லேவியராகமம் 17 : 1 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 17 : 2 (RCTA)
ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும் நீ ஆண்டவருடைய கட்டளைப்படி சொல்ல வேண்டியதாவது:
லேவியராகமம் 17 : 3 (RCTA)
இஸ்ராயேல் குடும்பத்தாரில் எவனேனும், பாளையத்திற்குள்ளாவது பாளையத்திற்கு வெளியேயாவது, மாட்டையோ, செம்மறியாட்டையோ, வெள்ளாட்டையோ கொன்று,
லேவியராகமம் 17 : 4 (RCTA)
அவற்றைச் காட்சியக் கூடார வாயிலுக்கு முன்பாக ஆண்டவருக்குச் செலுத்தும்படி கொண்டு வராதிருந்தால், அது அவனுக்கு இரத்தப் பலியாக இருக்கும். அந்த மனிதன் இரத்தம் சிந்திக் கொலை செய்தவனைப் போலத்தன் இனத்தினின்று விலக்குண்டு போகக் கடவான்.
லேவியராகமம் 17 : 5 (RCTA)
ஆகையால், இஸ்ராயேல் மக்கள் எந்தப் பலி மிருகத்தையும் வெளியே அடித்திருப்பார்களாயின், அவற்றைக் கூடாரவாயிலின் முன் ஆண்டவருக்கு அளிக்கும் பொருட்டும், சமாதானப் பலிகளாகச் செலுத்தும் படிக்கும் அதைக் குருவிடம் ஒப்புவிக்கக்கடவார்கள்.
லேவியராகமம் 17 : 6 (RCTA)
குரு சாட்சியக் கூடார வாயிலிலிருக்கிற ஆண்டவருடைய பலிபீடத்தின் மேல் இரத்தத்தை ஊற்றி, கொழுப்பை ஆண்டவருக்கு நறுமணமாக எரிக்கக்கடவார்.
லேவியராகமம் 17 : 7 (RCTA)
ஆகையால், அவர்கள் எந்தப் பேய்களோடு கள்ளமாய்த் திரிந்தார்களோ அவைகளுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக. இது அவர்களுக்கும் அவர்கள் வழித்தோன்றல்களுக்கும் நித்திய கட்டளையாயிருக்கும்.
லேவியராகமம் 17 : 8 (RCTA)
மேலும், நீ அவர்களை நோக்கி: இஸ்ராயேல் சபையாரிலும் உங்கள் நடுவே வாழ்கிற அந்நியருள்ளும், தகனப்பலி முதலியவைகளை இட்டு,
லேவியராகமம் 17 : 9 (RCTA)
அவற்றைச் சாட்சியக் கூடார வாயிலண்டை கொண்டுவராதிருப்பவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான்.
லேவியராகமம் 17 : 10 (RCTA)
இஸ்ராயேல் குடும்பத்தாரிலும் அவர்களிடையே வாழ்கிற அந்நியர்களிலும் எவனேனும் இரத்தத்தைக் குடித்திருந்தால், அவன் ஆன்மாவிற்கு எதிராக நாம் நமது முகத்தை நிலைப்படுத்தி, அவனைத் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகச் செய்வோம்.
லேவியராகமம் 17 : 11 (RCTA)
ஏனென்றால், உடலின் உயிர் இரத்தத்தில் அமைந்துள்ளது. இதை நாம் பலிபீடத்தின் மேல் உங்கள் ஆன்மாக்களுக்காகப் பாவப்பரிகாரம் செய்யும்படிக்கும், உங்கள் ஆன்மாவின் சுத்திகரத்திற்கு உதவும் படிக்கும் அல்லவோ உங்களுக்குத் தந்தருளினோம் ?
லேவியராகமம் 17 : 12 (RCTA)
அதனால், நாம் இஸ்ராயேல் மக்களை நோக்கி: உங்களுள்ளும் உங்களிடையே வாழ்கிற அந்நியர்களுள்ளும் ஒருவனும் இரத்தத்தைக் குடிக்க வேண்டாமென்று திருவுளம் பற்றினோம்.
லேவியராகமம் 17 : 13 (RCTA)
இஸ்ராயேல் மக்களிலும் உங்களிடையே வாழ்கிற அந்நியரிலும் எவனேனும் வேட்டையாடி அல்லது கண்ணிவைத்து, உண்ணத்தக்க ஒரு மிருகத்தையாவது பறவையையாவது பிடித்தால், அவன் அதன் இரத்தத்தைச் சிந்தி மண்ணைக்கொண்டு அதை மூடக்கடவான்.
லேவியராகமம் 17 : 14 (RCTA)
ஏனென்றால், உடலின் உயிர் இரத்தத்தில் உள்ளது. ஆதலால், நாம் இஸ்ராயேல் மக்களை நோக்கி: உடலின் உயிர் இரத்தத்தினுள் அமைந்திருக்கின்றது. எனவே, நீங்கள் எந்த உடலிலுமுள்ள இரத்தத்தைக் குடிக்க வேண்டாம்; அதைக் குடிப்பவன் கொலை செய்யப்படுவான் என்று சொன்னோம்.
லேவியராகமம் 17 : 15 (RCTA)
குடிமக்களாயினும் அந்நியர்களாயினும் தானாய்ச் செத்ததையாவது கொடிய மிருகத்தால் கொல்லப்பட்டதையாவது உண்பவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரிலே குளித்து மாலைவரை தீட்டுப்பட்டவனாய் இருப்பான். இதை அவன் பின்பற்றினால் சுத்தமாவான்.
லேவியராகமம் 17 : 16 (RCTA)
ஆனால், அவன் குளிக்காமலும் தன் ஆடைகளைத் தோய்க்காமலும் இருப்பானாயின், தன் அக்கிரமத்தைச் சுமந்துகொள்வான் என்று சொல்வாய் என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16