புலம்பல் 2 : 1 (RCTA)
இரண்டாம் புலம்பல்: ஆலேஃப்: ஆண்டவர் தமது ஆத்திரத்தில், சீயோன் மகளை இருளால் மூடினாரே! இஸ்ராயேலின் மகிமையை வானினின்று தரைமட்டும் அவர் தாழ்த்தி விட்டார்; அவருக்குக் கோபம் வந்த போது தம் கால்மணையை முற்றிலும் மறந்து விட்டார்.
புலம்பல் 2 : 2 (RCTA)
பேத்: யாக்கோபின் வீடுகள் யாவற்றையும் ஆண்டவர் இரக்கமின்றி அழித்துவிட்டார்; யூதா என்னும் மகளின் கோட்டைகளைத் தம்முடைய கோபத்தில் தகர்த்து விட்டார்; அரசையும் அதை ஆள்வோரையும் வீழ்த்திச் சாபத்துக்குள்ளாக்கினார்.
புலம்பல் 2 : 3 (RCTA)
கீமேல்: தம்முடைய கோபத்தின் ஆத்திரத்தில் இஸ்ராயேலின் வலிமை யெல்லாம் முறித்து விட்டார்; பகைவன் எதிர்த்து வந்தபோது தம் வலக் கையைப் பின்னாலே வாங்கிக் கொண்டார்; சுற்றிலும் பிடித்தெரியும் பெருந்தீயை யாக்கோபின் நடுவிலே மூட்டிவிட்டார்;
புலம்பல் 2 : 4 (RCTA)
தாலேத்: எதிரியைப்போல வில்லை நாணேற்றினார், தம்முடைய வலக் கையைப் பலப்படுத்தினார்; பார்ப்பதற்கு அழகாயிருந்த அனைத்திற்கும் அவரே பகைவனாகி அழித்துவிட்டார்; சீயோன் மகளுடைய கூடாரத்தின் மேல் தம் கோபத்தைத் தீ மழைபோலக் கொட்டி விட்டார்.
புலம்பல் 2 : 5 (RCTA)
ஹே: ஆண்டவர் பகைவனைப் போல் ஆகி விட்டார், இஸ்ராயேலை வீழ்த்தி விட்டார்; அரண்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்தார், அதனுடைய கோட்டைகளைப் பாழாக்கினார்; யூதா என்னும் மகளுக்கு அழுகையும் ஒப்பாரியும் பெருகச் செய்தார்.
புலம்பல் 2 : 6 (RCTA)
வெள: தோட்டத்துக் குடிசை போலத் தன் கூடாரத்தைப் பாழாக்கினார், தம்முடைய இருப்பிடத்தைத் தகர்த்தெறிந்தார்; திருநாட்களும் ஒய்வு நாட்களும் சீயோனில் ஆண்டவர் மறக்கப்படச் செய்து விட்டார். அரசரையும் அர்ச்சகரையும் தம் கோபத்தின் ஆத்திரத்தில் புறக்கணித்துத் தள்ளி விட்டார்.
புலம்பல் 2 : 7 (RCTA)
ஸாயின்: ஆண்டவர் தம் பீடத்தின்மேல் வெறுப்புக்கொண்டார், இந்தப் பரிசுத்த இடமே வேண்டாமென்றார்; அவளுடைய அரண்மனை மதில்களையும் மாற்றானின் கைகளில் ஒப்புவித்தார்; திருவிழா நாள் போலப் பேரிரைச்சல் ஆண்டவரின் கோயிலில் எழுப்பினார்கள்.
புலம்பல் 2 : 8 (RCTA)
ஹேத்: சீயோன் மகளின் மதிற் சுவரை ஆண்டவர் தகர்த்திடத் தீர்மானித்தார். நூல் போட்டு எல்லைகளை வரையறுத்தார், அழிக்காமல் கையை மடக்க மாட்டார்; அரணும் அலங்கமும் புலம்பச் செய்தார், இரண்டும் ஒருமிக்கச் சரிந்து விழுகின்றன.
புலம்பல் 2 : 9 (RCTA)
தேத்: வாயில்கள் விழுந்து மண்ணில் அழுந்தின, தாழ்ப்பாள்களை அவர் முறித்தழித்தார்; அரசர்களும் தலைவர்களும் புறவினத்தாரிடை வாழ்கின்றனர், திருச்சட்டம் இல்லாமல் போயிற்று; சீயோனின் இறைவாக்கினர் காட்சியொன்றும் ஆண்டவரிடமிருந்து கண்டாரல்லர்.
புலம்பல் 2 : 10 (RCTA)
இயோத்: சீயோன் மகளின் முதியவர்கள் பேச்சற்றுத் தரையில் அமர்ந்துள்ளார்கள்; தலையினில் சாம்பலைத் தெளித்துக் கொண்டு இடையினில் கோணி உடுத்தியுள்ளனர்; யெருசலேமின் கன்னிப் பெண்களெல்லாம் தலைகளைத் தரையில் நட்டுக் கொண்டார்கள்.
புலம்பல் 2 : 11 (RCTA)
காஃப்: கண்ணீர் சிந்தி என் கண்கள் சோர்ந்து போயின, என்னுள்ளம் கலங்கித் துடிக்கின்றது; என் மக்களாம் மகளுடைய துயரங் கண்டு, சிறுவரும் குழந்தைகளும் தெருக்களிலே விழுவதைக் கண்டு உள்ளம் உருகிப் பாகாய்ப் பூமியில் ஒடிச் சிதைகின்றது.
புலம்பல் 2 : 12 (RCTA)
லாமேத்: கத்தியால் குத்துண்டோர் சாய்வது போல நகரத்தின் தெருக்களில் வீழும் போதும், தங்களின் தாய்மார் மடிதனிலே ஆவியைத் துறக்கச் சாயும் போதும், தாய்மாரை நோக்கி, "உணவெங்கே?" எனக் கேட்டுக் கதறினார்கள்.
புலம்பல் 2 : 13 (RCTA)
மேம்: யெருசலேம் மகளே! யாருக்கு நீ நிகரென்பேன்? உன்னை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? சீயோன் மகளே கன்னிப் பெண்ணே, உன்னை யாருக்குச் சமமாக்கித் தேற்றுவேன்? உன் அழிவு கடல் போலப் பெரிதாயிற்றே! உன்னைக் குணமாக்க வல்லவன் யார்?
புலம்பல் 2 : 14 (RCTA)
உன் தீர்க்கதரிசிகள் உனக்குப் பொய்களையும் மடைமகளையும் பார்த்துச் சொன்னார்கள்; அடிமைத்தனத்திற்கு உள்ளாகாதபடி உன் அக்கிரமத்தை உனக்கெடுத்துக் காட்டவில்லை; பொய்யான வாக்குகளும் கற்பனைகளும் உனக்குச் சொல்லி உன்னை வஞ்சித்தார்கள்.
புலம்பல் 2 : 15 (RCTA)
சாமேக்: இவ்வழியாய்க் கடந்து செல்லும் மக்களெல்லாம் உன்னைக் கண்டு கைகளைத் தட்டினார்கள்; யெருசலேம் மக்களைப் பார்த்துச் சீழ்க்கையடித்துத் தலையசைத்து, "நிறையழகு நகரிதுவோ? உலகுக்கெல்லாம் மகிழ்ச்சியாய் விளங்குமந்த நகரிதுவோ?" என்று அவர்கள் சொன்னார்கள்.
புலம்பல் 2 : 16 (RCTA)
பே: பகைவரெல்லாம் உனக்கெதிராய் வாய்திறந்து பற்களை நற நறவெனக் கடித்தார்கள்; "நாமதனை விழுங்கிடுவோம், நாம் காத்திருந்த நாளும் இதோ வந்திட்டது, அதனைக் கண்டடைந்தோம், கண்களால் பார்த்தோம்" என்றார்கள்; சீழ்க்கையடித்துப் பரிகாசம் செய்திட்டார்கள்.
புலம்பல் 2 : 17 (RCTA)
ஆயின்: ஆண்டவர் நினைத்ததை நிறைவேற்றி விட்டார், எச்சரித்ததைச் செயலிலே காட்டிவிட்டார், நெடுநாளாய்த் திட்டமிட்டிருந்தவாறே, அழித்திட்டார், இரக்கமே காட்டவில்லை; பகைவன் உன்னைப் பற்றி மகிழச் செய்தார், எதிரிகளின் வலிமையைப் பெருகச் செய்தார்.
புலம்பல் 2 : 18 (RCTA)
சாதே: சீயோன் மகளே, ஆண்டவரை நோக்கிப் புலம்பிக் கூக்குரலிடு; இரவும் பகலும் உன் கண்களினின்று வெள்ளம் போலக் கண்ணீர் வழிந்தோடட்டும்; ஓய்வென்பது உனக்கிருக்கக் கூடாது, கண்விழிகள் சும்மாயிருக்க விட்டிடாதே.
புலம்பல் 2 : 19 (RCTA)
கோப்: எழுந்திரு, இரவில் முதற் சாமத்தின் தொடக்கத்திலேயே குரலெழுப்பு; ஆண்டவரின் திருமுன் உன் இதயத்தை வழிந்தோடும் தண்ணீராய் வார்த்திடுக! தெரு தோறும் மூலையினில் பசியால் வாடி மயங்கிடும் உன் மக்களின் உயிருக்காக உன்னுடைய கைகளை மேலுயர்த்தி அவரிடத்தில் இப்பொழுது இறைஞ்சிடுவாய்.
புலம்பல் 2 : 20 (RCTA)
ரேஷ்: ஆண்டவரே, பார்த்தருளும், கடைக்கண்ணோக்கும்! யாருக்கிதைச் செய்தீரென எண்ணிப்பாரும்? தம் வயிற்றின் கனிகளை- கையிலேந்திய குழந்தைகளைப் பெற்றவளே பசியினால் உண்ணவேண்டுமா? ஆண்டவரின் கோயிலில் அர்சசகரும் இறைவாக்கினரும் கொல்லப்பட வேண்டுமா?
புலம்பல் 2 : 21 (RCTA)
ஷின்: இளைஞரும் முதியோரும் தெருக்களிலே தரையில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்; என்னுடைய கன்னிப் பெண்கள், வாலிபர்கள் வாளுக்கு இரையாகி மாய்ந்து விட்டார்; உம்முடைய கோபத்தின் நாளினிலே அவர்களை இரக்கமின்றிக் கொன்று போட்டீர்.
புலம்பல் 2 : 22 (RCTA)
தௌ: எப்பக்கமும் நடுக்கம் தரும் தன் எதிரிகளைத் திருவிழாக் கூட்டம்போல் கொண்டு வந்தீர்; ஆண்டவர் சினங்கொண்ட அந்த நாளில் ஒருவனும்- தப்பவில்லை, பிழைக்க வில்லை; அவர்களைச் சீராட்டி நான் வளர்த்தேன், பகைவனோ அவர்களைக் கொன்றெழித்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22