1 : 26 (RCTA)
ஆறாம் மாதத்திலே, கபிரியேல் தூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்.
லூக்கா 1 : 27 (RCTA)
அவள் தாவீது குலத்தவராகிய சூசை என்பருக்கு மண ஒப்பந்தமானவள். அவள் பெயர் மரியாள்.
லூக்கா 1 : 28 (RCTA)
தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார்.
லூக்கா 1 : 29 (RCTA)
இவ்வார்த்தைகளை அவள் கேட்டுக் கலங்கி, இவ்வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.
லூக்கா 1 : 30 (RCTA)
அப்போது வானதூதர் அவளைப் பார்த்து, " மரியே, அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர்.
லூக்கா 1 : 31 (RCTA)
இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
லூக்கா 1 : 32 (RCTA)
அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
லூக்கா 1 : 33 (RCTA)
அவர் யாக்கோபின் குலத்தின்மீது என்றென்றும் அரசாள்வார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.
லூக்கா 1 : 34 (RCTA)
மரியாள் தூதரிடம், "இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே" என்றாள்.
லூக்கா 1 : 35 (RCTA)
அதற்கு வானதூதர், "பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும்.
லூக்கா 1 : 36 (RCTA)
இதோ! உம் உறவினளான எலிசபெத்தும் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறாள். மலடி எனப்படும் அவளுக்கு இது ஆறாம் மாதம்.
லூக்கா 1 : 37 (RCTA)
ஏனெனில், கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" என்றார்.
லூக்கா 1 : 38 (RCTA)
மரியாளோ, "இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்றாள். என்றதும் வானதூதர் அவளிடமிருந்து அகன்றார்.
லூக்கா 1 : 39 (RCTA)
அந்நாட்களில், மரியாள் புறப்பட்டு யூதா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்று,
லூக்கா 1 : 40 (RCTA)
சக்கரியாசின் வீட்டிற்கு வந்து எலிசபெத்தை வாழ்த்தினாள்.
லூக்கா 1 : 41 (RCTA)
மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டவுடனே, அவள் வயிற்றினுள்ளே குழந்தை துள்ளியது.
லூக்கா 1 : 42 (RCTA)
எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே.
லூக்கா 1 : 43 (RCTA)
என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி?
லூக்கா 1 : 44 (RCTA)
உமது வாழ்த்து என் காதில் ஒலித்ததும், என் வயிற்றினுள்ளே குழந்தை அக்களிப்பால் துள்ளியது.
லூக்கா 1 : 45 (RCTA)
ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசுவசித்தவள் பேறுபெற்றவளே" என்று உரக்கக் கூவினாள்.
லூக்கா 1 : 46 (RCTA)
அப்போது மரியாள் உரைத்ததாவது: "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது.
லூக்கா 1 : 47 (RCTA)
என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களிகூருகின்றது.
லூக்கா 1 : 48 (RCTA)
ஏனெனில், தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார். இதோ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே.
லூக்கா 1 : 49 (RCTA)
ஏனெனில், வல்லமை மிக்கவர் எனக்கு அரும்பெரும் செயல் பல புரிந்தார். அவர்தம் பெயர் புனிதமாமே.
லூக்கா 1 : 50 (RCTA)
அவர்தம் இரக்கம் அவரை அஞ்சுவோர்க்குத் தலைமுறை தலைமுறையாய் உள்ளதாமே.
லூக்கா 1 : 51 (RCTA)
அவர் தமது கைவன்மையைக் காட்டினார், நெஞ்சிலே செருக்குற்றவர்களைச் சிதறடித்தார்.
லூக்கா 1 : 52 (RCTA)
வலியோரை அரியணையினின்று அகற்றினார், தாழ்ந்தோரை உயர்த்தினார்.
லூக்கா 1 : 53 (RCTA)
பசித்தோரை நலன்களால் நிரப்பினார், செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார்.
லூக்கா 1 : 54 (RCTA)
நம் முன்னோருக்கு அவர் சொன்னது போலவே ஆபிரகாமுக்கும் அவர்தம் வழிவந்தோர்க்கும் என்றென்றும் இரக்கம்காட்ட நினைவுகூர்ந்து
லூக்கா 1 : 55 (RCTA)
தம் அடியானாகிய இஸ்ராயேலை ஆதரித்தார்."
லூக்கா 1 : 56 (RCTA)
மரியாள் ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்தபின்பு வீடுதிரும்பினாள்.
லூக்கா 1 : 57 (RCTA)
எலிசபெத்துக்குப் பேறுகாலம் வந்தது. ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
லூக்கா 1 : 58 (RCTA)
அவளுக்கு ஆண்டவர் மிகுந்த இரக்கம் காட்டியதைக் கேள்விப்பட்டு அயலாரும் உறவினரும் அவளோடு மகிழ்ந்தனர்.
லூக்கா 1 : 59 (RCTA)
எட்டாம் நாள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்து, சக்கரியாஸ் என்று அவன் தந்தையின் பெயரையே அவனுக்கு இட விரும்பினர்.
லூக்கா 1 : 60 (RCTA)
ஆனால், அவன்தாய் மறுத்து, "அப்படியன்று, அருளப்பன் என்று அவனை அழைக்கவேண்டும்" எனக் கூறினாள்.
லூக்கா 1 : 61 (RCTA)
அதற்கு அவர்கள், "உன் உறவினருள் இப்பெயர் கொண்டவர் ஒருவரும் இல்லையே" என்று சொல்லி,
லூக்கா 1 : 62 (RCTA)
குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறீர்?" என்று தந்தையிடம் சைகை காட்டிக் கேட்டனர்.
லூக்கா 1 : 63 (RCTA)
அவர் எழுது பலகையொன்றைக் கொண்டுவரச் சொல்லி, "இவன் பெயர் அருளப்பன்" என்று எழுதினார்.
லூக்கா 1 : 64 (RCTA)
அனைவரும் வியப்படைந்தனர். அந்நேரமே அவரது வாய் திறக்க, நா கட்டவிழ, பேசத்தொடங்கி, கடவுளைப் போற்றினார்.
லூக்கா 1 : 65 (RCTA)
அயலார் அனைவரையும் அச்சம் ஆட்கொண்டது. இச்செய்தியெல்லாம் யூதேயா மலை நாடெங்கும் பரவலாயிற்று.
லூக்கா 1 : 66 (RCTA)
கேள்விப்பட்டவர்கள் யாவரும் அதை உள்ளத்தில் பதித்து, "இக்குழந்தை எத்தகையவன் ஆவானோ?" என்றனர். உண்மையில் ஆண்டவருடைய அருட்கரம் அவனோடு இருந்தது.
லூக்கா 1 : 67 (RCTA)
அவன் தந்தை சக்கரியாஸ் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று உரைத்த இறைவாக்காவது:
லூக்கா 1 : 68 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் போற்றி! ஏனெனில், தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
லூக்கா 1 : 69 (RCTA)
தொன்றுதொட்டு வந்த தம் பரிசுத்த இறைவாக்கினர்களின் வாயினால் அவர் மொழிந்தது போலவே,
லூக்கா 1 : 70 (RCTA)
தம் அடியானாகிய தாவீதின் குலத்திலே மீட்கும் வல்லமை எழச் செய்தருளினார்.
லூக்கா 1 : 71 (RCTA)
இவ்வாறு நம் பகைவரிடமிருந்தும், நம்மை வெறுப்பவர் அனைவரின் கையிலிருந்தும் மீட்டருளினார்.
லூக்கா 1 : 72 (RCTA)
நம் முன்னோர்க்கு இரக்கங்காட்டி, நம் பகைவரின் வாயினின்று விடுதலை பெற்று,
லூக்கா 1 : 73 (RCTA)
"அச்சமின்றி நம் வாழ்நாளெல்லாம் அவர் முன்னிலையில், புனிதத்தோடும் நீதியோடும் அவருக்குப் பணிபுரிய, "
லூக்கா 1 : 74 (RCTA)
தாம் வழிவகுப்பதாக அவர் நம் தந்தையாம் ஆபிரகாமுக்கு அளித்த உறுதிமொழியையும்,
லூக்கா 1 : 75 (RCTA)
தமது பரிசுத்த உடன்படிக்கையையும் நினைவுகூர்ந்தருளினார்.
லூக்கா 1 : 76 (RCTA)
நீயோ பாலனே, உன்னதரின் வாக்குரைப்பவன் எனப்படுவாய்.
லூக்கா 1 : 77 (RCTA)
பாவமன்னிப்பில் உளதாகிய மீட்பை அவர் தம் மக்களுக்கு அறிவித்து, ஆண்டவருடைய வழிகளை அமைக்க அவர்முன்னே செல்வாய்.
லூக்கா 1 : 78 (RCTA)
இருளிலும், இறப்பின் நிழலிலும் இருப்போர்க்கு ஒளி காட்டவும், அமைதிப்பாதையில் நம் காலடிகளைச் செலுத்தவும்,
லூக்கா 1 : 79 (RCTA)
நம் கடவுளின் இரக்கப் பெருக்கத்தால், வானினின்று இளஞாயிறு நம்பால் எழுந்து வரும்".
லூக்கா 1 : 80 (RCTA)
பாலனோ, ஆன்ம வலிமையோடு வளர்ந்துவந்தார். இஸ்ராயேலுக்கு வெளிப்படும்வரையிலும் பாலைவனத்தில் மறைந்து வாழ்ந்தார்.
❮
❯