புலம்பல் 5 : 1 (RCTA)
ஜந்தாம் புலம்பல்: ஆண்டவரே, எங்களுக்கு நேரிட்டதை நினைவு கூரும், எங்களை நோக்கியருளும், எங்கள் நிந்தையைப் பார்த்தருளும்.
புலம்பல் 5 : 2 (RCTA)
எங்கள் உரிமைச் சொத்து அந்நியர் கையில் அகப்பட்டது; எங்கள் வீடுகள் அயலார் கைவசமாயின.
புலம்பல் 5 : 3 (RCTA)
நாங்கள் தந்தையில்லாத அனாதைகளானோம், எங்கள் தாய்மார் கைம்பெண்கள்போல் ஆயினர்.
புலம்பல் 5 : 4 (RCTA)
நாங்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கிறோம், விறகும் பணம் கொடுத்துத் தான் வாங்குகிறோம்.
புலம்பல் 5 : 5 (RCTA)
நுகத்தடி எங்கள் கழுத்தில் ஏறிற்று; பகைவர் எங்களை விரட்டுகின்றனர், தளர்ச்சியுற்று விழுந்தோம்; எங்களுக்கு இளைப்பாற்றி இல்லை.
புலம்பல் 5 : 6 (RCTA)
பசி தீர உணவு கேட்டு எகிப்துக்கும் அசீரியாவுக்கும் நாங்கள் கை நீட்டினோம்.
புலம்பல் 5 : 7 (RCTA)
பாவம் செய்த எங்கள் தந்தையர் மாய்ந்து போயினர், நாங்களோ அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறோம்.
புலம்பல் 5 : 8 (RCTA)
அடிமைகள் எங்களை ஆள்பவர்கள் ஆயினர்,அவர்கள் கையினின்று எங்களை மீட்பார் யாருமில்லை.
புலம்பல் 5 : 9 (RCTA)
உயிராபத்திலும் பாலை நிலத்தின் வாள் முனையிலும் நாங்கள் எங்கள் உணவைத் தேடிக்கொள்ளுகிறோம்.
புலம்பல் 5 : 10 (RCTA)
பஞ்சம் என்னும் புயலின் கொடுமைத் தீயால் எங்கள் மேனி கரி போலக் கறுத்துப் போயிற்று.
புலம்பல் 5 : 11 (RCTA)
சீயோனின் மங்கையரும் யூதாவின் கன்னிப்பெண்களும் அவமானத்திற்கு உள்ளாயினர்.
புலம்பல் 5 : 12 (RCTA)
பகைவர்கள் எங்கள் தலைவர்களைத் தூக்கிலிட்டனர், மூப்பர்களை அவர்கள் மதிக்கவே இல்லை.
புலம்பல் 5 : 13 (RCTA)
இளைஞர்கள் எந்திரக் கல்லை இழுத்து வருந்தினர். சிறுவர்கள் விறகுச் சுமை சுமந்து தள்ளாடினர்.
புலம்பல் 5 : 14 (RCTA)
மூப்பர் நீதிமன்றத்தை விட்டு அகன்று போயினர், இளைஞர்களும் இசைக் குழுவினின்று ஒழிந்தனர்.
புலம்பல் 5 : 15 (RCTA)
எங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சி ஒழிந்தது, எங்கள் இசைக் கூட்டம் இழவுக் கூட்டமாயிற்று.
புலம்பல் 5 : 16 (RCTA)
எங்கள் தலையினின்று மணிமுடி விழுந்து போயிற்று, பாவம் செய்த எங்களுக்கு ஐயோ கேடு!
புலம்பல் 5 : 17 (RCTA)
ஆதலால் எங்கள் இதயம் துயரத்திலாழ்ந்தது, எங்கள் கண்களும் இருண்டு போயின.
புலம்பல் 5 : 18 (RCTA)
ஏனெனில் சீயோன் மலை அழிவுற்றது, நரிகள் அங்கே நடமாடுகின்றன.
புலம்பல் 5 : 19 (RCTA)
நீரோ, ஆண்டவரே, என்றென்றும் நிலைத்திருப்பீர், உமது அரியணையும் தலைமுறை தலைமுறையாய் நிலைநிற்கும்.
புலம்பல் 5 : 20 (RCTA)
அவ்வாறிருக்க, எங்களை என்றென்றும் நீர் மறப்பானேன்? எங்களை நெடுநாளாய்க் கைவிட்டதேன்?
புலம்பல் 5 : 21 (RCTA)
ஆண்டவரே, எங்களை உம்மிடம் திருப்பியருளும், நாங்கள் திரும்புவோம்; முன்பிருந்தது போல் எங்கள் நாட்களைப் புதுப்பித்தருளும்;
புலம்பல் 5 : 22 (RCTA)
அல்லது எங்களைத் தொலைவில் புறக்கணித்துத் தள்ளிவிட்டீரோ? எங்கள்மேல் மிகுந்த கோபம் கொண்டீரோ?
❮
❯